இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளின் பிரைன் லாரா செயற்பட்டிருந்ததுடன், அணி நான்கு வெற்றிகளுடன் கடைசி இடத்தை பிடித்துக்கொண்டது.
>> ஹஸன் அலியின் வேகத்துடன் ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள ஓரா
இவ்வாறான நிலையில் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். டேனியல் வெட்டோரி இதற்கு முதல் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த 2014 முதல் 2018ம் ஆண்டுவரை செயற்பட்டிருந்தார்.
அதன்போது 2015ம் ஆண்டு பெங்களூர் அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்ததுடன், 2016ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இரண்டாவது இடத்தையும் பிடித்துக்கொண்டது.
அதேநேரம் இவர் இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் தொடரில் பேர்மிங்கம் பொய்னிக்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருவதுடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு மற்றும் உதவி பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இதேவேளை புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பயிற்றுவிப்பு குழாம் மாற்றப்படுமா? சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் முத்தையா முரளிதரன் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா? என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<