தற்பொழுது இடம்பெற்று வரும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அனுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகம், ராணுவப்படை விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் இந்தத் தொடரில் தமது மோசமான தோல்வியான 7-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்ந்துள்ளது.
ஏற்கனவே இடம்பெற்று முடிந்த சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின்படி, சம்பியன் கிண்ணத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையில், இந்த இரு அணியினரும் தமது ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
களனிய விளையாட்டு மைதானத்தில் போட்டி ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே ராணுவப்படை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கோலுக்கான முதல் முயற்சி சொலிட் அணியின் இளம் கோல் காப்பாளர் மொஹமட் இஷான் மூலம் தடுக்கப்பட்டது.
ஜப்பான் உட்பட 3 நாடுகளுடன் மோதவுள்ள இலங்கை 16 வயதின்கீழ் அணி
அதனைத் தொடர்ந்து சொலிட் அணிக்கு கிடைத்த கோணர் உதையின் மூலம் அவர்கள் எடுத்த முயற்சி சிறப்பாக அமையவில்லை.
தொடர்ந்து ராணுவப்படை அணி வீரர் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை இஸ்ஸதீன் எடுத்துச் சென்று கோலுக்குள் செலுத்தினார். எனினும் நடுவரால் அது ஓப் சைட் என்று சைகை காண்பிக்கப்பட்டது.
பின்னர், 13ஆவது நிமிடத்தில் ராணுவப்படை வீரர்கள் பலர் தமக்கிடையே பந்தைப் பரிமாற்றிக்கொண்டு இறுதியாக அணித் தலைவர் மதுஷான் டி சில்வாவிற்கு வழங்க, அவர் அதனை கோலாக்கினார்.
அதனைத் தொடர்ந்தும் திவன்க சந்திரசேகர, மதுஷான் டி சில்வா, பாசில், இஸ்ஸதீன் மற்றும் அப்புஹாமி ஆகியோரால் தொடர்ச்சியாக ராணுவப்படை அணியினருக்கு அடுத்தடுத்து கொல்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவற்றின் மூலம் அவர்கள் சிறந்த பயனைப் பெறவில்லை.
குறிப்பாக போட்டியில் ஆரம்பித்திலேயே சொலிட் அணியின் கோல் காப்பாளர் இஷான் சிறந்த முறையில் எதிர் தரப்பின் தாக்குதல்களை தடுத்து அணிக்கு பங்காற்றினார்.
இவ்வாறான ஒரு நிலையில் ராணுவப்படை அணியின் தலைவர் மதுஷான் டி சில்வா பந்தை உள்ளனுப்பிய போது சொலிட் அணியின் மோசமான பின்களத் தடுப்பினால் தன்னிடம் வந்தை பந்தை திவன்க சந்திரசேகர இலகுவாக உதைந்து கோலாக்கினார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும், 28ஆவது நிமிடத்தில் தனக்கு இலகுவாக வந்த பந்தை, கோல் கம்பங்களுக்கு அருகில் இருந்த இஸ்ஸதீன் தலையால் முட்டி கோலாக்கினார்.
அதன் பின்னர் 41ஆவது மற்றும் 44ஆவது நிமிடங்களில் இஸ்ஸதீன் தொடர்ந்து இரண்டு கொல்களைப் பெற்று தனது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்து கொண்டார்.
எனினும் மறுமுனையில் சொலிட் அணியின் பந்துப் பரிமாற்றம் மற்றும் விளையாட்டில் வீரர்களின் வேகம் என்பன மிக மோசமாகவே இருந்தது. எனவே, முதல் பாதியே சொலிட் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது.
முதல் பாதி : ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 05 – 00 சொலிட் விளையாட்டுக் கழகம்
முதல் பாதியைப் போன்றே இரண்டாவது பாதி ஆரம்பமாகி ஒரு சில நிமிடங்களில் அணித் தலைவர் மதுஷான் தனக்கான இரண்டாவதும், அணியின் ஆறவதுமான கோலைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இஸ்ஸதீன் மற்றும் மதுஷான் ஆகியோருக்கு தொடர்ந்து கோல்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும், அவர்களால் சிறந்த நிறைவுகள் மேற்கொள்ளப்படவில்லை.
தொடர்ச்சியான வாய்ப்புக்கள் வந்துகொண்டிருந்த நிலையில் பாசில் தனக்கு கிடைத்த பந்தை சற்று முன் கொண்டுசென்று வேகமாக உதைய, அதனையும் இஷான் தடுத்தார்.
கடற்படை கழகத்தை மூழ்கடித்த கொழும்பு கால்பந்து கழகம்
இன்றைய போட்டியில் சொலிட் அணியின் மத்திய களம் மற்றும் முன்கள வீரர்களின் விளையாட்டு மிகவும் மோசமாக இருந்தது. எனினும் பின்கள வீரர்களும், கோல் காப்பாளரும் தங்களால் முடியுமான அளவு முயற்சிகளை மேற்கொண்டு ராணுவப்படையின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து வந்தனர்.
எனினும், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் சொலிட் வீரர் அபுமேர, சக வீரர்கள் எவரும் துணைக்கு இல்லாத நிலையில் பந்தை தனியே எடுத்துச் சென்று, நீண்ட நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்து, பல தடைகளைத் தாண்டி இறுதியாக உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு வெளியால் சென்றது.
இந்தப் போட்டியிலேயே சொலிட் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கோலுக்கான சிறந்த ஒரு முயற்சியாக இதை மாத்திரமே குறிப்பிடலாம்.
முழு நேரம் : ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 07 – 00 சொலிட் விளையாட்டுக் கழகம்
Thepapare.com இன் ஆட்ட நாயகன்: மதுஷான் டி சில்வா (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)
கோல் பெற்றவர்கள்
ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மதுஷான் டி சில்வா 13’ & 47, திவன்க சந்திரசேகர 25’, மொஹமட் இஸ்ஸதீன் 28’ & 41’ & 44’, தரிந்து தனுஷ்க 89’