கிரிக்கெட்டில் நீண்ட காலமாக பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிந்து விளையாடுவார்கள். எதிரணியின் ஆக்ரோஷ பந்து வீச்சில் தலையை தாக்கக்கூடாது என்பதற்காக பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிந்து விளையாடி வருகிறார்கள்.
அதன்பின் வீரர்கள் பேட்ஸ்மேன் அருகில் நின்று பீல்டிங் செய்யும்போது தலையில் அடிபடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணிவார்கள். அதேபோல் விக்கெட் கீப்பரும் சுழற்பந்து வீச்சுக்கு ஸ்டம்ப் அருகில் நிற்கும்போது ஹெல்மெட் அணிவார்கள்.
தற்போது வீரர்களைத் தாண்டி மைதான நடுவர்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்போது முதன்மை நடுவர்கள் எதிர்முனை ஸ்டம்ப் அருகில் நின்று கொண்டிருப்பார்கள். அப்போது பேட்ஸ்மேன் ‘ஸ்ட்ரெய்ட் ஷார்ட்’அடிக்கும்போது பந்து நடுவரை நோக்கி சீறி வரும். இதை உன்னிப்பாக கவனிக்கும் நடுவர் கீழே விழுந்து அல்லது விலகி தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். சில சமயங்களில் நடுவரின் உடல்களை பதம் பார்ப்பதும் உண்டு. இதே பந்து தலையில் பட்டால்?….
ஆகவே, நடுவர்களும் தங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த முன் வந்துள்ளனர். முதன்முறையாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் வார்டு என்ற நடுவர் ஹெல்மெட் அணிந்து நடுவராகப் பணிபுரிந்தார். இதனால் சர்வதேசப் போட்டியில் ஹெல்மெட் அணிந்து பணிபுரிந்த முதல் நடுவர் என்ற பெயரைப் பெற்றார்.
அதன்பின் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு நடுவராக புருஸ் ஆக்சன்போர்டு ஐ.பி.எல். மற்றும் டி20 உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றின்போது போர் வீரர் கையில் பாதுகாப்பு கேடயம் வைத்திருப்பதுபோல் வலது கையில் பாதுகாப்புக் கவசம் கட்டிக்கொண்டு பணியாற்றினார்.
நேற்று இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் பாதுகாப்புக் கவசத்துடன் களம் இறங்கினார். இதன்மூலம் சர்வதேசப் போட்டியில் பாதுகாப்புக் கவசத்துடன் களம் இறங்கிய முதல் நடுவர் என்ற பெயரை அவர் பெற்றார்.
ஆனால், பீல்டிங் செய்யும் வீரரின் ஹெல்மெட் மீது பந்து பட்டு கேட்ச் ஆனால் பேட்ஸ்மேன் அவுட் என கருத இயலாது. அது டெட் பாலாக அறிவிக்கப்படும். தற்போது நடுவர் கையில் உள்ள ஷீல்டு மீது பந்து பட்டு கேட்ச் ஆனால் பேட்ஸ்மேன் அவுட்டுதான்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்