சர்வதேச கிரிக்கெட் வாரியம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடாத்தவிருந்த T20 உலகக் கிண்ணம் மற்றும் 2021 மகளிர் உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றை நடத்துவது தொடர்பிலான அறிவிப்பை எதிர்வரும் மாதம் வெளியிடவுள்ளது.
ஐ.சி.சி உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெற்ற மாநாட்டின் போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. T20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த நிலையில், கொவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவிவந்தது. எனினும், தற்போது அங்கு ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு வருவதுடன், கொவிட்-19 பாதிப்பும் குறைந்து வருகின்றது.
ஐசிசி அறிமுகப்படுத்திள்ள புதிய விதிமுறைகள்!
எனினும், இவ்வாறான சூழ்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் பிரமாண்டமான T20 உலகக் கிண்ணத்தை நடத்துவதில் அவுஸ்திரேலியா குறைந்தபட்ச நம்பிக்கையை மாத்திரமே கொண்டிருக்கின்றது. எனினும் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபர்ட்ஸ், கொவிட்-19 வைரஸ் காரணமாக T20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டால், அது மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஐ.சி.சி, குறிப்பிட்ட காலப்பகுதியில் இரண்டு தொடர்களையும் நடத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சியின் வருடாந்த மாநாட்டில் இந்த விடயம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஐ.சி.சி உயர்மட்ட குழு, நிதி மற்றும் வணிக விவகாரங்கள் தொடர்பில் மாற்று வழியொன்றை கண்டறிவதற்கான சந்திப்பொன்றை கடந்த மாதம் 22ம் திகதி மேற்கோண்டிருந்தது.
இதேவேளை, இந்த இரண்டு தொடர்கள் குறித்து கருத்து வெளியிட்ட ஐ.சி.சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனு சவ்னி,
“கொவிட்-19 வைரஸ் சர்வதேச அளவில் வேகமாக பரவிவருகின்றது. இந்தநிலையில், நாம் சரியான தருணத்துக்காக காத்திருந்து கிரிக்கெட்டை பாதுகாக்கும் முகமாக சிறந்த முடிவொன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், உடல்நலம் மற்றும் நல்வாழ்வு என்பற்கு முன்னுரிமை வழங்கப்படும். இவற்றுக்கு அடுத்தப்படியாகதான் ஏனைய விடயங்கள் பார்க்கப்படும்.
நாம் இந்த தொடர்களை நடத்துவதற்கான முடிவை அறிவிப்பதற்கு ஒரு வாய்ப்பினை மாத்திரமே எதிர்பார்க்கிறோம். குறித்த முடிவு சரியானதாக இருக்க வேண்டும் என அங்கத்தவர்களிடம் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். அதேபோன்று ஒளிபரப்பாளர்கள், பங்காளர்கள், அரசாங்கங்கள் மற்றும் வீரர்களிடத்தில் கலந்துரையாடி, சிறந்த முடிவொன்றை எதிர்பார்க்க காத்திருக்கிறோம்” என்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<