இலங்கை பிலியெட் மற்றும் ஸ்னூக்கர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 65 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பிலியெட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் நடப்பு வருட சம்பியனாக கொழும்பு இளையோர் கிறிஸ்தவ விளையாட்டு கழகத்தைச் (YMCA) சேர்ந்த எச்.ஏ.எம் றிம்சான் தெரிவானார்.
இதன்படி, தேசிய பிலியெட் சம்பியன் பட்டத்தை இள வயதில் வென்ற வீரராக வரலாற்றில் இடம்பிடித்த ரிம்சான், அக்கழகத்துக்காக சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு பிலியெட் சம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார். முன்னதாக 2002 ஆம் ஆண்டு அக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரரான ஹென்றி பொதேஜு தேசிய பிலியெட் சம்பியன் பட்டத்தை இறுதியாக வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முவர்ஸ் விளையாட்டு கழகத்தின் (MOORS SPORTS CLUB) உள்ளக அரங்கில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனும், கடந்த ஒரு தசாப்தங்களாக பிலியெட் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டவருமான இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட வீரர் பீ.எச் சிறிசோம, கடந்த வருடத்துடன் பிலியெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றதால் இம்முறை போட்டிகளில் பங்குபற்றவில்லை. இவர் முன்னதாக 25 பிலியெட் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
உலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி
இதே நேரம், சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக தேசிய பிலியெட் போட்டித் தொடர் நேரத்தை கணக்கிடும் முறையில் இடம்பெற்றிருந்தது.
எனவே, இம்முறை சம்பியன் பட்டத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் கொழும்பு இளையோர் கிறிஸ்தவ விளையாட்டு கழகத்தின் எச்.ஏ.எம் றிம்சானுக்கும், கடந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழத்தின் எஸ்.எச்.எம் அஸ்லமுக்கும் பலத்த போட்டி நிலவியது.
எனினும், ஆரம்பம் முதல் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த 26 வயதான றிம்சான், சுமார் 4 மணித்தியாலமாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 899 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.
இதே நேரம், 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தேசிய பிலியெட் சம்பியனஷிப் போட்டித் தொடரில் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட எஸ்.எச்.எம் அஸ்லமுக்கு 585 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன்படி, 303 புள்ளிகள் வித்தியாசத்தில் இம்முறை தேசிய பிலியெட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வெற்றியைத் தனதாக்கிய றிம்சான், அறிமுகப் போட்டியிலேயே பிலியெட் சம்பியன் பட்டத்தையும் சுவீகரித்தார்.
ஆசிய இளையோர் பளுதூக்கலில் இலங்கை வீரர்களுக்கு தடை
மேலும், இம்முறை போட்டிகளில் மூன்றாவது இடத்தை காலி இளையோர் பௌத்த விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த (YMBA) ஏ.எம் ஜெப்ரி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இம்முறை போட்டித் தொடரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான கேடயங்கள் மற்றும் பரிசில்களை இலங்கை பிலியெட் மற்றும் ஸ்னூக்கர் சம்மேளனத்தின் தலைவர் சுல்கி பசேலா மற்றும் முன்னாள் தேசிய வீரர் பீ.எச் சிறிசோம ஆகியோர் வழங்கிவைத்தனர்.