இலங்கையின் படுதோல்விக்கு காரணமாக இருந்த அம்லா மற்றும் தாஹிர்

857

சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக இலங்கை மற்றும் தென்னாபிரிக்க ஆகிய அணிகள் மோதிய குழு B இற்கான போட்டியில், 96 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி தென்னாபிரிக்க அணியானது சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது.

லண்டன் ஓவல் மைதானத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த  இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கவினால் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி குயின்டன் டி கொக் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோருடன் துடுப்பாட மைதானம் விரைந்திருந்தது.

>> இலங்கை – தென்னாபிரிக்கா இடையிலான போட்டியின் ICCயின் வீடியோக்களைப் பார்வையிடுங்கள் 

தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் போட்டியை மெதுவாகவே தொடங்கியிருந்தனர். ஆரம்பத்தில் சுரங்க லக்மால் வீசிய போட்டியின் நான்காவது ஓவரில் இலங்கை அணிக்கு விக்கெட் பெறும் வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்ற போதிலும் மூன்றாம் நடுவரினால் அது ஆட்டமிழப்பு இல்லை என மறுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்தும் மந்த கதியிலான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட் அவ்வணி, 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் பறிபோனது. இதன் போது, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குயின்டன் டி கொக் 23 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியிருந்தார். இலங்கை அணிக்கு மிகவும் தேவையாக இருந்த தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டானது நுவன் பிரதீப் மூலம் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த விக்கெட்டினை அடுத்து களத்தில் நின்ற ஹஷிம் அம்லா உடன் கைகோர்த்த பாப் டு ப்லெசிஸ் நிதானமாகவும் நுட்பமாகவும் ஆடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அம்லா-டு ப்லெசிஸ் ஜோடியினால் இரண்டாம் விக்கெட்டுக்காக உறுதியான 145 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டதுடன் தென்னாபிரிக்க அணியானது மிகவும் வலுவான நிலைக்குச் சென்றது.

அவ்வணியின் மூன்றாம் விக்கெட்டாக மீண்டும் நுவன் பிரதீபின் பந்து வீச்சில் ஆட்டமிழந்த டு ப்லெசிஸ், மொத்தமாக 70 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களை குவித்திருந்தார். தொடர்ந்து வந்த தென்னாபிரிக்க அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில் தனது துடுப்பாட்ட திறமையை வெளிக்காட்டியிருந்த ஹஷிம் அம்லா தனது 25ஆவது ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்தார்.

குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் துரித கதியிலான செயற்பாட்டில் ரன் அவுட் செய்யப்பட்ட அம்லா மொத்தமாக 115 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதனையடுத்து மத்திய வரிசையில் துடுப்பாட வந்திருந்த ஜே.பி. டுமினியின் அதிரடி ஆட்டத்துடன், 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி 299 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த இடது கை துடுப்பாட்ட வீரரான ஜே.பி டுமினி வெறும் 20 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 5 பவுண்டரிகளுடன் ஒரு சிக்ஸர் விளாசி 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் பந்து வீச்சு ஆரம்பத்தில் எதிரணியை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருந்த போதிலும், பின்னைய நேரங்களில் அவ்வாறு அமைந்திருக்கவில்லை. இலங்கை அணியின் பந்து வீச்சில் நுவன் பிரதீப் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சீக்குகே பிரசன்ன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

[rev_slider ct17-dsccricket]

தொடர்ந்து, 50 ஓவர்களில் 300 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் சிறப்பாட்டம் மூலம் நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றிருந்தது.

கச்சிதமான ஆட்டம் மூலம் பவுண்டரி எல்லைகளை பதம் பார்த்தருந்த திக்வெல்ல 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 41 ஓட்டங்களைப் பெற்று மோர்ன் மொர்க்கலின் பந்து வீச்சில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இலங்கை அணி சீரான இடைவெளியில் இரண்டாவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது. இரண்டாம் விக்கெட்டாக குசல் மெண்டிஸ் குறைவான ஓட்டங்களுடன் (11) ஓய்வறை திரும்பியிருப்பினும் இலங்கை அணியானது தமது இலக்கை தொடும் பயணத்தில் வலுவாகவே காணப்பட்டிருந்தது.

இவ்வாறனதொரு நிலையில், தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி. டி வில்லியர்ஸ் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்த ரன் அவுட் மூலம் நான்காம் இலக்க வீரராக களமிறங்கியிருந்த தினேஷ் சந்திமால் ஓய்வறை திரும்பியிருந்தார். இவரின் விக்கெட்டினை தொடர்ந்து போட்டியின் 18ஆவது ஓவரினை வீசிய இம்ரான் தாஹிர் புதிதாக களம் நுழைந்திருந்த சாமர கப்புகெதரவை ஓட்டம் ஏதுமின்றி சடுதியாக ஆட்டமிழக்கச் செய்தார். இதனால், குறுகிய இடைவெளியில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 117 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மீண்டும் சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த இம்ரான் தாஹிர் இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கவையும் வீழ்த்த போட்டி தென்னாபிரிக்க அணியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதனையடுத்து களம் நுழைந்த இலங்கை அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் குசல் பெரேரா தவிர ஏனைய வீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிக்காட்ட முடிவில், 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த  இலங்கை அணி 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இப்போட்டியில் 96 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக 69 பந்துகளை எதிர்கொண்ட உபுல் தரங்க 57 ஓட்டங்களை 6 பவுண்டரிகள் அடங்கலாக பெற்றிருந்ததோடு, இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்ற குசல் பெரேரா போராட்டத்தினை வெளிப்படுத்தி 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில், இலங்கை அணிக்கு அதிக நெருக்கடி தந்திருந்த இம்ரான் தாஹிர் மொத்தமாக 27 ஓட்டங்களுக்கு 4  விக்கெட்டுகளையும், வலதுகை வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் மொரிஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இம்ரான் தாஹிர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இலங்கை அணியானது சம்பியன்ஸ் கிண்ணத்தில் அடுத்ததாக, இந்திய அணியுடன் ஜூன் மாதம் 8ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா – 299/6 (50) – ஹஷிம் அம்லா 103(115), பாப் டு ப்லெசிஸ் 75(70), ஜே.பி டுமினி 38*(20), குயின்டன் டி கொக் 23(42), நுவன் பிரதீப் 54/2(10), சுரங்க லக்மால் 51/1(10), சீக்குகே பிரசன்ன 72/1(10)

இலங்கை – 203 (41.3) – உபுல் தரங்க 57(69), குசல் பெரேரா 44*(66), நிரோஷன் திக்வெல்ல 41(33), இம்ரான் தாஹிர் 27/4(8.3), கிரிஸ் மொர்ரிஸ் 32/2(7)

போட்டி முடிவு – தென்னாபிரிக்க அணி 96 ஓட்டங்களால் வெற்றி.