நேற்று மாலை ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி கிண்ணத்துக்கான, தீர்மானம் மிக்க இறுதிப் போட்டியில், முழுநேர அதிஉக்கிர போராட்டத்துக்கு பின்னர், பெனால்டி உதை மூலம் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 5-4 என்ற கோல்கள் அடிப்படையில் நீர் கொழும்பு, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை தோற்கடித்து வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்களால் நிரம்பி வழிந்த ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வலிமைமிக்க மற்றும் சம பலத்துடன் கூடிய இவ்விரு அணிகளும் உக்கிர வேகத்துடனும், விறுவிறுப்பாகவும் இந்த ஜனாதிபதி சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன. முதல் பாதி நேரத்தின் போது இரு அணிகளினதும் நேர்த்தியான பின்கள தடுப்பாட்ட வீரர்களால் கோல் அடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை. ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி முன்கள நட்சத்திர வீரர் மொஹமட் ரிஷான் தனது வேகத்தின் மூலம் பல தடவைகள் தொடர்ந்து அச்சுறுத்திய போதும், அத்தாக்குதல் அனைத்தையும் மாரிஸ் ஸ்டெல்லா களத்தடுப்பு வீரர்களால் நுணுக்கமான முறையில் முறியடிக்கப்பட்டன.
முதல் பாதி: ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 0 – 0 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
முதல் பாதிக்குப் பின் கிடைக்கப்பெற்ற சில நேர ஓய்வின் பின் மீண்டும் இரண்டாம் பாதிக்காக களத்துக்கு விரைந்த இவ்விரு அணிகளும் ஒன்றுக்கொன்று கோல் வாய்ப்புக்களை வழங்காமல் மிகுந்த அவதானத்துடன் விளையாடியதை காணக்கூடியதாக இருந்தது. அதே நேரம் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி கிடைக்கபெற்ற வாய்ப்புகளை கோலாக மாற்றிக்கொள்ள செய்த முயற்சிகளை மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி நுணுக்கமான முறையில் முறியடித்தது. அதனையடுத்து தீர்க்கமான இந்த போட்டி கோல்களின்றி சமநிலையில் முடிவுற்றதால் சம்பியன் அணியை தேர்ந்தெடுக்கும் முகமாக பெனால்டி உதைகள் மூலம் பலப்பரீட்சை நடாத்தப்பட்டது.
முழு நேரம் : ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 0 – 0 மாரிஸ் ஸ்டெல்லா, நீர்கொழும்பு
பெனால்டி உதைகள் மூலம் பலப்பரீட்சை நடாத்திய இவ்விரு அணிகளில் சிறப்பாக செயற்பட்ட ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 5 – 4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பெனால்டி: ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி 5 – 4 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
ThePapare.com இன் போட்டிக்கான சிறந்த வீரர்: மொஹமட் ரிஷான் (ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி)
thepapare.com இற்கு கருத்து தெரிவித்த ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி பயிற்சியாளர் முஹம்மத் இம்ரான் ”இப்போட்டியை வழங்கப்பட்டிருந்த 90 நிமிட நேரத்துக்குள் வெற்றிபெற எதிர் பார்த்தோம். எனினும், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரயின் வலிமை மிக்க பின்கள தடுப்பாட்ட வீரர்களை ஊடறுத்து செல்வது கடினமாக இருந்தது. குறித்த நேரத்துக்குள் தாக்குதல் நடத்தி கோல்களை பெற்றுக் கொள்ளவே அணிக்கு வலியுறுத்தி இருந்தேன். எனினும் அவர்கள் களத்துக்கு சென்ற பின்னர் களத்தடுப்பிலேயே கூடிய அவதானத்தை செலுத்தியதை புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது. அத்துடன், குறித்த நேரத்துக்குள் அல்லது பெனால்டி உதைகளின் மூலம் நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. என்னுடைய அணியின் திறமையை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
விருதுகள்
பார்வையாளர்கள் மத்தியில் விருதுகளை வழங்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அதே நேரம் வழங்கப்பட்ட அனைத்து விருதுகளையும் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – மொஹமட் ரிஷான் (ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி)
போட்டித் தொடரின் ஆட்டநாயகன் – மொஹமட் சஜித் (ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி)
போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளர் – மகேந்திரன் தினேஷ் (ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி)
அதிக கோல்கள் அடித்தவர் – W.I.M. பெர்ணாண்டோ (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)
மூன்றாவது இடத்துக்கான போட்டி
கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி கால்பந்து கிண்ணத்துக்கான மூன்றாம் இடத்துக்கு மோதிக்கொண்ட கந்தான, டி மெசனொட் கல்லூரி மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் 6-2 என்ற கோல் அடிப்டையில் டி மெசனொட் கல்லூரி வெற்றியீட்டியது.
மாரிஸ் ஸ்டெல்லாவுடனான விறுவிறுப்பான அரை இறுதிப் போட்டியில் 2-1 கோல் கணக்கில் டி மெசனொட் கல்லூரி தோல்வியுற்ற நிலையிலும், அதேநேரம் எதிரணியான புத்தளம் ஸாஹிரா கல்லூரி, வலிமைமிக்க ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியுடனான அரையிறுதிப் போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வியுற்று மூன்றாம் இடத்துக்கான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.
எவ்வாறெனினும், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மூன்றாவது நிமிடத்திலேயே ஜே. எம். சாஹிர் முதல் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து மந்தமாக டி மெசனொட் கல்லூரி விளையாடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சாஹிர் 12வது நிமிடத்தில் மற்றுமொரு கோலை தனதாக்கினார்.
அதனை தொடர்ந்து விழிப்புற்ற டி மெசனொட் கல்லூரி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. முன்னாள் அணித் தலைவர் ரஞ்சு சில்வா முதலாவது கோலையும் அதனை அடுத்து 25வது நிமிடத்தில் L.H.A. தேஷான் மற்றுமொரு கோலையும் பெற்றுக்கொண்டார்.
முதல் பாதி நேரம்: டி மெசனொட் கல்லூரி, கந்தான 3-2 ஸாஹிரா கல்லூரி, புத்தளம்
மேலும் சிறப்பாக விளையாடிய டி மெசனொட் கல்லூரி 55, 59 மற்றும் 71ஆவது நிமிடங்களில் மேலும் மூன்று கோல்களை போட்டு வெற்றியை உறுதி செய்து கொண்டது. ஸாஹிரா கல்லூரி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதிலும் ஆட்டத்தின் முடிவு துயரத்தில் முடிவுற்றது.
அரையிறுதி போட்டியில் தோல்வியுற்று ஏமாற்றம் அடைந்திருந்த கந்தான டி மெசனொட் கல்லூரி இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது இடத்தை தன் வசமாக்கிக்கொண்டது.
முழு நேரம் : டி மெசனொட் கல்லூரி, கந்தான 6-2 ஸாஹிரா கல்லூரி, புத்தளம்
ThePapare.com இன் போட்டிக்கான சிறந்த வீரர்: ரஞ்சு சில்வா (டி மெசனொட் கல்லூரி)
கோல் போட்டவர்கள்
டி மெசனொட் கல்லூரி, கந்தான – ரஞ்சு சில்வா 15′ மற்றும் 37′, L.H.A. தேஷான் 25′, டீன் ஜயா 55′ மற்றும் 59′, பிரமுதித குணசேகர 71′
ஸாஹிரா கல்லூரி, புத்தளம் – J.M. சாஹிர் 3′ & 12′