டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 10ஆவது வாரப் போட்டியாக இடம்பெற்ற ரினௌன் மற்றும் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஆட்டத்தில் இறுதி நிமிடத்தில் பெறப்பட்ட ஒவ்ன் கோலினால் ரினௌன் அணி 3-2 என வெற்றி பெற்றுள்ளது.
இந்த பருவகாலப் போட்டியில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத ரினௌன் அணி, இம்முறை பெரிதும் பின்னடைவை சந்தித்துள்ள FA கிண்ண நடப்புச் சம்பியன் இராணுவப்படை அணியை களனிய கால்பந்து மைதானத்தில் எதிர்கொண்டது.
முன்னணி வீரர்கள் பலர் இல்லாத நிலையில் விளையாடிய இராணுவத் தரப்பில் வீரர்களின் நிலைகளில் (Position) பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
10 வீரர்களுடன் விளையாடிய சொலிட்: கிறிஸ்டல் பெலஸிற்கு மூன்றாவது வெற்றி
டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் மொறகஸ்முல்ல…
ஆட்டத்தின் 15 நிமிடங்கள் கடந்த நிலையில், இராணுவப்படைக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை சதுரங்க மதுஷான் பெற்றார். அவர் எதிரணியின் மத்திய பகுதியில் இருந்து தடுப்பு வீரர்களைத் தாண்டி உருட்டி அடித்த பந்தை ரினௌன் கோல் காப்பாளர் ராசிக் ரிஷாட் பாய்ந்து பற்றிக்கொண்டார்.
ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து மொஹமட் ரிஸ்னி அணியின் சக வீரர் ஆசாதுக்கு பந்தை வழங்க, அவர் அதனை முன்களத்தில் இருந்த ஜொப் மைக்கலுக்கு வழங்கினார். மைக்கல் பந்தை எதிர் தரப்பின் பெனால்டி எல்லை வரை எடுத்துச் சென்று, இராணுவப்படையின் பின்கள வீரரை எமாற்றி, பந்தைக் கடத்தி கோலை நோக்கி உதைந்தார். கோல் காப்பாளர் லுத்பி இல்லாத திசையினூடாக பந்து கம்பங்களுக்குள் புக, ரினௌன் கோல் கணக்கை ஆரம்பித்தது.
மீண்டும் சில நிமிடங்களில், தனிமையில் இருந்த ஜொப் மைக்கல் தன்னிடம் வந்த பந்தை வேகமாக கோலை நோக்கி உதைந்தார். பந்து கோலாக மாறிய போதும், ஜொப் மைக்கல் ஓப் சைட் இருந்ததாக நடுவர் சைகை காண்பித்தார்.
அதன் பின்னர் ஆட்டம் இரு தரப்பினருக்கும் சரிசமமாக சென்றுகொண்டிருக்கையில், ரினௌன் கோல் பரப்பில் இருந்த இஸ்ஸடீனுக்கு வந்த பந்தை, அதே வேகத்தில் அவர் எதிரணியின் கோல் நோக்கி உதைந்தார். மிகவும் வேகமாக கோலுக்குள் செல்லும் விதத்தில் வந்த பந்தை கோல் காப்பாளர் ரிஷாட் தனது இடது கையை காண்பித்து பந்தை திசை மாற்றினார்.
ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் உயர்ந்து தன்னிடம் வந்த பந்தை இராணுவப்படை கோல் காப்பாளர் லுத்பி பிடிக்கும்பொழுது பந்து அவரது கைகளில் இருந்து நழுவியது. இதன்போது அவ்விடத்தில் இருந்த ரினௌன் வீரர் ஆசாத் இலகுவாக பந்தை கோலுக்குள் செலுத்தி அணியை 2 கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.
முதல் பாதி நிறைவடையும் தருவாயில், ரிஸ்னி மத்திய களத்தில் இருந்து மிக வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்தை லுத்பி பாய்ந்து பிடித்தார்.
முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 2 – 0 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் ஆசாத் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்தை முஜீப் பெற்று, கோல் காப்பாளரின் தடையையும் தாண்டி பந்தை கோலுக்குள் செலுத்தினார். எனினும், நடுவர் முஜீப் ஓப் சைட் இருந்ததாகத் தெரிவித்தார்.
கொழும்பு – கிரிஸ்டல் பெலஸ் இடையிலான போட்டி இரண்டாம் பாதியில் இடைநிறுத்தம்
58ஆவது நிமிடத்தில் வலதுபுற கோணர் திசையில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை ரினௌன் வீரர் ட்வாரே மொஹமட் வேகமாக கோல் நோக்கி உதைந்தபோது, லுத்பி பந்தை தடுத்தார்.
