அப் கண்ட்ரி லயன்ஸ் அணியுடனான போட்டியை போராடி வென்ற சுபர்சன்

374

பேருவளை சுபர்சன் மற்றும் நாவலப்பிடிய அப் கண்ட்ரி லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் இன்றைய தினம் (28) நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கால்பந்து சுற்றுப் போட்டியில், சுபர்சன் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றியை சுவீகரீத்துக் கொண்டது.

நாவலப்பிடிய ஜயதிலக்க அரங்கில் மழைக்கு மத்தியில் இப்போட்டி ஆரம்பமானது.

கிரிஸ்டல் பெலஸ் அணியுடனான மலையக சமரிற்கான போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருந்த அப் கண்ட்ரி லயன்ஸ் அணியை, இன்றைய (28) போட்டியில் எதிர் கொண்ட சுபர்சன் அணிக்கு இப்போட்டியானது சவாலானதொரு போட்டியாகவே அமைந்தது.

>> மலையக சமரில் கிறிஸ்டல் பெலஸை வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்

போட்டியை ஆரம்பித்த சுபர்சன் அணி முதல் பந்து பரிமாற்றத்தின் போதே எதிரணியின் கோல் எல்லையிருந்து கோலை பெற முயற்சித்தது. எனினும் கோல்காப்பாளர் பந்தை சிறந்த முறையில் தடுத்தார்.

சுபர்சன் அணிக்கு போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பின் போது அபீஸ் ஓலய்மீ உள்ளனுப்பிய பந்தை சுபர்சன் அணியின் மத்தியகள வீரரான கோட்வீன் ஓஸாஹோன் தனது தலையால் முட்டி கோலாக்கினார்.

போட்டியை சமப்படுத்தும் வாய்ப்பை 10 ஆவது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி பெற்ற போதும், அதனை சிறந்த முறையில் நிறைவு செய்வதில் அவ்வணி தோல்வியுற்றது.

இதன்  போது சுபர்சன் அணியின் கோல் எல்லையிலிருந்து கோல் காப்பாளர் தடுத்தாடிய பந்தை கோலுக்கு அருகாமையில் பெற்ற முன்கள வீரர் பைஸல், கோலை நோக்கி பந்தை உதைந்த போதும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

19 ஆவது நிமிடத்தில் பெனால்டிக்கான வாய்ப்பு அப் கண்ட்ரி லயன்ஸ் அணிக்கு மறுக்கப்பட்டதை தொடர்ந்து, 23 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு மிக அருகாமையில் வழங்கப்பட்ட ப்ரீ கீக் வாய்ப்பபையும் அவ்வணி வீரர்கள் சிறப்பாக நிறைவு செய்ய தவறினர்.

மிக நீண்ட நேரமாக எதிரணி வீரர்களின் ஆட்டத்தை தடுத்தாடிய சுபர்சன் அணி, அபீஸ் ஒலய்மீயின் தனித்துவமான திறமை மூலம் 33 ஆவது நிமிடத்தில் மேலுமொரு வாய்ப்பை பெற்றது.

எனினும் இவ்வாய்ப்பின் போது பின்கள வீரர்களை அபீஸ் ஒலய்மீ சிறப்பாக தாண்டியபோதும், கோல் காப்பாளரை தாண்டி பந்தை கோலினுள் செலுத்த அவரால் முடியவில்லை.

கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த தவறாத சுபர்சன் அணி இரண்டாவது கோலை போட்டியின் 44 ஆவது நிமிடத்தில் பெற்றது.

கோல் எல்லையிலிருந்து வழங்கப்பட்ட பந்தை பெற்ற முன்கள வீரர் அபீஸ் ஒலய்மீ, பின்களத்தில் தனிமையாக எதிர்த்தாடிய பின்கள வீரரை இலகுவாக தாண்டி பந்தை கோல் கம்பத்தின் இடது மூலையால் உட்செலுத்தினார்.

முதல் பாதி: அப் கண்ட்ரி லயன்ஸ் 0 – 2 சுபர்சன் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியை போலவே இரண்டாம் பாதியிலும் அதிக வாய்ப்புக்களை பெற்ற அப் கண்ட்ரி லயன்ஸ் அணி, அவற்றை நிறைவு செய்வதில் எதிரணியிடம் தோல்வி கண்டனர்.

இரண்டாம் பாதியின் முதல் 10 நிமிடங்களுக்குள் பெனால்டி எல்லையில் கிடைத்த மிகச் சிறந்த இரு வாய்ப்புக்கள் மூலமும் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி கோலைப் பெற தவறியது.

>> புட்சால், கடற்கரை கால்பந்தாட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

தொடர்ந்து போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் முன்கள வீரர் பெர்னான்டோ 3 பின்கள வீரர்களினுடாக தரை வழியாக வழங்கிய பந்தை எவன்ஸ் பெனால்டி எல்லையிலிருந்து பெற்றார். எனினும் முதல் முறையில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்தாட தவறியதில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணிக்கான அவ்வாய்ப்பும் வீணானது.

எனினும் போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் வலது எல்லை பெனால்டி பெட்டியின் சற்று தூரத்தில் மத்திய களத்திலிருந்து கிடைக்கப் பெற்ற ப்ரீ கீக் வாய்ப்பினை பயன்படுத்தி, மாற்று வீரராக களமிறங்கிய தீனேஸ் அபேரத்ன மூலம் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி முதல் கோலை பெற்றது.

எதிரணிக்கு, சுபர்சன் அணியின் பெனால்டி எல்லைக்கு அருகில் கிடைக்கப் பெற்ற ப்ரீ கீக் வாய்ப்பு வீணடிக்கப்பட்டதை தொடர்ந்து, சுபர்சன் அணி பெற்ற பந்தின் மூலம் ஆரம்பமான கவுன்டர் ஆட்டத்தின் போது அபீஸ் ஒலய்மீ  வேகமாக எடுத்துச் சென்ற பந்தை, பின்கள வீரரான குவாமே தடுத்து நிறுத்தினார்.

போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி மீண்டும் பெனால்டிக்கான வாய்பபை கோரிய போதும், நடுவர் வழங்க மறுக்கவே மேலதிக நேரத்துடன் போட்டியை நடுவர் நிறைவு செய்தார்.

இதன் மூலம் 1 கோல் வித்தியாசத்தில் சுபர்சன் அணி போட்டியில் போராடி வெற்றி பெற்றது.

முழு நேரம்: அப் கண்ட்ரி லயன்ஸ் 1 – 2 சுபர்சன்

கோல் பெற்றவர்கள்

அப் கண்ட்ரி லயன்ஸ் – தீனேஸ் அபேரத்ன 81′

சுபர்சன் – கோட்வீன் ஓஸாஹோன் 7′ அபீஸ் ஓலய்மீ 44′       

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<