அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரின் பயண பை காணாமல் போயுள்ளதாக தன்னுடைய இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
டேவிட் வோர்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
>> இலங்கை பயிற்றுவிப்பு குழாத்தில் இணையும் கண்டம்பி, சந்தன
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறான நிலையில் டேவிட் வோர்னரின் பயணப்பொதிகள் மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு மாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருடைய பயணப் பை ஒன்று காணாமல் போயுள்ளது.
குறித்த பயண பையில் டேவிட் வோர்னரின் டெஸ்ட் தொப்பி (Baggy Greens) இருந்துள்ளதுடன், அதனை எடுத்தவர்கள் மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டேவிட் வோர்னர்,
“இது எனக்கு (டெஸ்ட் தொப்பி) உணர்வுபூர்வமானது. இந்த வாரம் ஓய்வுபெறும் போது என் கைகளில் இந்த தொப்பிகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் உண்மையிலேயே விரும்பியது என்னுடைய பயண பை என்றால், என்னிடம் மற்றுமொரு பயண பை உள்ளது. பையை திருப்பி தரும்போது எந்த வித சிக்கல்களும் உங்களுக்கு வராது. தயவுசெய்து எனது அல்லது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் சமுகவளைதளங்களை தொடர்புக்கொள்ளவும். நீங்கள் தொப்பியை தருவீர்கள் என்றால், பையை தருவதில் நான் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளைய தினம் (03) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<