அடுத்த 5 நிமிடங்கள் கடந்த நிலையில், இராணுவப்படைக்கு அணிக்கு மாற்று வீரராக உள்நுழைந்த கசுன் பிரதீப், ரினௌன் அணித் தலைவர் மொஹமட் ரிப்னாஸை முறையற்ற விதத்தில் தாக்கியமைக்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதற்கு அடுத்த நிமிடம் 10 வீரர்களுடன் விளையாடிய படைத் தரப்பினருக்கு கிடைத்த ப்ரீ கிக்கை அணித் தலைவர் மதுஷான் டி சில்வா பெற்றார். அவர் உதைந்த பந்தை ரிஷாட் கைகளால் பலமாகத் தட்டி எதிர் திசைக்கு செலுத்தினார்.
நில நிமிடங்களில் ஜொப் மைக்கள் எதிரணியின் கோலுக்கு அருகாமை வரை பந்தை எடுத்துச் சென்று, மற்றொரு வீரருக்கு பந்தை வழங்காமல் தனியே கோல் முயற்சி மேற்கொள்ளும்பொழுது லுத்பி வேகமாக வந்து பந்தைப் பற்றிக்கொண்டார்.
ரினௌன் கோல் பகுதிக்கு அண்மையில் இருந்த மொஹமட் இஸ்ஸடீன், சக வீரர் ஒருவரின் பந்துப் பரிமாற்றத்தின்போது தனது கால்களுக்கு வந்த பந்தை கோலுக்குள் செலுத்தி இராணுவப்படை அணிக்கான முதல் கோலை 71ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் மேலும் உட்சாகமடைந்த இராணுவப்படை தமது அடுத்த கோலுக்காக முயற்சியை மேற்கொள்ள, ரினௌன் வீரர்கள் அதற்கு இடமளிக்காமல் தமது மூன்றாவது கோலுக்கான முயற்சியை மேற்கொண்டனர்.
10 வீரர்களுடன் ஆடிய இராணுவப்படைக்கான இரண்டாவது கோலை, பொதுவாக பின்கள வீரராக செயற்படுபவரும் இன்றைய போட்டியில் மத்திய களத்தில் விளையாடியவருமான தேசிய அணி வீரர் அசிகுர் ரஹ்மான் போட்டியின் மேலதிக நேரத்தில் பெற்றுக்கொடுத்தார்.
அதன் பின்னர் எதிரணியின் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற அவர், பல தடுப்பு வீரர்களைத் தாண்டி கோல் கம்பங்களுக்கு நேரே பந்தை எடுத்து வந்து தன்னைத் தனிமைப்படுத்தி மிக வேகமாக கோல் நோக்கி பந்தை உதைய, அது கோலுக்குள் சரணடைந்தது.
இலங்கை இளம் அணிக்கு மற்றுமொரு தோல்வி
இதன் காரணமாக ஆட்டத்தின் இறுதிக் கட்டமான எஞ்சிய 3 நிமிடங்களும் மிகவும் சூடு பிடித்தது.
ஆட்டம் முடிவுறும் நிமிடத்தில் இராணுவப்படை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரினௌன் அணியின் பல வீரர்களுக்கு இடையிலான பந்துப் பரிமாற்றத்தின் பின்னர், அணித் தலைவர் ரிப்னாஸ் பந்தை இராணுவப்படையின் கோல் திசைக்குள் அனுப்பினார். இதன்போது பந்தை தடுக்க வந்த மதுஷான் டி சில்வாவின் உடம்பில் பட்ட பந்து ஒவ்ன் கோலாக மாற, போட்டியில் ரினௌன் அணி வெற்றியைக் கொண்டாடியது.
முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 3 – 2 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
ரினௌன் விளையாட்டுக் கழகம் – ஜொப் மைக்கல் 23’, மொஹமட் ஆசாத் 42’, மதுஷான் டி சில்வா (OG) 90+5’
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் இஸ்ஸடீன் 71’, அசிகுர் ரகுமான் 90+2’மஞ்சள் அட்டைகள்
ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிப்னாஸ் 90+5’சிவப்பு அட்டைகள்
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – கசுன் பிரதீப் 63’
இன்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளின் முடிவுகள்
கொழும்பு கால்பந்து கழகம் 5 – 0 புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்
நிவ் யங்ஸ் கால்பந்து கழகம் 4 – 0 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம் 3 – 0 நீர்கொழும்பு இளைஞர் விளையாட்டுக் கழகம்
பெலிகன்ஸ் மற்றும் இலங்கை கடற்படை அணிகளுக்கு இடையில் குருனாகலையில் இடம்பெறவிருந்த போட்டி சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது.a