டயலொக் லீக்கை அபார வெற்றியுடன் முடித்துக்கொண்ட கொழும்பு

891

சுகததாச அரங்கில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் 17 ஆவது மற்றும் இறுதி வாரத்திற்கான போட்டியில் சீ ஹோக்ஸுக்கு எதிராக இரண்டாவது பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய கொழும்பு கால்பந்து கழகம் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.  

சம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புக் கொண்ட அணிகளாக கடைசி இரண்டு வாரங்களும் நீடித்த இந்த இரு அணிகளும் தனது கடைசி போட்டிக்கு முந்திய ஆட்டத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று (13) நடைபெற்ற இந்தப் போட்டி பரபரப்பற்ற ஆட்டமாக மாறியிருந்தது.

DCL கிண்ண வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட புளூ ஸ்டார், டிபெண்டர்ஸ்

எனினும் இந்த இரு அணிகளில் ஒன்று டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் இரண்டாவது இடத்தை பெற வாய்ப்பு இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அந்தப் பெருமையை பெறுவதற்கு இரு அணிகளும் முயற்சித்தன.

ஆரம்பத்திலேயே போட்டியில் ஆத்திக்கம் செலுத்துவதற்கு இரு அணிகளும் முயன்றன. எனினும் உற்சாகம் குறைந்த நிலையில் ஆரம்பம் மந்தமாகவே இருந்தது.

எனினும் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்த கொழும்பு அணி சிறப்பாக ஆடியபோதும் கோல் வாய்ப்புகளை பெறத் தவறியது.

போட்டியின் முதல் பாதியில் மொமாஸ் யெப்போ கொழும்பு அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்த நிலையில் அவர் சீ ஹோக்ஸ் பின்கள வீரரை விடவும் சற்று முன்னால் சென்றிருந்ததால் நடுவரால் ஓப்-சைட் வழங்கப்பட்டது.

முதல் பாதி: சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 கொழும்பு கால்பந்து கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் கோல்காப்பாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் சில வாய்ப்புகளை மாத்திரமே பெற்ற நிலையில் ஆட்டம் அதே வேகத்திலேயே நீடித்தது. கோல் முயற்சியை ஆரம்பிக்க மொஹமட் அன்ஸீர் உதைத்த பந்து அகல உயரப் பறந்தது.  

போட்டியில் திருப்பத்தை தேடிய கொழும்பு பயிற்றுவிப்பாளர் ரூமி, தசைப்பிடிப்பினால் அவதியுற்ற சியாஜ் செயினுக்கு பதில் சர்வான் ஜொஹாரை பதில் வீரராக அனுப்பினார்.

மொஹமட் பஸாலுக்கு கொழும்பு அணியை முன்னிலை பெறச் செய்ய பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பொட்ரிக் டிமிட்ரியின் உதை கடற்படை கோல் கம்பத்தில் இருந்து வெளியே பறந்தது.

70 ஆவது நிமிடத்தில் மொஹமட் இம்ரான் நீண்ட தூரத்தில் இருந்து உதைத்த பந்து சதுரங்க சஞ்ஜீவவுக்கு சவால் விடுப்பதாக அமைந்தது. இம்ரான் பரிமாற்றிய பந்தை பெற்ற பொட்ரிக் டிமிட்ரி அதனை மொஹமட் ஆகிபுக்கு பரிமாற்ற அவரது உதையை சுபாஷ் மதுஷான் சிறப்பாகத் தடுத்தார்.

டிமிட்ரிக்கு சரியான இடத்தில் வைத்து மீண்டும் ஒரு தடவை பந்து அவரது கால்களுக்கு கிடைத்தது. எனினும் அவர் கோல்காப்பாளர் ரெஜினோல்டின் கைகளுக்கு நேராக பந்தை உதைத்தபோது கொழும்பு அணிக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு பறிபோனது.

டிமிட்ரி உதைத்த மற்றொரு பந்தை உதயங்க ரெஜினோல்ட் தடுக்க போட்டி இறுதி நிமிடங்களை எட்டும் வேளையிலும் இரு அணிகளாலும் ஒரு கோலைக் கூட பெற முடியாத நிலை நீடித்தது.

இந்நிலையில் சர்வான் ஜொஹார், மொஹமட் பஸால் இணைந்து சிறந்த வாய்ப்பொன்றை மொட்ரிக் டிமிட்ரிக்கு பெற்றுக்கொடுத்தனர். இந்த முறை தடுமாற்றம் காணாத அவர் பந்தை வலைக்குள் செலுத்தி கொழும்பு அணியை முன்னிலை பெறச் செய்தார்.

FC கிண்ணத்திற்கு போட்டியிடும் கொழும்பு கால்பந்து கழகம்

பொட்ரிக் டிமிட்ரியை முழங்கையால் தடுத்த WN பெரேரா சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பு மூலம் சர்வான் ஜொஹார் கொழும்பு அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார். இதன் போது சீ ஹோக்ஸின் அரணைத் தாண்டி வளைவாக பந்தை செலுத்தி அபாரமாக அந்த கோலை அவர் பெற்றார்.

இந்நிலையில் ஜொஹார் பந்தை தாழ்வாக மொஹமட் பஸாலுக்கு வழங்க அவர் அதனை கோலாக மாற்றினார். இந்நிலையில் மதுரங்க பெரேராவின் கையில் பந்து பட கொழும்பு அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியைக் கொண்டு சர்வான் ஜொஹார் மற்றொரு கோலை புகுத்தினார்.     

 முழு நேரம்: சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 4 கொழும்பு கால்பந்து கழகம்

ThePapare.com  இன் போட்டியின் சிறந்த வீரர் – சர்வான் ஜொஹார் (கொழும்பு கால்பந்து கழகம்)

கோல் பெற்றவர்கள்

கொழும்ப கால்பந்து கழகம் – பொட்ரிக் டிமிட்ரி 85′, சர்வான் ஜொஹார் 87′ & 95’, மொஹமட் பஸால் 90′

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம் – மொஹமட் அஸ்மீர் 49′

சிவப்பு அட்டை பெற்றவர்

சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம் – டபிள்யூ.என். பெரேரா 86′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<