டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரின் மூன்றாவது வாரத்திற்கான இறுதிப் போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகம் பாரிய போராட்டத்தின் பின்னர் 3-2 என்ற கோல்கள் கணக்கில் மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியுள்ளது.
இத்தொடரில் இதற்கு முன்னர் இடம்பெற்ற போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகம் 4-1 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணியை வெற்றி கொண்டிருந்தது. எனினும் மொறகஸ்முல்ல அணியினர் மாத்தறை சிடி அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்திருந்தனர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மொறகஸ்முல்ல ஜனக ரனவக்க விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
விமானப்படை, சௌண்டர்ஸ் கழகங்களுக்கு இடையிலான போட்டி சமநிலையில்
களனி கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற DCL 17 தொடரின் சௌண்டர்ஸ் விளையாட்டுக்..
முதல் 10 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாக, ரினௌன் அணியின் ட்ரவோரே மொஹமட் மற்றும் மொஹமட் ரிப்னாஸ் ஆகியோர் கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.
14ஆவது நிமிடம் ரினௌன் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை மொஹமட் ரிப்னாஸ் பெற்றார். அவர் உதைந்த பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.
ஆட்டத்தின் 22ஆவது நிமிடம் மொறகஸ்முல்ல அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஷாமர குனசேகர பெற்றார். அவர் உதைந்த பந்து ரினெளன் வீரர்களால் தடுக்கப்பட்டு மீண்டும் சிரங்கவுக்கு செல்ல, அவர் கோல் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சி பயன் கொடுக்கவில்லை.
மொறகஸ்முல்ல பின்கள வீரரால் மொஹமட் ஆசாத் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, 26ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக்கை ரிப்னாஸ் பெற்றார். எனினும் அவர் உதைந்த பந்து பம்பங்களுக்கு மேலால் சென்றது.
இரண்டு நிமிடங்களில் ரிப்னாஸ் மற்றும் ஜொப் மைக்கல் ஆகியோருக்கிடையில் சிறந்த பந்துப் பறிமாற்றங்கள் நிகழ்ந்ததன் பின்னர், ஜொப் மைக்கல் எதிரணியின் பின்கள வீரர்களைத் தாண்டி பந்தை அடித்து ரினௌன் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
31ஆவது நிமிடம் கிடைத்த ப்ரீ கிக்கினைப் பெற்ற ஜொப் மைகல், கோலை இலக்கு வைத்து உதைந்த பந்து கம்பங்களைவிட சற்று உயர்ந்து சென்றது.
மீண்டும் 35ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ட்ரவோரே மொஹமட் உதைந்தார். இதன்போது அவர் நேரடியாக பந்தை கோலுக்குள் செலுத்தி, ரினௌன் அணியை 2 கோல்களால் முன்னிலைப்படுத்தியதுடன், ரினௌன் அணிக்கான தனது கன்னி கோலையும் பதிவு செய்தார்.
43ஆவது நிமிடத்தில் ரினெளன் பின்கள வீரர்கள் விட்ட தவறினால் பந்தைப் பெற்ற மொறகஸ்முல்ல இளம் வீரர் டிலான் மதுசங்க அதனை சிறந்த முறையில் புபுது சகுலதவுக்கு வழங்கினார். எனினும் பந்தை வெளியே அடித்ததன் மூலம் கோல் பெறுவதற்கு இருந்த இலகுவான வாய்ப்பை புபுது தவறவிட்டார்.
முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 2 – 0 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் புபுது சகுலத மிக வேகமாக உதைந்த பந்தை ரினௌன் கோல் காப்பாளர் மொஹமட் உஸ்மான் சிறந்த முறையில் பிடித்துக்கொண்டார்.
50ஆவது நிமிடத்தில் ரொஷான் பியவன்ச வலது புற கோணர் திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்து ரினௌன் பின்கள வீரர் திமுது பிரிதர்ஷனவால் தடுக்கப்பட்டது. மீண்டும் மொறகஸ்முல்ல வீரர் சாமர குனசேகரவுக்கு பந்து செல்ல, அவர் அதனை கோலுக்குள் செலுத்தி தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
ரினௌன் – சௌண்டர்ஸ் இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவு
டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் முதல் வாரத்தில் இடம்பெற்ற ரினௌன் விளையாட்டுக்..
