இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க, நடைபெற்று முடிந்திருக்கும் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் மந்த கதியில் ஓவர்களை வீசி போட்டியை தாமதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழு B இற்கான இப்போட்டியில், இலங்கை அணித்தரப்பு வழமைக்கு மாற்றமாக 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்தது. ஒரு அணிக்கு 50 ஓவர்கள் வீச வழங்கப்படும் நேரத்தில் நான்கு ஓவர்கள் குறைவாகவே இலங்கை அணி வீசியிருந்தது. இப்போட்டிக்கு ஐ.சி.சி போட்டி மத்தியஸ்தராகக் கடமையாற்றிய டேவிட் பூன் இக்குற்றச்சாட்டை நிரூபித்திருருந்தார்.
இலங்கையின் படுதோல்விக்கு காரணமாக இருந்த அம்லா மற்றும் தாஹிர்
எனவே, ஐ.சி.சி இன் மந்த கதி ஓவர்கள் தொடர்பான சட்டக்கோவை விதிமுறைகள் சாரம் 2.5.2 இன் அடிப்படையில், இக்குற்றத்திற்காக இலங்கை அணி வீரர்களுக்கு போட்டிக்கட்டணத்தில் 60% அபாரதமும் இலங்கை அணித்தலைவருக்கு இரண்டு போட்டித்தடை புள்ளிகளும் தண்டனையாக வழங்கப்பட்டிருக்கின்றது.
[rev_slider ct17-dsccricket]
இரண்டு போட்டித்தடை புள்ளிகளை வீரர் ஒருவர் பெறுவராயின் அவரிற்கு அடுத்து முதலாவதாக வரும் ஒரு டெஸ்ட் போட்டியிலோ அல்லது இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாது இருக்கும். எனவே, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை விளையாட இருக்கும் இந்திய அணியுடனுடனான போட்டியிலும் (ஜூன் 8), பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் (ஜூன் 12) உபுல் தரங்கவிற்கு பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
உபுல் தரங்க தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தினை ஒப்புக் கொண்ட காரணத்தினால், மேலதிக விசாரணைகள் எதற்கும் தேவை ஏற்பட்டிருக்கவில்லை.
சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணி மோதும், அடுத்த போட்டி ஆரம்பமாக இன்னும் நான்கு நாட்கள் வரையில் இருப்பதனால், காயம் காரணமாக ஓய்விலிருக்கும் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இக்காலப்பகுதியில் பூரண உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த போட்டியில் சிலவேளைகளில் மெதிவ்சின் உடற்தகுதி கேள்விக்குறியாகும் பட்சத்தில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் செயற்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.