தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர், புதிய பெயர் அறிவிப்பு

Lanka Premier League 2024

221

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர் மற்றும் புதிய பெயரை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (05) அறிவித்துள்ளது. 

அதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள LPL போட்டியில் தம்புள்ளை அணிதம்புள்ளை சிக்ஸர்ஸ்என்ற பெயரில் களமிறங்கவுள்ளது 

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கட்டுமான பொறியியலாளர் ஆலோசனை நிறுவனமான Sequoia Consultants, Inc தம்புள்ளை அணியின் உரிமையை பெற்றுக் கொண்டுள்ளது. 

இலங்கை நாட்டவரான பிரியங்க டி சில்வா இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார் மேலும் அவர் 1983 இல் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 

அத்துடன் இலங்கையின் முதல்தரப் போட்டிகளில் ஆடிய அனுபவத்தைக் கொண்ட இவர் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்றமை விசேட அம்சமாகும். 

இது தவிர, அவர் கலிபோர்னியா இளையோர் கிரிக்கெட் அணியின் தன்னார்வ பயிற்சியாளராக உள்ளார், மேலும் இலங்கை மற்றும் அமெரிக்காவில் உள்ள பல வணிகங்களின் உரிமையாளராகவும் உள்ளார். 

கிரிக்கெட்டில், குறிப்பாக இலங்கையில் கிரிக்கெட்டுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் தம்புள்ளை அணியை வாங்க என்னைத் தூண்டியது. கடந்த சில ஆண்டுகளாக இந்த லீக் நன்றாக வளர்வதை நான் பார்த்திருக்கிறேன். இலங்கையைப் போன்ற நாட்டிற்கு இது மிகவும் நல்ல விடயம். 

இத்தகைய வளர்ச்சியைக் காட்டிய LPL தொடரில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.’ என அணியின் புதிய உரிமையாளர் பிரியங்க டி சில்வா தெரிவித்தார். 

இதனிடையே, தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளரின் குறித்து LPL தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வல கருத்து தெரிவிக்கையில், 

தம்புள்ளை அணிக்கு புதிய உரிமையாளர் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக பிரியங்க டி சில்வா இலங்கையில் முதல்தர கிரிக்கெட் ஆடிய அனுபவத்தைக் கொண்டவராக இருப்பதும் அதற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கிறது.’ என தெரிவித்தார். 

முன்னதாக இந்த ஆண்டு LPL தொடரில் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளராக இணைந்து கொண்ட பங்களாதேஷ் நாட்டவரான தமீம் ரஹ்மான், கடந்த 22ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

LPL தொடரின் 5ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கொழும்பு, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<