இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணைந்துகொள்வது அணிக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும் என்று இலங்கை T20 அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்தார்.
இரண்டு போட்டிகள் கொண்ட T20 போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (04) ஓமானுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.
எனவே இலங்கை அணி நாட்டை விட்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தசுன் ஷானக இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“உண்மையில், மஹேல ஜயவர்தன போன்ற ஒருவர் எங்களுடன் இணைவது அணிக்கு மிகப் பெரிய பலம். பயிற்சியாளராக அவருக்கு இருக்கும் அனுபவம் இலங்கையில் உள்ள பெரும்பாலானோரிடம் கிடையாது. அவர் IPL தொடரில் பயிற்சியாளராக இருப்பதும் எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனவே, மஹேல ஜயவர்தனவிடம் இருந்து எங்களுக்கு அதிக நன்மையைப் பெற முடியும் என்று நினைக்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஆடுகளம் பற்றி தசுன் ஷானக கருத்து தெரிவிக்கையில்,
“நான் IPL தொடரின் எல்லாப் போட்டிகளையும் பார்த்தேன். அவர்கள் அதிகமான புற்கள் உள்ள ஆடுகளங்களைத் தான் பயன்படுத்தியிருந்தார்கள்.
ஆனால், T20 உலகக் கிண்ணத்தில் ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சார்ஜாவில் மட்டும் பந்து கொஞ்சம் விக்கெட்டுக்கு வராததை அவதானிக்க முடிந்தது.
வனிந்து ஹசரங்கவும், துஷ்மந்த சமீரவும் IPL தொடரில் இடம்பெற்றுள்ளதால் அவர்களிடம் இருந்து ஆடுகளம் பற்றிய ஒரு தெளிவினைப் பெறுவது மிகவும் எளிதானது என்று நான் நம்புகிறேன். எனவே அணியுடன் கலந்துரையாடி எங்களுடைய திட்டங்களை வகுக்க முடியும் என்று நம்புகிறேன்.
மேலும், இரவு நேரத்தில் பணி இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒட்டுமொத்தத்தில் தற்போது நாங்கள் ஆடுகளம் பற்றிய ஒரு தெளிவை பெற்றுக்கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டார்.
- புயலினால் தாமதமான இலங்கை கிரிக்கெட் அணியின் ஓமான் பயணம்
- உலகக்கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை விளையாடவுள்ள போட்டிகள் அறிவிப்பு!
- WATCH – இலங்கை அணியுடன் இணையும் மஹேலவுக்கு முக்கிய பதவி…!
இதேநேரம், T20 உலக்க கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கு முன் ஓமான் அணியுடன் இரண்டு T20 போட்டிகளில் விளையாடுவது மற்றும் உலகக் கிண்ண அணியில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பில் தசுன் ஷானக கருத்து தெரிவிக்கையில்,
”அந்த இரண்டு போட்டிகளிலும் எமது துடுப்பாட்ட வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சிறந்த ஓட்ட எண்ணிக்கை இலக்காகக் கொடுத்தால் T20 உலகக் கிண்ணத்துக்குச் செல்லும்போது எமக்கு நிறைய சாதகத்தைக் கொடுக்கும். இந்த இரண்டு போட்டிகளிலிருந்தும் எமது துடுப்பாட்ட வீரர்களின் முழு திறமையை பெற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல, T20 உலகக் கிண்ண அணி தொடர்பில் தேர்வாரள்கள் மற்றும் பயிற்சியாளர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. அவர்கள் அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஓமான் அணியுடனான தொடருக்கு முன்னால் உலகக் கி;ண்ண அணி தொடர்பில் தேர்வாளர்கள் அறிவிப்பார்கள்” என அவர் தெரிவித்தார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…