பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு விளையாடப் பரிசீலித்து வருகிறார்.
தொடர்ந்து தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு நிர்வாகம் ஒதுக்கி வருவதால் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக ஜுனைத் கான் தெரிவித்தார். 71 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வரிசையில் இவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இருந்தாலும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக அவரால் தனது சிறப்பான பந்து வீச்சுக்குத் திரும்ப முடியவில்லை என்று அணித் தெரிவுக் குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் கூறியதையடுத்து ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆடும் முயற்சியில் கவனம் செலுத்துவது சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
ஆமிர் தொடர்பில் தப்பான எண்ணம் இல்லை – ப்ரோட்
சமீபத்திய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இவர் பெஷாவர் ஸால்மி அணிக்காக ஆடும் போது லாகூருக்கு எதிராக அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் விக்கட்டை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உடல் தகுதி குறித்து கூறிய ஜுனைத் கான், “நான் முழு உடற்தகுதியுடன் ஆடி வருகிறேன். வழக்கமான பயிற்சிகள் அனைத்திலும் ஈடுபட்டு வருகிறேன், இருந்தும் நான் ஏன் புறக்கணிக்கப்படுகிறேன் என்று தெரியவில்லை. இது எனது ஊக்கத்தை அழிப்பதாக உள்ளது, என்னைத் தொடர்ந்து புறக்கணிப்பதால் நான் மனமுடைந்துள்ளேன்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிராக என்னைத் தெரிவு செய்திருந்தால் இந்த ஸ்விங் நிலைமைகளில் நிச்சயம் நான் நன்றாக வீசியிருப்பேன். ஆனால் நான் அணியில் தெரிவு செய்யப்படவில்லை”என்றார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தினார், குறிப்பாக சென்னையில் அருமையாகப் பந்து வீசினார். மற்றபடி பெரும்பாலும் இலங்கை,ஐக்கிய அரபு நாடுகளின் ஆடுகளங்களில் அவர் பந்து வீசியிருக்கிறார்.
ஏற்கெனவே ஜுனைத் கான் லங்காஷயர், மிடில்செக்ஸ் அணிகளுக்காக ஆங்கில கவுண்டியில் ஆடியுள்ளார். இரு அணிகளுக்காகவும் சிறப்பாகவே ஆடியுள்ளார். எனவே தனது திறமை மதிக்கப்படும் இடத்துக்குச் செல்வதே மரியாதை என்று ஜுனைத் கான் உணர்கிறார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்