இலங்கை “ஏ” அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் “ஏ” அணியோடு 2 போட்டிகளை கொண்ட 4 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி 1ஆவது போட்டியை அபாரமாக வென்றாலும் 2ஆவது போட்டியில் மண்ணை கவ்வியது.
இந்த நிலையில் இலங்கை “ஏ” , பாகிஸ்தான் “ஏ” மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடும் முக்கோண ஒருநாள் தொடர் ஜூலை மாதம் 18ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை “ஏ” மற்றும் பாகிஸ்தான் “ஏ” அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன் இலங்கை “ஏ” அணி டெர்பிஷயர் அணியோடு பயிற்சிப் போட்டியில் நேற்று விளையாடியது. டெர்பி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக தாமதித்து அணிக்கு 43 ஓவர்களை கொண்ட போட்டியாக இடம் பெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை “ஏ” அணியின் தலைவர் அஷான் ப்ரியன்ஜன் முதலில் டெர்பிஷயர் அணியை துடுப்பாட்ட அழைப்பு விடுத்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெர்பிஷயர் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 43 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 281 ஓட்டங்களை குவித்தது. டெர்பிஷயர் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பென் ஸ்லெட்டர் அபாரமாக விளையாடி 118 பந்துகளில் 16 பவுண்டரி அடங்கலாக 124 ஓட்டங்களையும், தோமஸ் வூட் 44 ஓட்டங்களையும், டெர்பிஷயர் அணியின் தலைவர் வெஸ் தர்ஸ்டன் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை “ஏ” அணியின் பந்துவீச்சில் லக்ஷன் சந்தகன் மிக சிறப்பாக பந்துவீசி 9 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை தகர்க்க மற்ற பந்துவீச்சாளர்களால் அவருக்கு உதவி ஒத்தாசையாக பந்து வீசி விக்கட்டுகளை வீழ்த்த முடியவில்லை. லக்ஷன் சந்தகனை தவிர திஸர பெரேரா மற்றும் கசுன் ரஜித ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.
அத்தோடு இலங்கை “ஏ” ஒருநாள் அணியில் இணைந்த அக்குறணை அஸ்ஹர் கல்லூரியை சேர்ந்த முஹமத் டில்ஷாத் விக்கட்டுகள் எதையும் கைப்பற்றாமல் 4 ஓவர்கள் பந்துவீசி 36 ஓட்டங்களை வழங்கி இருந்தார்.
பின் 43 ஓவர்களில் 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை “ஏ” அணி 32.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 284 ஓட்டங்களை பெற்று 64 பந்துகள் மீதமிருக்க 7 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இலங்கை “ஏ” அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்காளான நிரோஷான் திக்வேல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் முதல் விக்கட்டுக்காக மிக சிறப்பாக விளையாடி 17 ஓவர்களில் 161 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தார்கள். அருமையாக ஆடிய நிரோஷான் திக்வேல்ல 47 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 67 ஓட்டங்களையும். அபாரமாக ஆடிய தனஞ்சய டி சில்வா 81 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடங்கலாக 119 ஓட்டங்களையும் பெற்றனர். இவர் தனது சதத்தை வெறுமனே 70 பந்துகளில் பெற்றார் என்பது முக்கிய அம்சமாகும்.
இவர்கள் இருவரையும் தவிர மத்திய வரிசையில் துடுப்பாட வந்த பானுக ராஜபக்ஷ 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடங்கலாக வேகமாக 48 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார்.டெர்பிஷயர் அணியின் பந்துவீச்சில் கொட்டன், கொர்க் மற்றும் தர்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்