இந்த ஆண்டுக்கான (2023) ஆசியக் கிண்ணக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவது தொடர்பிலான இறுதி தீர்மானம் மார்ச் மாதம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> உஸ்மான் கவாஜாவிற்கு இந்திய வீசா பெறுவதில் சிக்கல்
பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி பயணம் செய்யாது என கடந்த ஒக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ஜெய் சாஹ் குறிப்பிட்டதோடு ஆசியக் கிண்ணத் தொடர் வேறு நாட்டில் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஒருநாள் போட்டிகளாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரினை பாகிஸ்தானில் நடாத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றில் ஜெய் சாஹ்வினை கருத்து, பாகிஸ்தானில் ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறுவதுவதனை சந்தேகமாக்கியிருந்ததுடன் அது தொடர்பிலான தீர்மானம் இவ்வாரம் பஹ்ரைனில் நடைபெற்ற கூட்டத்தின் போது எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பஹ்ரைனில் நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று எடுக்கப்படாத நிலையிலையே பாகிஸ்தானில் ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவது பற்றிய இறுதி தீர்மானம் மார்ச் மாதத்தில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை ஜெய் சாஹ்வின் அறிவிப்பினை அடுத்து பாகிஸ்தானும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு வராது என அறிவிப்பு ஒன்றை முன்னர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையே தொடர்ச்சியாக அரசியல் குளறுபடிகள் நிலவி வரும் நிலையில், அதன் தாக்கமே இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரிலும் வெளிப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இரு நாடுகளும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதனை நிறுத்தி இருப்பதோடு, ஐ.சி.சி. இன் தொடர் மற்றும் ஆசியக் கிண்ணத் தொடர்களில் மாத்திரமே இரு அணிகளும் எதிர் தரப்பு போட்டிகளில் ஆடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> சர்வதேச T20 லீக்குகளில் அதிரடி காட்டும் குசல், மதீஷ
இதேவேளை பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கேற்க ஏனைய ஆசிய நாடுகள் தங்களது நாட்டினுடைய அரசாங்க அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டதாக ESPNcricinfo நிறுவனம் செய்தி வெளியிட்ட போதும் அவ்வாறான வேண்டுகோள்கள் எதுவும் கூட்டத்தின் போது விடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தெரிவித்துள்ளதோடு இலங்கை, பங்களாதேஷ் போன்ற ஏனைய ஆசிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை கடந்த காலங்களில் மேற்கொண்டதனையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல்கள் நடாத்தப்பட்டதில் இருந்து அந்த நாட்டில் கிரிக்கெட் அணிகள் சுற்றுப் பயணம் மேற்கொள்வதனை நிறுத்தி இருந்தன. எனினும் நிலைமைகள் தற்போது சுமூகமாகி அங்கே இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் கிரிக்கெட் சுற்றுப் பயணங்களில் பங்கேற்றிருக்கும் நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்வதற்கு மறுப்புத் தெரிவிப்பது அந்த நாட்டின் கிரிக்கெட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<