உலகக் கிண்ண ஆரம்ப போட்டியிலேயே தென்னாபிரிக்காவுக்கு பாரிய இழப்பு

396
ESPNcricinfo

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டைன் உபாதையிலிருந்து மீளாததன் காரணமாக உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிரிக்கெட் உலகின் திருவிழா என வர்ணிக்கப்படும் .சி.சி உலகக் கிண்ண தொடரின் 12ஆவது பருவகாலத்திற்கான போட்டிகள் இன்னும் ஒரு நாளில் ஆரம்பமாகின்றது. குறித்த தொடரில் பங்கேற்கின்ற பத்து அணிகளில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரையில் உலகக் கிண்ணத்தை வெல்லாத அணிகளாக காணப்படுகின்றன.

ரபாடா, ஸ்டெயினின் உலகக் கிண்ண வருகை குறித்து பயிற்சியாளர் கருத்து

மே 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண…

இந்நிலையில், இவ்வருடம் நடைபெறவுள்ள .சி.சி உலகக் கிண்ண தொடரின் முதல் ஆட்டத்தில் கிண்ணத்தை வெல்லாத அணிகளான இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் தென்னாபிரிக்க அணி பாரிய பின்னடைவு ஒன்றை எதிர்நோக்கியுள்ளது.

உபாதை என்கின்ற ஒன்றானது ஒவ்வொரு வீரருக்கும் மிகவும் சவாலான ஒன்றாக மாறியிருக்கின்றது. தென்னாபிரிக்க அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டைன் கடந்த மூன்று வருடங்களாக தோள்பட்டை உபாதை காரணமாக கடுமையான முறையில் பாதிக்கப்பட்டு வருகின்றார். கடந்த 2016 நவம்பர் மாதம் இதற்காக அவுஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் ஒரு வருடகாலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் எவ்விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். பின்னர் மீண்டும் வழமையாக போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.  இந்நிலையில், இவ்வருடம் நடைபெற்றிருந்த இந்தியன் ப்ரீமியர் லீக் (.பி.எல்) தொடரில் ஆஸி. வீரர் நதன் கோல்டர் நைலுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக மாற்று வீரராக தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டைன் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

பின்னர் போட்டிகளில் விளையாடி சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். அத்தொடரில் விளையாடுகின்ற போது ஸ்டைனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் வீக்க நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக .பி.எல் தொடரிலிருந்து டேல் ஸ்டைன் இடைநடுவில் வெளியேறியிருந்தார்.

உலகக் கிண்ண தொடரில் ஸ்டைன் விளையாடுவது அவ்வணிக்கு மிகப்பலமாக அமையும் என்ற காரணத்தினால் அவருக்கு விசேடமான மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் தென்னாபிரிக்க அணியின் உலகக் கிண்ண குழாமிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.  

இந்நிலையில், உலகக் கிண்ண தொடருக்கு முன்னரான பயிற்சிப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகின. முதல் நாளில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் எதிர்பார்ப்பு வீரரான டேல் ஸ்டைன் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து தென்னாபிரிக்க அணி விளையாடிய அவர்களது இரண்டாவது பயிற்சிப் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. பயிற்சிப் போட்டி என்பதனால் தான்  ஸ்டைன் விளையாடவில்லை என எல்லோரும் எண்ணியிருந்தார்கள்.  

ஆனால், டேல் ஸ்டைன் குறித்த உபாதையிலிருந்து இன்னும் பூரண குணமடையவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ஓட்டிஸ் கிப்ஸன் குறிப்பிடுகையில்,

தற்போது டேல் ஸ்டைன் பூரண குணமடையவில்லை. தொடர்ந்தும் உரிய வேகத்தில் பந்துவீச அவரால் முடியவில்லை. இருந்தும் அவர் தனது ஆட்டத்திறனில் உறுதியாக உள்ளார். தொடர்ந்தும் எங்களது மருத்துவ குழு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது. உலகக் கிண்ண தொடர் ஆறு வாரங்கள் நடைபெறவுள்ளன. ஆகவே, இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஸ்டைன் விரைவில் முழுமையாக உடற்தகுதி பெற்று உலகக் கிண்ண தொடரில் விளையாடுவர் என்ற நம்பிக்கை உள்ளது.’

இம்முறை உலகக் கிண்ணத்திலும் ஹட்ரிக் எடுக்க எதிர்பார்க்கும் லசித் மாலிங்க

வயது அதிகரித்துச் செல்கின்ற போதிலும், இலங்கையின் வேகப்பந்து…

நாளை (30) நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடனான போட்டியில் டேல் ஸ்டைன் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அதனை தொடர்ந்து ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியிலும் டேல் ஸ்டைன் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ககிஸோ ரபாடா, லுங்கி ங்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் கிறிஸ் மொரிஸ் ஆகிய நான்கு வீரர்கள் வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் செயற்படுவார்கள் என தெரியவருகின்றது.   

கடந்த 2004ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மூலமாக தென்னாபிரிக்க அணியில் சர்வதேச அறிமுகம் பெற்ற 35 வயதான டேல் ஸ்டைன் 93 டெஸ்ட் போட்டிகள், 125 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 44 டி20 சர்வதேச போட்டிகள் என்பவற்றில் விளையாடி மொத்தமாக 696 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தி அவ்வணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியர்கள் வரிசையில் டேல் ஸ்டைன் முதலிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<