ஜிம்பாப்வே அணியுடனான தோல்விக்காக அழுவதற்கோ அதைப் பற்றி சிந்திப்பதற்கோ நேரமில்லை என தெரிவித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் டெரன் சமி, இந்த தோல்வியானது தமது அணி ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு தடையாக இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
ICC ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் முன்னாள் உலக சம்பியன் மேற்கிந்திய தீவுகளை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அதிர்ச்சி அளித்தது. ஜிம்பாப்வேயின் வெற்றியில் சிக்கந்தர் ராஸா, ரெயான் பேர்ல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் முக்கிய பங்காற்றின.
மறுபுறத்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைந்தபோதிலும், அக்குழுவில் இடம்பெற்ற நேபாளமும், ஐக்கிய அமொரிக்காவும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இந்தத் தோல்வி மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் சுற்றில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் டெரன் சமி, தனது அணியின் மோசமான களத்தடுப்பை விமர்சித்ததுடன், இதுபோன்ற களத்தடுப்பினால் இதுபோன்ற தொடர்களில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.
- ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகளுக்கு அபராதம்
- உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் சுபர் 6 சுற்றில் இலங்கை
”இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நாணய சுழற்சியில் வென்றால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய விரும்பினோம். இவ்வாறு மோசமான களத்தடுப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தால், இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது என்பதைக் குறிக்கிறது.
இவற்றைத்தான் நாம் மாற்ற முயற்சிக்கிறோம். கடந்த காலத்தில் அப்படி நடப்பதை நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். எவ்வாறாயினும், இவ்வாறான தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வது தான் எனது எதிர்பார்ப்பாகும்.
இன்று எங்களுக்கு ஆரம்பம் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறோம். இங்கு ஒரு பெரிய பிரச்சினை பொறுப்பை எடுத்துக் கொள்வதாகும். அப்படி செய்யாததுதான் தோல்விக்குக் காரணம். எனவே தான் நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள் கிடையாது என்று சொல்கிறேன்.
இந்த தோல்வி ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நாங்கள் தகுதி பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஆனால் அதை கடினமாக்கி உள்ளது. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெறவில்லை என்று வீரர்களிடம் நான் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
நாங்கள் எங்கள் நாட்டை விட்டு இங்கு வரும் பொழுதே இந்தப் போட்டித் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமான தொடர் என்று மிக நன்றாகவே தெரியும். இன்று நாங்கள் வெற்றி பெறுவதற்காக விளையாடவில்லை. நாங்கள் வெற்றி பெறுவதற்குத் தகுதியற்றவர்கள்.
எவ்வாறாயினும், தற்போது அழுவதற்கோ, தோல்வியைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்கோ நேரமில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஆடவுள்ளோம். எதிரணியின் பதினொருவர் அணியைப் பார்த்து எமது சிறந்த பதினொருவர் அணியை களமிறக்கவுள்ளோம் போட்டியிடுவோம்” என்று அவர் தெரிவித்தார்.
எனவே, தனது அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று டெரன் சமி நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<