மேலும் நான்கு நிமிடங்களில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை சாமர குனசேகர கோல் நோக்கி உதைய, உஸ்மான் அதனைத் தட்டித் தடுத்தார்.
போட்டியின் 60ஆவது நிமிடம் ரினௌன் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் சக வீரரால் உள்ளனுப்பப்பட்ட பந்தை, புபுது மிக வேகமாக வந்து கோலுக்குள் செலுத்தினார். இதன் மூலம் மொறகஸ்முல்ல தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தது.
மேலும் 6 நிமிடங்களில் மற்றாரு ப்ரீ கிக் வாய்ப்பின்போது சாமர குனசேகர மிக நீண்ட தூரத்திற்கு உதைந்த பந்தை உஸ்மான் தடுத்தார்.
அதற்கு அடுத்த நிமிடம் எதிரணியின் கோல் எல்லைக்குள் இருந்து ஜொப் மைக்கல், மொஹமட் முஜீபிற்கு வழங்கிய பந்தை அவர் அங்கே தனியே இருந்த ரிப்னாசிற்கு வழங்கினார். கோலுக்கு மிக அண்மையில் இருந்து அடுத்த கோலைப் பெறுவதற்கு இருந்த வாய்ப்பை வெளியே அடித்து வீணடித்தார் ரிப்னாஸ்.
70 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி எல்லையை அண்மித்து கிடைத்த ப்ரீ கிக்கை மொறகஸ்முல்ல பின்கள வீரர் சம்பத் டயஸ் பெற்று உதைந்த போது பந்து கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.
எனினும் போட்டியின் போக்கை மாற்றும் வகையில் ஆட்டத்தின் 77ஆவது ஜொப் மைக்கல் ரினௌன் அணிக்கான மூன்றாவது கோலைப் பெற்றார். மத்திய களத்தில் இருந்து நீண்ட தூரப் பந்துப் பரிமாற்றமொன்று மைக்கலுக்கு வழங்கப்பட்டது. இதன்போது எதிரணியின் இரண்டு வீரர்கள் அவரைத் தடுக்க வந்த நிலையில், அதற்கு மத்தியில் அவர் கோலை நோக்கி பந்தை உருட்டி அடித்தார். பந்து கோல் காப்பாளர் தரிந்து ருக்ஷானைக் கடந்து செல்கையில் அதனைப் பிடிப்பதற்கு ருக்ஷான் மிக வேகமாக கோல் நோக்கிச் சென்றாலும் பந்து அதை விட வேகமாக கோலுக்குள் சென்றது.
83ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய பகுதியில் கிடைத்த ப்ரீ கிக் உதையை சாமர குனசேகர பெற்றார். அவர் உதைந்த பந்து ரினௌன் பின்கள வீரர்களால் வெளியேற்றப்பட்டது.
அதன் பின்னர் பந்து தொடர்ச்சியாக ரினௌன் வீரர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. போட்டியின் நிறைவு வரை அவர்கள் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டவாறே இருந்தனர். எனினும், அவற்றின்மூலம் கோல் ஒன்றையேனும் அவர்களால் பெற முடியாமல் போனது.
முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 3 – 2 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – டிலான் மதுசங்க (மொறகஸ்முல்ல யுனைடட் வி.க)
கோல் பெற்றவர்கள்
ரினௌன் விளையாட்டுக் கழகம் – ஜொப் மைக்கல் 28’ & 77’, ட்ரவோரே மொஹமட் 35’
மொறகஸ்முல்ல யுனைடட் வி.க – சாமர குனசேகர 50’, புபுது சகுலத 60’
மஞ்சள் அட்டை
ரினௌன் விளையாட்டுக் கழகம் – O. பிரன்சிஸ் 63’
மொறகஸ்முல்ல யுனைடட் வி.க – S.சமன்த 26’