வீசா சிக்கலால் மே.தீவுகள் பயணிக்க தவறிய தசுன் ஷானக!

Sri Lanka tour of West Indies 2021

502

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரும், புதிய T20 தலைவருமான தசுன் ஷானக, வீசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் செல்லவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (22) இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக புறப்பட்டிருந்தனர். குறித்த தொடருக்காக தசுன் ஷானகவும் இணைக்கப்பட்டிருந்ததுடன், அவர் T20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

Shanaka’s departure for West Indies delayed due to Visa issue

இந்தநிலையில், ஏனைய வீரர்கள் அனைவரும் தொடருக்காக புறப்பட்டுள்ள போதும், வீசா பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தசுன் ஷானக அணியுடன் செல்லவில்லை.

தசுன் ஷானகவின் கடவுச்சீட்டு தவறவிடப்பட்டுள்ளதாகவும், குறித்த தவறவிடப்பட்ட கடவுச்சீட்டில் அமெரிக்கா செல்வதற்கான வீசா முத்திரை இடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடவுச்சீட்டை தவறவிட்டுள்ளதால், மீண்டும் அமெரிக்க வீசாவினை பெறுவதில் ஷானகவுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை தற்போது, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிவருவதுடன், இந்த வீசா அனுமதியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றது. குறிப்பிட்ட இந்த சிக்கல் உடனடியாக தீர்த்துவைக்கப்பட்ட பின்னர், தசுன் ஷானக மே.தீவுகள் தொடருக்கான இலங்கை குழாத்துடன் இணைந்துக்கொள்வார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மே.தீவுகளுக்கு புறப்பட்டுள்ள இலங்கை அணி, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் T20I போட்டியில் விளையாடவுள்ளது. மொத்தமாக 3 T20I, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் இலங்கை அணி அங்கு விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<