டயலொக் கால்பந்து சுற்றுப் போட்டியில் தொடராக வெற்றிகளைப் பதிவு செய்து கொண்டுள்ள சுபர் சன் அணிக்கும், இளம் வீரர்களைக் கொண்ட கிரிஸ்டல் பெலஸ் அணிக்குமிடையே நடைபெற்ற போட்டியில், சுபர் சன் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
கம்பளை வீகுலுவத்தை கால்பந்து அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் கிரிஸ்டல் பெலஸ் அணி முதல் 20 ஆவது நிமிடத்தின் போது பெற்ற சிவப்பு அட்டை காரணமாக 10 வீரர்களுடனே விளையாடியது. எது எவ்வாறாயினும் சுபர் சன் அணியின் நிதானமான ஆட்டத்தின் மூலம் போட்டியில் அதிகமாக சுபர் சன் அணியின் ஆதிக்கமே காணப்பட்டது.
போட்டியை ஆரம்பித்த சுபர் சன் அணி தனது முதல் வாய்ப்பை, போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட கோணர் வாய்ப்பின் போது, அபீஸ் ஒலய்மீ தனது தலையால் முட்டி கோலாக்க எடுத்த முயற்சியின் போது பெற்றது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் எதிரணிக்கு சவால் விடுத்த சுபர் சன் அணி, போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் வலது பக்க மூலையிலிருந்து சிவன்க மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தின் மூலம் முதல் கோலை பெற்றது. சிவன்க உள்ளனுப்பிய பந்தை பாய்ந்து தட்டிய கோல் காப்பாளர், சுதாகரித்து மீண்டெழுவதற்குள் தன்னையடைந்த பந்தை கபீன்த அதுராலீய வேகமாக உதைந்து கோலாக்கினார்.
விமானப்படை, கிரிஸ்டல் பெலஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில்
போட்டியின் 17 ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பெலஸ் அணி தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி போட்டியை சமநிலைப்படுத்தியது. முஹமட் ரவ்ஸான் மூலம் மத்தியகளத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற அய்ஸக் அபா, இடது பக்க மூலை வழியாக பந்தை கோலினுள் உட்செலுத்தி போட்டியை சமநிலைப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து போட்டியின் 19 ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பெலஸ் அணியின் கோல் காப்பாளர் எதிரணி வீரர் கொண்டு சென்ற பந்தை முறையற்ற விதத்தில் பெனால்டி எல்லைக்கருகில் தடுத்தாடியதற்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எதிரணியின் பலவீன தன்மையை அறிந்து நிதானமாக ஆடிய சுபர் சன் அணி, போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின், இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற அபீஸ் ஒலய்மீ வேகமாக கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது எதிரணி வீரர்களால் தடுத்தாடப்பட்டது.
எதிரணிக்கு சுபர் சன் அணி சவால் விடுத்த வண்ணமிருந்த வேளையில், கிரிஸ்டல் பெலஸ் அணியின் வீரரான முஹமட் ரவ்ஸான் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் மத்தியகளத்திலிருந்து எதிர்பாராதவிதமாக தன்னையடைந்த பந்தை வேகமாக கோலை நோக்கி உதைந்தார். என்றாலும் வேகமாக செயற்பட்ட கோல் காப்பாளர் வலதுபக்க மூலையால் கோலினுள் உட்செல்ல முயற்சித்த பந்தை சிறப்பாக பாய்ந்து கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் முதல் பாதியை நடுவர் நிறைவு செய்தார்.
முதல் பாதி: சுபர் சன் விளையாட்டுக் கழகம் 1 – 1 கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்
இரண்டாம் பாதி ஆரம்பித்து 8 நிமிடங்கள் கடந்த நிலையில், ஈ.பீ சன்ன மூலம் இடது பக்கத்திலிருந்து பெறப்பட்ட ப்ரீ கிக் வாய்ப்பை தடுத்தாட முயன்ற கிரிஸ்டல் பெலஸ் அணியின், ஜீன் பிரான்ஸிஸ்கோ மூலம் பெறப்பட்ட ஒவ்ன் கோலினால் (Own Goal) 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சுபர் சன் அணி போட்டியில் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் எதிரணியின் பின்களத்திலிருந்து கோல் காப்பாளரிற்கு வழங்கப்பட்ட பந்தை பெற்ற ஈ.பீ சன்ன, கோல் காப்பாளரையும் தாண்டி இடது பக்க மூலையிலிருந்து கோலை நோக்கி பந்தை உதைந்தார். எனினும் இம்முயற்சியின் மூலம் சுபர் சன் அணிக்கு எவ்வித கோலையும் பெற முடியவில்லை.
எனினும் 71 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையில் பெற்ற பந்தை கவ்பானே போன்ஸீ சிறப்பாக நிறுத்தி பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளரையும் தாண்டி சுபர் சன் அணிக்காக மூன்றாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
ஜொப் மைக்கலின் ஹட்ரிக் கோலினால் போட்டியை வென்ற ரினௌன்
10 வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த கிரிஸ்டல் பெலஸ் அணி போட்டியின் 75 ஆவது நிமிடத்தில் கோலிற்கான முயற்சியை மேற்கொண்டது. ஜீன் பிரான்ஸிஸ்கோ மத்தியகளத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பிய பந்தை பெற்ற அய்ஸக் அபா எதிரணியின் பின்கள வீரர்களின் சவால்களையும் தாண்டி பந்தை கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.
போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் சுபர் சன் அணி தனது இறுதி முயற்சியை மேற்கொண்டது. இம்முயற்சியின் போது முஹமட் பர்ஹான் உள்ளனுப்பிய பந்தை, எதிரணி வீரர்களின் எந்த வித சவாலுமின்றி ஈ.பீ சன்ன பாய்ந்து தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் அதனை கோலாக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்துடன் சில நிமிடங்களில் நடுவர் போட்டியை நிறைவு செய்தார். சுபர் சன் பெற்ற மேலதிக 2 கோல்களால் தனது சொந்த மைதானத்தில் 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் கிரிஸ்டல் பெலஸ் அணி தோல்வியுற்றது.
முழு நேரம்: சுபர் சன் விளையாட்டுக் கழகம் 3 – 1 கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்
கோல் பெற்றவர்கள்
சுபர் சன் விளையாட்டுக் கழகம் – கபீன்த அதுரலீய 10’, ஜீன் பிரான்ஸிஸ்கோ (ஓவ்ன் கோல்) 53’, கவ்பானே போன்ஸீ 71’
கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – அய்ஸக் அபா 19’மஞ்சள் அட்டை
சுபர் சன் விளையாட்டுக் கழகம் – அபீஸ் ஒலய்மீ 50’
கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – அய்ஸக் அபா 73’சிவப்பு அட்டை
கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – முஹமட் அக்ரம் 22’
இன்று இடம்பெற்ற மேலும் சில போட்டி முடிவுகள்
ரினௌன் விளையாட்டுக் கழகம் 4 – 0 புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்
கடற்படை விளையாட்டுக் கழகம் 3 – 2 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்
மாத்தறை சிடி விளையாட்டுக் கழகம் 1 – 0 நிவ் யங்ஸ் கால்பந்துக் கழகம்