வென்னப்புவ நிவ் யங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது பாதியில் வீரர்கள் காண்பித்த அபார ஆட்டத்தின் காரணமாக 2-1 என்ற கோல்கள் கணக்கில் ரினௌன் அணி வெற்றி கொண்டுள்ளது. இதன் மூலம், டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரின் சுப்பர் 8 சுற்றின் தமது முதல் வெற்றியை ரினௌன் அணி பெற்றுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற சுப்பர் 8 சுற்றின் முதல் வாரப் போட்டியில் ரினௌன் அணி புளு ஸ்டார் அணியிடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்திருந்த அதேவேளை, நிவ் யங்ஸ் அணி கொழும்பு கால்பந்து அணியுடனான போட்டியை கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் முடித்திருந்தது.
சொலிடிடம் குழு நிலையில் பெற்ற தோல்விக்கு பதில் கொடுத்த கொழும்பு கழகம்
இந்நிலையில் இன்று களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் நான்கு மாத இடைவெளியின் பின்னர் மீண்டும் மோதின.
போட்டி ஆரம்பமாகிய முதல் சில நிமிடங்களிலேயே இரு அணிகளுக்கும் கோல் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவற்றின்மூலம் இரு அணியினரும் சிறந்த பயனைப் பெறவில்லை. போட்டியில் 5-3-2 என்ற முறையில் விளையாடிய ரினௌன் அணியினரின் முன்கள வீரர்களின் பந்துப் பரிமாறல்கள் வழமை போன்றே ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தது.
எனினும் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ரினௌன் அணி வீரர்களின் பந்துப் பரிமாறல் மோசமாக இந்தது. ரினௌன் அணி வீரர் தமது சக வீரர் ஒருவருக்கு மோசமான முறையில் வழங்கிய பரிமாறலின்போது பந்தைப் பெற்ற எதிரணியின் பிரியன்கர, சிறந்த முறையில் நீண்ட தூர உதையை பெற்று தனது அணிகான முதல் கோலைப் பெற்றார்.
பின்னர் போட்டியின் 15ஆவது நிமிடத்திலும் நிவ் யங்ஸ் அணி வீரர்களின் இரண்டாவது கோல் முயற்சியைத் தடுக்க முயற்சித்தபோது, ரினௌன் அணியின் கோல் காப்பாளர் உஸ்மான் உபாதைக்குள்ளாகியமையினால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, அவருக்குப் பதிலாக இரண்டாவது கோல் காப்பாளர் தனுஷ்க ராஜபக்ஷ மைதானத்தினுள் நுழைந்தார்.
பின்னர் போட்டியின் 24ஆவது நிமிடத்தில் ரினௌன் அணி வீரர் பசால் மற்றும் நிவ் யங்ஸ் அணியின் திலன்க பிரியதர்சன ஆகியோர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டமையினால் இருவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 28ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கு முதல் கொலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக பெனால்டி வாய்பொன்று கிடைத்தது. அந்த உதையை ஜொப் மைகல் பெற்றாலும், எதிரணி கோல் காப்பாளர் கவீஷ் சிறந்த முறையில் அதனைத் தடுத்தார்.
முதல் பாதியில் 40 நிமிடங்கள் கடந்த பின்னர் ரினௌன் வீரர்கள் தமது ஆட்டத்தில் மாற்றம் காண்பித்து, நீண்ட நேரம் தமது கட்டுப்பாட்டில் பந்தை வைத்து, சிறந்த பரிமாறல்களையும் மேற்கொண்டனர். எனினும் அதன் இறுதியில் கோலுக்காக ஜொப் மைகல் மேற்கொண்ட முயற்சி சிறந்த விதத்தில் இல்லாமல் இருந்தமையினால் முதல் பாதி ஆட்டம் நிவ் யங்சின் ஒரே கோலுடன் நிறைவடைந்தது.
முதல் பாதி : ரினௌன் விளையாட்டுக் கழகம் 00 – 01 நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்
பின்னர், இரண்டாவது பாதி ஆரம்பித்தது முதல் ரினௌன் அணியின் ஆட்டம், முதல் பாதியை விட மிகவும் மாற்றமாக இருந்தது. அதன்போது அபாரமாக ஆடிய அவ்வணி வீரர்கள் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே எதிரணியின் கோல் கம்பங்களுக்குள் பந்தை பல தடவைகள் கொண்டு சென்று கோல் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஓரிரு வாய்ப்புக்கள் வீண் போன நிலையில், 52 ஆவது நிமிடத்தில் ஜொப் மைகல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி நேரடியாக கோல்களுக்குள் பந்தை உதைய, அது ரினௌன் அணியின் போட்டியை சமப்படுத்தும் கோலாக இருந்தது.
எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக முடிவடைந்த புளு ஸ்டார், விமானப்படை இடையிலான போட்டி
எனினும், இரண்டாவது பாதியில் கோல் காப்பாளர் கவீஷ் மேற்கொண்ட பல தடுப்புகள் ரினௌன் அணியின் மேலும் பல கோல் வாய்ப்புகளுக்கு கடும் தடையாகவே இருந்தது.
அதனைத் தொடர்ந்து, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் நிவ் யங்ஸ் அணி வீரர் அவிஷ்க பெரேரா மூலம் ஒரு ஒவ்ன் கோல் போக, அது ரினௌன் அணிக்கான இரண்டாவது கொலாக இருந்தது.
அதனைத் தொடர்ந்தும், ரினௌன் அணி மூன்றாவது கோலைப் பெறுவதற்கான சிறந்த பல முயற்சிகளை மேற்கொண்டது. மறு முனையில் நிவ் யங்ஸ் அணியின் ஆட்டத்திலும் ஒரு வேகம் காணப்பட்டது.
போட்டியின் 75ஆவது நிமிடத்தில் ரினௌன் வீரர் பசாலுக்கு கோல் ஒன்றுக்கான அழகான வாய்ப்பு கிடைத்தது. கோல் காப்பாளர் கவீஷ் முன்னே ஓடி வர, அவரைத் தாண்டி பசால் பந்தை உதைந்தார். அதன்போது கோல் கம்பங்களை நோக்கி சென்றுகொண்டிருந்த பந்தை நிஷான்த பெரேரா திசை திருப்பி உதைந்து ரினௌனின் 3ஆவது கோல் வாய்ப்பை தடுத்தார்.
அதன் பின்னர் இறுதி நேரம் வரையில் இரு அணியின் பக்கமும் பந்து பரிமாறப்பட்டுக்கொண்டே இருந்தது. எனினும் இரு தரப்பினரும் மேற்கொண்ட கோல் முயற்சிகள் சிறந்த பயனை கொடுக்கவில்லை.
முழு நேரம் : ரினௌன் விளையாட்டுக் கழகம் 02 – 01 நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்
ThePapre.com இன் ஆட்ட நாயகன்: சுபுன் கவிஷ் (நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்)
வெற்றியின் பின்னர் thepapare.com இடம் கருத்து தெரிவித்த ரினௌன் அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லா, ”வீரர்கள் விளையாட்டில் இருந்து விடுபட்டிருந்த நிலையில், நான்கு மாதங்களின் பின்னர் விளையாடினர். நாம் எமது வழமையான விளையாட்டிற்கு வருவதற்கு சற்று நேரம் எடுத்தது. அது போன்றே வெப்பமான காலநிலையும் எமது விளையாட்டிற்கு தாக்கம் செலுத்தியது. எனினும் இரண்டாவது பாதியில் வழமைக்கு திரும்பினோம். நாம் மேற்கொண்ட திட்டங்கள் எமது வெற்றிக்கு உதவி புரிந்தன” என்றார்.
பின்னர் கருத்து தெரிவித்த நிவ் யங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரோஹித பெர்னான்டோ, ”நாம் அனுபவம் உள்ள நான்கு முக்கிய வீரர்கள் இன்றியே இன்றைய போட்டியில் விளையாடினோம். அதுவே எமது தோல்விக்கு காரணம். மேலும் ஒவ்ன் கோல் நாம் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.
எமது முதல் பாதி ஆட்டம் சிறந்ததாக இருந்தது. இரண்டாவது கோலுக்கான பல வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. எனினும் எதிரணியின் இரண்டாவது பாதி ஆட்டம் அவர்களது வெற்றிக்கு காரணமாக இருந்தது” என்றார்.
கோல் பெற்றவர்கள்
ரினௌன் விளையாட்டுக் கழகம் – ஜொப் மைகல் 52’, அவிஷ்க பெரேரா 65’ (OG)
நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம் – ஹசித பிரியதர்ஷன 15’