தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை அதிரடியால் மீட்ட தசுன் ஷானக

4545

இண்டர்நெசனல் லீக் T20 (ILT20) தொடரின் 29வது லீக் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த டுபாய் கெபிடல்ஸ் அணியை, இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தனது அதிரடியால் வெற்றி பெறச் செய்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இண்டர்நெசனல் லீக் T20 (ILT20) தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 29ஆவது லீக் போட்டி ஞாயிற்றுக்கிழமை (05) டுபாய் கெபிடல்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டுபாய் கெபிடல்ஸ் அணியின் தலைவர் யுசுப் பதான் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய MI எமிரேட்ஸ் அணி, அதன் தலைவர் நிக்கொலஸ் பூரண் அதிரடியாகப் பெற்ற 43 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் வசீம் பெற்ற 31 ஓட்டங்கள் என்பவற்றுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய டுபாய் கெபிடல்ஸ் அணி, 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் அடுத்தடுத்து தமது 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித் தலைவர் தசுன் ஷானக மற்றும் ஜிம்பாப்வே அணியின் அனுபவ வீரர் சிகந்தர் ராசா ஆகியோர், முதலில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் ஆடினர்.

இதில் தசுன் ஷானக 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்களாக ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், சிகந்தர் ராசா 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களது அதிரடியுடன் டெல்லி கெபிடல்ஸ் அணி 18.1 ஓவர்களில் மேலதிக விக்கெட் எதனையும் இழக்காமல் 166 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் அவ்வணி பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<