டெஸ்ட் போட்டிகளில் ஸ்டார்க் 300 விக்கட்டுக்களை வீழ்த்துவார் – லீமன்

453
Mitchell Starc
REUTERS/Patrick Hamilton

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தன்னுடைய அதிவேகப் பந்து வீச்சாலும், நேர்த்தியான யோர்க்கர் பந்துகளாலும் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார்.

2015-ல் நியூசிலாந்து – அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

கடந்த அண்டு நவம்பர் மாதம் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் சுமார் 6 மாதத்திற்கு அவரால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் மேற்கிந்திய தீவுகளில் கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களம் இறங்கினார். இந்தத் தொடரில் சிறப்பாகப் பந்து வீசி அசத்தினார். தற்போது இலங்கை அணிக்கெதிரான தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டார்க் டெஸ்ட் அணிக்கு திரும்புவது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமென் கூறுகையில் ‘‘ஸ்டார்க் காயமின்றி டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாடினால் அவர் 300 விக்கெட்டுக்களை வீழ்த்துவார். அவர் எல்லாவித கிரிக்கெட்டிலும் விளையாடிவருகிறார். இது அவருக்கு கடினமாக இருக்கும்.

எங்களுடைய முன்னுரிமையான டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர், உலகக்கோப்பை அதற்குபின் மற்ற போட்டிகள் ஆகியவற்றை முக்கிய கொள்கையாகக் கொண்டு அவரை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். அவர் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் எங்கள் திட்டப்படி சிறப்பான வெற்றிகளை அவுஸ்திரேலியாவிற்கு தேடித்தருவார்.

நீண்ட நாட்களுக்குப்பின் அணிக்குத் திரும்பிய அவர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அவரின் இரண்டாவது கட்டமான டெஸ்ட் தொடரை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்