தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் இவர் ஓய்வுபெறவுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
>> 7 அறிமுக வீரர்களுடன் ஆஸி. டெஸ்ட்டில் களமிறங்கும் மேற்கிந்திய தீவுகள்
டீன் எல்கர் கடந்த 12 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதுடன், அதிகமான டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
இவர் மொத்தமாக 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், 13 சதங்கள் மற்றும் 23 அரைச்சதங்கள் அடங்கலாக 5146 ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம் தென்னாபிரிக்க அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தன்னுடைய ஓய்வு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டீன் எல்கர் “அனைத்து நல்ல விடயங்களும் முடிவுக்கு வரும். இந்திய தொடர் எனது கடைசி தொடராக அமையும். நம்முடைய அழகான விளையாட்டிலிருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளேன். கிரிக்கெட் எனக்கு அதிகமான விடயங்களை கொடுத்துள்ளது. எனது முதல் டெஸ்ட் ஓட்டத்தை கேப் டவுனில் பெற்றேன். அதேபோன்று என்னுடைய கடைசி டெஸ்ட் ஓட்டத்தையும் கேப் டவுனில் பெறவுள்ளேன்” என்றார்.
சுற்றுலா இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<