மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி, தற்போதைய இளம் இலங்கை அணி தொடர்பில் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்றுமுடிந்த T20 உலகக் கிண்ணத்தில், இளம் வீரர்களுடன் களமிறங்கிய இலங்கை அணி அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
>>முதல் T20 போட்டிக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு
இந்தநிலையில், அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் அதிகம் பார்வையிட வேண்டிய அணியாக இலங்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ள டெரன் சமி, ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் கருத்து பதிவிட்டுள்ளார்.
“நான் இப்போது ஒன்று கூறுகின்றேன். T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் இளம் வீரர்களின் திறமையை நான் பார்த்த வகையில், ஒரு வேகப் பந்துவீச்சாளர் மற்றும் 7ஆம் இலக்கத்தில் வேகமாக துடுப்பெடுத்தாடக்கூடிய வீரர் ஒருவரை இலங்கை அணி உருவாக்கிக்கொள்ளுமானால், 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில், அதிகமாக பார்வையிடக்கூடிய ஒரு இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் கொண்ட அணியாக இலங்கை இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்றுமுடிந்த T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி, 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றிருந்தது. அத்துடன், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு சவால்களை கொடுத்து, இறுதி தருணத்தில் தோல்வியை தழுவியிருந்தது. எனவே, இளம் வீரர்களுடன் உருவாகி வரும் இலங்கை அணி மீது அதிகமான கவனம் சர்வதேசத்தில் எழுந்துள்ளது.
இதேவேளை, ஐசிசி T20 உலகக் கிண்ணம் 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<