சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்காக விளையாடிய சகலதுறை வீரர் டேவிட் வீஸா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி T20 உலகக்கோப்பை லீக் போட்டியானது நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களைக் குவித்தது.
இதையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நமீபியா அணியின் டேவிட் வீஸா 2 பௌண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 27 ஓட்டங்களைக் குவித்து அந்த அணியின் வெற்றிக்;காக போராடியிருந்தார்.
எவ்வாறாயினும், டேவிட் வீஸா விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த போட்டியின் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பெறுவதாக டேவிட் வீஸா உத்தியோகப்பூர்வமாக இன்று (16) அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா நாட்டவரான டேவிட் வீஸா, தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 2013இல் இலங்கைக்கு எதிரான T20i போட்டியில் வைத்து ஆரம்பித்தார். அதற்குபிறகு 2015இல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். எவ்வாறாயினும், 2016இல் கோல்பாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டேவிட் வீஸா, இங்கிலாந்தின் பிராந்திய போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.
- T20 உலகக் கிண்ணம் தொடர்பில் ட்ரென்ட் போல்டின் அறிவிப்பு
- T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நமீபியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகின்ற வாய்ப்பு டேவிட் வீஸாவிற்கு கிடைத்தது. அந்த ஆண்டு முதல், அவர் தொடர்ச்சியாக 3 T20 உலகக் கிண்ணத் தொடர்களில் நமீபியா அணிக்காக விளையாடியுள்ளார். நமீபியாவுக்காக 34 T20i போட்டிகளில் விளையாடி 532 ஓட்டங்களைக் குவித்து 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல, நமீபியாவுக்காக 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வீஸா 228 ஓட்டங்ளைக் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி 39 வயதான டேவிட் வீஸா, சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 15 ஒருநாள், 54 T20i போட்டிகளில் தென்னாபிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் 330 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேசமயம் T20i கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் துடுப்பாட்டத்தில் 3 அரைச் சதங்களுடன் 624 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 59 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், T20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். கடந்த 12 மாதங்களில், அவர் SAT20, PSL, The Hundred மற்றும் T20 பிளாஸ்ட் லீக் தொடர்களில் விளையாடியிருந்தார்.
அதுமாத்திரமின்றி, ஐபிஎல் தொடரில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<