அயர்லாந்துக்கு எதிராக புலாவாயோ, குவீன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ICC உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் 133 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியதுடன், சுபர் 6 சுற்றில் விளையாட தகுதி பெற்றுக் கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன குவித்த சதம், சதீர சமரவிக்ரமவின் அரைச் சதம் மற்றும் வனிந்து ஹஸரங்கவின் 5 விக்கெட் குவியல் ஆகியன இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கெதிராக நடைபெற்ற குறித்த போட்டியில் திமுத் கருணாரத்னவும், வனிந்து ஹஸரங்கவும் முக்கிய பல சாதனைகளை நிகழ்த்தினர். அதுதொடர்பிலான முழுமையான பார்வையை இங்கு பார்க்கலாம்.
திமுத்தின் அபார இன்னிங்ஸ்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை ஒருநாள் அணிக்கு திரும்பிய டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, இந்தப் போட்டியில் வைத்து ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார். இதன்மூலம் அவர் இலங்கை அணிக்காக 1,000 ஒருநாள் ஓட்டங்களைக் கடந்த 35ஆவது வீரராக இடம்பிடித்தார். இதுவரை அவர் 36 இன்னிங்ஸ்களில் 1,095 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் திமுத் அரைச் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 5 ஒருநாள் போட்டிகளில் அரைச் சதமடித்த இலங்கை அணியின் 3ஆவது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இடம்பிடித்தார். இதற்கு முன், சனத் ஜயசூரிய (1997இல்), திலகரத்ன டில்ஷான் (2013இல்) ஆகியோர் இதே சாதனையை செய்திருந்தனர்.
அதேபோல, இலங்கை சார்பில் தொடர்ச்சியாக 5 ஒருநாள் போட்டிகளில் அரைச் சதமடித்தவர்களில் 5ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டார். இந்தப் பட்டியலில் சனத் ஜயசூரிய (1997), திலகரத்ன டில்ஷான் (2013), குமார் சங்கக்கார (2014) மற்றும் தினேஷ் சந்திமால் (2016) ஆகியோர் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.
உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் உலக சாதனை படைத்த வனிந்து ஹஸரங்க
அத்துடன், இந்தப் போட்டியில் தனது 11ஆவது ஒருநாள் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த அவர், தனது முதலாவது ஒருநாள் சதத்துடன், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையையும் பதிவு செய்தார். 103 பந்துகளுக்கு முகங்கொடுத்து 103 பந்துகளைக் குவித்த அவர், 8 பௌண்டரிகளையும் அடித்தார்.
இதற்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது அதிகபட்ச எண்ணிக்கை 97 ஓட்டங்களாகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் 2019 ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே திமுத் கருணாரத்ன 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தனது 40ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 35 வயதான திமுத் கருணாரத்ன, ஒருநாள் போட்டிகளில் கன்னி சதமடித்த வயதான இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். முன்னதாக 2009ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் திலான் சமரவீர தனது கன்னி ஒருநாள் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு 32 வயதாகும். இதன்மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குறித்த சாதனையையும் திமுத் முறியடித்தார்.
அதேபோல, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை அடித்த வயதான துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் திமுத் 15ஆவது இடத்தில் உள்ளார்.
வனிந்துவின் சாதனை பந்துவீச்சு
இலங்கை இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் 16 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் வனிந்து ஹஸரங்க உள்ளார். இம்முறை ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்கும் பந்துவீச்சாளராகவும் அவர் இருந்து வருகிறார்.
அதுமாத்திரமின்றி, தனது பந்தவீச்சின் மூலம் பல முக்கிய சாதனைகளையும் அவர் முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிரான போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், ஓமான் அணிக்கெதிரான போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வனிந்து வீழ்த்தினார்.
இதன்மூலம் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழல் பந்துவீச்சாளராக வனிந்து புதிய வரலாறு படைத்தார். அதேபோல, அந்த திறமையை வெளிப்படுத்திய உலகின் 2ஆவது வீரராக இடம்பிடித்தார். இதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ், 1990இல் தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதனிடையே, தொடர்ச்சியாக 5 ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் (22 விக்கெட்) எடுத்த பந்துவீச்சாளராக அஜந்த மெண்டிஸைப் பின்தள்ளி முதலிடம் பிடித்தார். இந்தப் பட்டியலில் அஜந்த மெண்டிஸ் (2008 – 20 விக்கெட்) 2ஆவது இடத்தையும், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் (2018 – 20 விக்கெட்) 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<