தடைக்கு பின்னர் மீண்டும் தலைவராகிய டேவிட் வோர்னர்

426
Image Courtesy - BBC Sports

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பை வாழ்நாள் முழுவதும் பெற முடியாத வகையில் தடை பெற்றிருக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், கனடாவில் முதன்முறையாக இடம்பெறும் குளோபல் T-20 தொடரில் விளையாடும் வின்னிபெக் ஹெவ்க்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு: ஐ.சி.சி. ஒப்புதல்

கிரிக்கெட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தும்…

கனடாவில் முதன்முறையாக  சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்பில் ஆறு அணிகள் மோதும் குளோபல் T-20 தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடிவரும் வின்னிபெக் ஹெவ்க்ஸ் அணியின் தலைவராக மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டிருந்தார். நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கிய டுவைன் பிராவோ திடீர் உபாதை காரணமாக தொடரிலிருந்து முற்றுமுழுதாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிராவோவின் தலைமையின் கீழ் வின்னிபெக் ஹெவ்க்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டியில் தோல்வியடைந்திருந்தது. முக்கியமாக, போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலிலும் இந்த அணியே நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இந்த நிலையில் பிராவோ திடீரென விலகுவதால் குளோபல் T-20 தொடரில் வின்னிபெக் அணிக்கு பின்னடைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிராவோவின் அணித் தலைவர் வெற்றிடத்துக்கு யாரை தெரிவுசெய்வது என ஆலோசனை மேற்கொண்ட வின்னிபெக் அணி,  அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் அணித்தலைமை பதவிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள டேவிட் வோர்னரை நியமித்துள்ளது.

ஸ்மித், வோர்னர், பான்க்ரொப்ட் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப அழைப்பு

கேப்டவுனில் நடந்த தொன்னாபிரிக்காவுடனான…

இவ்வருடத்தின் ஆரம்பப் பகுதியில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றியமைத்த குற்றத்துக்காக, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட டேவிட் வோர்னருக்கு வாழ்நாள் முழுவதும் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஏனைய உள்ளூர் கிரிக்கெட் அணிகள் மற்றும் லீக் போட்டிளுக்கான அணித்தலைவராக செயற்படுவதற்கு டேவிட் வோர்னருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வின்னிபெக் அணி அனுபவம் வாய்ந்த வோர்னரை தலைவர் பதவிக்கு நியமித்துள்ளது.

எனவே, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியிருந்த டேவிட் வோர்னர், தடைக்கு பின்னர் அணித் தலைவராக செயற்படவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

டேவிட் வோர்னருக்கு தலைவர் பதவியை வழங்குவது தொடர்பாக வின்னிபெக் ஹெவ்க்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவிக்கையில், அவர் (வோர்னர்) ஒரு சிறந்த அணித் தலைவராக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சிறந்த அணி வீரர். அவரின் தலைமைத்துவத்தை .பி.எல். தொடரில் பார்த்துள்ளேன். மிகவும் திறமையான தலைவர். அவரது அணித்தலைமை யுத்திகளும் சிறப்பானது எனக் கூறியுள்ளார்.

குளோபல் டி-20 தொடரிலிருந்து திசர, தசுன் மற்றும் இசுரு உதான விலகல்

ஐ.சி.சி இன் இணை அங்கத்துவ நாடான கனடா கிரிக்கெட்…

வோர்னர் அவுஸ்திரேலியா மற்றும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளின் தலைவராக செயற்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணியின் தலைவராக செயற்பட்ட அவர், அந்த அணிக்கு சம்பியன் கிண்ணத்தை வென்றுகொடுத்தார். அத்துடன் அவுஸ்திரேலிய அணிக்காக மூன்று ஒருநாள் மற்றும் ஒன்பது T-20  போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள வோர்னர், இந்திய அணிக்கெதிராக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ரான்ஞ்சியில் நடைபெற்ற T-20 போட்டியில் மாத்திரமே தோல்வியைக் கண்டுள்ளார்.

அணித் தலைமையைப் பெற்றுள்ள டேவிட் வோர்னர் குறிப்பிடுகையில், “மீண்டும் போட்டித் தன்மையான கிரிக்கெட்டில், தனது ஆட்டத் திறமையை கொண்டுவருவதற்கு சரியான தருணம் இதுதான். ஒவ்வொரு தடவையும்  மைதானத்தில் 100 சதவீத திறமையை பயன்படுத்துவற்கு எதிர்ப்பார்க்கிறேன். எனது 100 சதவீத உழைப்பையும் இந்த தொடரில் கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன். அத்துடன் வளர்ந்து வரும் வீரர்களுக்கு எனது அனுபவங்களைப் பகிர்ந்து, அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பேன் என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும்  தடைக்கு பின்னர் சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் தொடருக்கு திரும்பியுள்ள டேவிட் வோர்னர் கடந்த மூன்று போட்டிகளிலும் சோபிக்கத் தவறியுள்ளார். முதல் போட்டியில் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்ற இவர், அடுத்த இரண்டு போட்டிகளிலும் முறையே நான்கு மற்றும் ஒரு ஓட்டத்துடன் மொத்தமாக ஆறு ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்துள்ளார்.

எனினும், டேவிட் வோர்னர் தலைவர் பதவியின் போது, அணியை எவ்வாறு வழிநடத்துவார் என்பதையும், அணிக்கு அவரது பங்களிப்பு எவ்வாறிருக்கும் என்பதையும் ரசிகர்கள் ஐ.பி.எல். தொடரில் பார்த்துள்ளனர். இதனால் தலைவர் பதவியுடன் வோர்னர் மீண்டும், பழைய வோர்னராக திரும்பி வருவார் என ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<