இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இலங்கை கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்துள்ளது.
சிட்னியை சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க குணத்திலக்க அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
>> குணத்திலக்க தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விளக்கம்
கைதுசெய்யப்பட்டுள்ள இவருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், இவருக்கான பிணையை அவுஸ்திரேலியா நீதிமின்றம் வழங்க மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக்குழு, தனுஷ்க குணதிலக்கவை இடைநீக்கம் செய்யவதாக இன்றைய தினம் (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்துவரும் எந்த தொடர்களிலும் அவர் அணியின் தேர்வுக்கு உள்வாங்கப்படமாட்டார் என சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமின்றி அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க இலங்கை கிரிக்கெட் சபை தயாராக உள்ளதாக அறிவித்துள்ளதுடன், அவருக்கான தண்டனை மற்றும் அபராதங்களை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு வீரரின் இவ்வாறான நடத்தை வெளிப்பாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் ஒருபோதும் இடமளிக்க மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் விசாரணைகளுக்கு முழு ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<