இலங்கை அணிக்கெதிரான முதல் T20i போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலியாவின் இறுதிப் பதினொருவர் அணி இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோன் பின்ச் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் நட்சத்திர வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் நீண்ட நாட்களுக்குப் பிறகு இறுதிப் பதினொருவர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
குறித்த இரண்டு வீரர்களும் இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற T20i உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருந்தனர்.
அதேபோல, இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான T20i தொடரை தவறவிட்ட கிளென் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் ஹசில்வுட், கேன் றிச்சர்ட்சன் ஆகிய வீரர்கள் மீண்டும் அவுஸ்திரேலிய இறுதிப் பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
- ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த முதல் இரு T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகள்!
- இலங்கை – அவுஸ்திரேலிய தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு
- இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் லசித் மாலிங்க
அத்துடன், அண்மையில் நிறைவடைந்த IPL தொடரில் கலக்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்யூ வேட் ஆகியோரும் இந்த இறுதிப் பதினொருவரில் இடம்பிடித்துள்ளனர்.
இதன்படி, இம்முறை IPL தொடரில் விளையாடிய ஏழு வீரர்கள் இலங்கை அணிக்கெதிரான முதல் T20i போட்டிக்கான அவுஸ்திரேலிய இறுதிப் பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, முதலாவது T20i போட்டியில் மிட்செல் ஸ்டார்க், கேன் றிச்சர்ட்சன், ஜோஸ் ஹசில்வுட் ஆகிய மூன்று முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பட் கம்மின்ஸுக்கு முதல் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடம் சம்பாவின் மனைவி முதலாவது குழந்தை பிரசவத்துக்காக தயாரகிக் கொண்டிருப்பதால் அவர் இலங்கை அணிக்கெதிரான T20i தொடரில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அந்த அணியின் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக அஸ்டன் ஏகார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது T20i போட்டி நாளை இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய இறுதிப் பதினொருவர் அணி
ஆரோன் பின்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்யூ வேட், அஸ்டன் ஏகார், மிட்செல் ஸ்டார்க், கேன் றிச்சர்ட்சன், ஜோஸ் ஹசில்வுட்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<