இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான தசுன் சானக்க, இவ்வருட இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள டி-10 லீக் தொடரில் கேரளா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட் பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒரு நாள் போட்டிகளுக்கும், பின்னர் டி-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் தற்போது டி-10 போட்டிகளாகவும் நடைபெற்று வருகின்றது.
தென்னாபிரிக்க ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட்…
இந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அங்குரார்ப்பண டி-10 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் கிரிக்கெட் உலகின் அதிரடி நட்சத்திரங்களான சஹீட் அப்ரிடி, கிறிஸ் கெயில், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை, 2ஆவது தடவையாக இவ்வருடமும் நடைபெறவுள்ள டி-10 லீக் தொடரின் முதல்கட்ட வீரர்களுக்கான மினி ஏலம் கடந்த 23ஆம் திகதி டுபாயில் இடம்பெற்றது.
நான்கு சுற்றுக்களாக A, B, C என்ற 3 பிரிவுகளில் இடம்பெற்ற இந்த ஏலத்தில் கிரிக்கெட் உலகில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இதில் கடந்த முறை நடைபெற்ற அங்குரார்ப்பண டி-10 லீக் போட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற கேரளா கிங்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் இயொன் மோர்கனை தொடர்ந்து தலைவராக தக்கவைத்துக் கொண்டது.
இந்த நிலையில் இம்முறை நடைபெற்ற வீரர்களுக்கான முதல் சுற்று ஏலத்தில் கிரென் பொல்லாரட் (மேற்கிந்திய தீவுகள்), சொஹைல் தன்வீர் (பாகிஸ்தான்), போல் ஸ்ரேலிங் (அயர்லாந்து) மற்றும் தசுன் சானக்க (இலங்கை) ஆகியோர் கேரளா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இதில் இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக உள்ளுர் மட்ட கிரிக்கெட் மற்றும் டி-20 சர்வதேசப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 27 வயதான தசுன் சானக்க முதற்தடவையாக டி-10 லீக் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை 24 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.
எனினும், தேசிய அணிக்ககாக மாத்திரம் அதிகம் விளையாடி வருகின்ற சானக்கவுக்கு இதுவரை எந்தவொரு வெளிநாட்டு டி-20 லீக் தொடர்களிலும் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டவில்லை. முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பீரிமியர் லீக் டி-20 தொடர் மற்றும் அண்மையில் நிறைவுக்கு வந்த கனடா குளோபல் டி-20 லீக் தொடர்களுக்காக தசுன் சானக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண போட்டித் தொடரில் விரேந்திர சேவாக் தலைமையிலான மராத்தா அராபியன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார இடம்பெற்றிருந்தார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் குறித்த தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.
அதேபோன்று, இலங்கை டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளராக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற ரங்கன ஹேரத், சொஹைப் மலிக் தலைமையிலான பஞ்சாபி லெஜன்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவராலும் அந்ததொடரில் பங்கேற்க முடியாது போனது.
இதேநேரம், கடந்த முறை போட்டித் தொடரில் பஞ்சாபி லெஜன்ட்ஸ், பக்தூன்ஸ், மராத்தா அராபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், லங்கா லயன்ஸ் (இலங்கை அணி), மற்றும் கேரளா கிங்ஸ் என ஆறு அணிகள் பங்குபற்றியிருந்தன.
எனினும், இவ்வருட போட்டித் தொடரில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட லங்கா லயன்ஸ் அணி நீக்கப்பட்டு, ராஜ்புட்ஸ் மற்றும் நொதர்ன் வொரியர்ஸ் ஆகிய மேலும் இரண்டு அணிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், இம்முறை ஏலத்தில் 32 வீரர்கள் முதல் சுற்று ஏலத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டனர். இதில், மேற்கிந்திய தீவுகளிலிருந்து 8 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 7 வீரர்களும் அதிகபட்சமாகத் தெரிவாகியிருந்தனர்.
அத்துடன், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானில் இருந்து தலா 4 வீரர்களும், ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து தலா 3 வீரர்களும், தென்னாபிரிக்காவிலிருந்து 2 வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிலிருந்து தலா ஒவ்வொரு வீரர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் இடம்பெறாத ரஷீத் கான், முஜிப் சத்ரான், மொஹமட் ஷேசாத் (ஆப்கானிஸ்தான்), அன்ட்ரூ ரஸல், ஈவின் லுவிஸ், (மேற்கிந்திய தீவுகள்) பிரெண்டன் மெக்கலம், கொலின் கிரேன்ட்ஹோம், என்டன் டிவ்சிங், (நியூசிலாந்து), ஷேன் வொட்சன், ஜொப்ரா ஆச்சர், கிறிஸ் லையன், ஜேம்ஸ் போக்னர், (அவுஸ்திரேலியா), டேவிட் வில்லி, ஜேசன் ரோய், சேம் பில்லிங்ஸ், (இங்கிலாந்து), கொலிங் இங்ரம் (தென்னாபிரிக்கா), மொஹமட் ஹபீஸ், கம்ரான் அக்மல், ஆசிப் அலி (பாகிஸ்தான்), தசுன் சானக்க (இலங்கை) ஆகிய வீரர்கள் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதில் ரஷீத் கானை மராத்தா அரேபியன்ஸ் அணியும். சக வீரர் முஜீப் சத்ரானை பெங்கால் டைகர்ஸ் அணியும் ஒப்பந்தம் செய்தது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொஹமட் ஷேசாத்தை புதிய அணியான ராஜ்புட்ஸ் அணியும், அயர்லாந்தின் போல் ஸ்ட்ரேலிங்கை கேரளா கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்..
இதேநேரம், பஞ்சாபி லெஜென்ட்ஸ் சொயிப் மாலிக்கையும், சஹீட் அப்ரிடியை பாக்த்தூன்ஸ் அணியும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியின் தலைவர் இயொன் மோர்கனை கேரளா கிங்ஸ் அணியும், மேற்கிந்திய தீவுகளின் டெரன் சமியை நொர்தன் வொரியர்ஸ் அணியும் எடுத்துள்ளது. ஷேன் வொட்சனை கராச்சியன்ஸ் அணி எடுத்துள்ளது. இதேவேளை, ஏனைய வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் அரங்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய இந்தப் புதிய வகைத் தொடரானது 10 ஓவர்கள், 8 அணிகள், 28 போட்டிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய நேர எல்லைக்குள் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<