டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 இன் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரத்திற்கான முதலாவது போட்டியில் களுத்துறை புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகங்கள் போட்டியிட்டன. களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணியினரும் எந்தவித கோல்களையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
சுப்பர் 8 சுற்றின் முதலாவது வாரப் போட்டியில் புளு ஸ்டார் அணி, பிரபல ரினௌன் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டது. அதேபோன்று, விமானப்படை அணி தமது முதல் போட்டியில் பலம்மிக்க ராணுப்படை அணியை 2-2 என்ற கோல்கள் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் நிறைவு செய்தது.
சுப்பர் 8 சுற்றின் முதல் வாரப் போட்டிகள் நிறைவடைந்து நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பமான இன்றைய போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இரு அணிகளும் தம் வழமையான சிறந்த விளையாட்டை வெளிக்காட்ட முடியாது திணறின.
முதல் பாதியில் இரு அணிகளுக்கும் பல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றாலும் சிறந்த கோல் வாய்ப்பு ஒன்றும் ஏற்படுத்தப்படவில்லை. நட்சத்திர வீரர் கவிந்து இஷான் வழமை போல தனது வேகத்தால் புளு ஸ்டார் பின்கள வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தாலும், அவரால் வழங்கப்பட்ட வாய்ப்புக்களை அணியின் ஏனைய வீரர்களால் சரிவரப் பயன்படுத்த முடியாமல் போனது.
மறுமுனையில் 5-3-2 என்ற முறையில் விளையாடிய விமானப்படை அணி எதிரணியின் கோல் வாய்ப்புக்களை லாவகமாகத் தடுத்தது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு முறை சிறந்த கோல் வாய்ப்பு கிடைக்கப் பெற்றன.
முதலில் நட்சத்திர வீரர் ஜிபோலா அடித்த சிறந்த உதையை விமானப்படை கோல் காப்பாளர் ருவன் அருனசிறி தடுத்தார். மறு முனையில் துமிந்த, தனக்கு கிடைத்த இலவச ஹெடர் வாய்ப்பை கோட்டை விட்டார்.
எனவே, முதல் பாதியை இரு அணிகளும் கோல் இன்றிய நிலையில் முடித்துக்கொண்டன.
முதல் பாதி: புளு ஸ்டார் 00 – 00 விமானப்படை
முதலாவது பாதியைப் போன்றே இரண்டாவது பாதியிலும் பெரிய அளவிலான விறுவிறுப்பு காணப்படவில்லை. இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதை விட்டு கோல்களை தடுப்பதில் கரிசனை காட்டின.
கிடைக்கப்பெற்ற ஓரிரு ப்ரி கிக் வாய்ப்புகளையும் விமானப்படை அணி சரியாக பயன்படுத்தவில்லை. குறிப்பாக கவிது இஷான் விமானப்படைக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தியும் அவ்வணியால் அந்த வாய்ப்புக்களை கோல்களாக்க முடியாமல் போனது.
புளு ஸ்டார் அணி பெரிதாக முன்னிலைக்கு செல்லாமல் களத்தடுப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தது. போட்டியின் இறுதி நிமிடங்களில் இரு அணி வீரர்களும் முட்டி மோதிய நிலையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதனால் சில வீரர்களுக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டன.
இறுதி சில நிமிடங்களில் விமானப்படை அணி சற்று சிறப்பாக விளையாடி, கோலொன்றை பெற்றுக்கொள்ள தீவிரமாக முயற்சித்தது. எனினும் அவ்வணி வீரர்களின் வாய்ப்புக்களை புளு ஸ்டார் அணியின் அனுபவ வீரர் ஒபயமி தவிடுபொடியாக்கினார்.
இறுதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்காமல் போக, போட்டி எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் முடிந்தது.
முழு நேரம்: புளு ஸ்டார் 00 – 00 விமானப்படை
ThePapare.com இன் சிறப்பாட்டக்காரர்: ஹர்ஷ பெர்னாண்டோ (விமானப்படை விளையாட்டுக் கழகம்)
போட்டி முடிவடைந்ததன் பின்பு கடற்படை அணியின் பயிற்றுவிப்பாளர் சம்பத் பெரேரா thepapare.com இடம் பிரித்யேகமாகக் கருத்துத்தெரிவிக்கையில்,
“அணியின் முன்னிலை வீரர்களான திமுத் மற்றும் டில்ஷான் இன்று விளையாடவில்லை. எனினும் நாம் சிறப்பாக விளையாடினோம். வாய்ப்புகளை தவற விட்டதால் வெற்றி பெற முடியவில்லை. வெற்றிபெற முடியாமல்போனது வருத்தமளிக்கிறது” என்றார்.
புளு ஸ்டார் அணியின் பயிற்றுவிப்பாளர் கருணாரத்ன குறிப்பிடுகையில், “சென்ற போட்டியான ரினௌனுடனான போட்டியில்விளையாடிய பல வீரர்கள் இப்போட்டியில் விளையாடவில்லை. எனினும் இப்போட்டியில் இதனை விட சிறப்பாக விளையாடிஇருக்கலாம்” என்றார்.