ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அங்குரார்ப்பண இண்டெர்நெஷனல் லீக் T20 (ILT20) தொடரில் களமிறங்கும் டெசர்ட் வைப்பர்ஸ் (Desert Vipers) அணிக்காக இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கழகமான மென்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமைத்துவத்தைக் கொண்டுள்ள Glazers குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அங்குரார்ப்பண இண்டெர்நெஷனல் லீக் T20 (ILT20) தொடரில் களமிறங்கும் டெசர்ட் வைப்பர்ஸ் அணியை வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வீரர்கள் ஏலத்துக்கு முன்னர் நேரடி ஒப்பந்தங்களை ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா 14 வெளிநாட்டு வீரர்களை அணிகளில் இணைத்துக்கொள்ள முடியும்.
- ஷானக, சமீரவுடன் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் பானுக!
- ஷார்ஜா வொரியர்ஸ் அணியில் விளையாடவுள்ள மொயீன், லிவிஸ், நபி
- நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள குமார, சீகுகே, அசலங்க!
இதன்படி, கல்ப் ஜயண்ட்ஸ், எம்.ஐ எமிரேட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், டுபாய் கெப்பிட்டல்ஸ் மற்றும் ஷார்ஜா வொரியர்ஸ் அணிகளுடன் தற்போது டெசர்ட் வைப்பர்ஸ் அணியும் தங்களுடைய வெளிநாட்டு வீரர்களை நேற்று (19) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் பெயரிடப்பட்டுள்ள 13 வெளிநாட்டு வீரர்களில் இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்கவுடன், இங்கிலாந்தின் சேம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டொம் கரண், பென் டக்கட் மற்றும் சகீப் மஹ்மூத், பென்னி ஹவ்ல், மேற்கிந்திய தீவுகளின் ஷெல்டன் கொட்ரல், ஷர்பைன் ரதர்போர்ட் மற்றும் நேபாளத்தின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சேன் ஆகிய முன்னணி வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, நியூசிலாந்தின் கொலின் மன்ரோ, நமீபியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ரூபன் ட்ரம்பில்மென் ஆகியோர் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அசாம் கான் டெசர்ட் வைப்பர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அங்குரார்ப்பண இண்டெர்நெஷனல் லீக் T20 தொடரில் விளையாடவுள்ள முதலாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, டெசர்ட் வைப்பர்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக அவுஸ்திரேலியாவின் டொம் மூடியும், தலைமைப் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் போஸ்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான டொம் மூடி, தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இயக்குனராகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
மறுபுறத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகளின் ஆலோசகராக பணியாற்றிய ஜேம்ஸ் போஸ்டர், IPL, பாகிஸ்தான் சுபர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பிக் பேஷ் லீக் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் ஆகிய தொடர்களில் பயிற்சியளராகவும் பணியாற்றியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அங்குரார்ப்பண ILT20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெசர்ட் வைப்பர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள்
வனிந்து ஹஸரங்க, சேம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டொம் கரண், பென் டக்கட், சகீப் மஹ்மூத், பென்னி ஹவ்ல், ஷெல்டன் கொட்ரல், ஷர்பைன் ரதர்போர்ட், சந்தீப் லமிச்சேன், கொலின் மன்ரோ, ரூபன் ட்ரம்பில்மென், அசாம் கான்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<