தென்னாபிரிக்க அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிகுறைந்த பந்துகளில் சதம் கடந்த வீரராக புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கெதிராக ஞாயிற்றுக்கிழமை (29) தென்னாபிரிக்காவின் போச்செப்ட்ஸ்ரூம் (Potchefstroom) நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலேயே இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
பங்களாதேஷினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி, நல்லதொரு ஆரம்பத்தைக் காட்டியிருந்த நிலையில் ஐந்தாம் இலக்க வீரராக மைதானம் வந்திருந்த டேவிட் மில்லர் வெறும் 35 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்து இந்த புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கின்றார். இது டி20 சர்வதேச போட்டிகளில் அவரது கன்னி சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டில் மில்லரின் சக அணி வீரர் றிச்சர்ட் லேவி நியூசிலாந்து அணிக்கெதிராக 46 பந்துகளில் 100 ஓட்டங்கள் பெற்றிருந்ததே டி20 சர்வதேச போட்டிகளில் அதிகுறைவான பந்துகளில் பெற்ற சதமாக முன்னர் பதிவாகியிருந்தது.
ஆரம்பத்தில் ஓட்டமேதுமின்றி காணப்பட்ட நிலையில் மில்லர் ஏற்படுத்தி தந்த பிடியெடுப்பு ஒன்றை பங்களாதேஷ் அணியினர் தவறவிட்டிருந்தனர். இந்த தவறு அவர்களுக்கு பின்னர் பெரும் இடையூறாக மாறியது. பவுண்டரி எல்லைகளையே குறிவைத்த மில்லர் மொஹமட் சயிபுத்தீன் வீசிய போட்டியின் 19 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை விளாசியிருந்ததார். அத்தோடு அவரது இந்த சதத்தில் மொத்தமாக 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கியிருந்தன.
மில்லர் பங்களாதேஷுக்கு எதிரான இந்த டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் மொத்தமாக 36 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவிக்க, 20 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 224 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தானால் T-20 தொடரிலும் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை
போட்டியின் வெற்றி இலக்கான 225 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 141 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 83 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்ததுடன், தம்முடைய தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடர் (2-0), ஒரு நாள் தொடர் (3-0) என்பவற்றுடன் சேர்த்து தற்போது T-20 தொடரையும் (2-0 ) பறிகொடுத்திருந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவான மில்லர்,“இந்த சதத்தை மிகவும் விஷேடமாக கருதுகின்றேன். நீங்கள் இப்படியான ஒரு சம்பவம் நடக்கும் என எதிர்பார்த்து (சதம் கடந்தது) காலையில் எழும்புவதில்லை. நான் போட்டியை மிகவும் மெதுவாகவே ஆரம்பித்திருந்தேன். நான் எதிர்கொண்ட முதல் பத்து பந்துகளில் ஆட்டமிழந்திருக்க முடியும். ஆனால், இப்போது சதம் கடந்தது நல்ல விடயமாக (எனக்கு) அமைகின்றது. அத்தோடு நான் (குறிப்பிட்ட அந்த ஓவரில்) 6 சிக்ஸர்களை அடிக்க எதிர்பார்த்திருந்தேன்“ என தனது சாதனை சதம் பற்றி போட்டியின் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.