சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின், அரையிறுதிப்போட்டிகளில் விளையாடவுள்ள குழு B இலிருந்தான மேலதிக அணி யார் என்பதனை தீர்மானிக்கும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி குழு B இல் இருந்து இந்திய அணியுடன் சேர்த்து அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
கார்டிப் நகரில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணியை துடுப்பாடுமாறு பணித்திருந்தார்.
இதன்படி, நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருடன் மைதானம் விரைந்திருந்த இலங்கை அணியானது நிதானமான ஆரம்பத்தையே வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொடக்க வீரர்களில் ஒருவராக வந்திருந்த தனுஷ்க குணத்திலக்க இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான் மூலம் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை அனுப்பப்பட்டார். இதனால், அவரது இன்னிங்ஸ், குறுகிய ஓட்டங்களுடன் (13) முடிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, களத்திற்கு வந்த குசல் மெண்டிஸ், களத்தில் நின்றிருந்த திக்வெல்ல உடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டிற்காக 56 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், ஹசன் அலியின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டிருந்தார். ஆட்டமிழக்கும் போது, மெண்டிஸ் 29 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதனை அடுத்து களத்திற்கு நுழைந்த தினேஷ் சந்திமால் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் சடுதியாக இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்த இலங்கை அணி, 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறத் தொடங்கியது.
எனினும், களம் நுழைந்த அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் அழுத்தங்களை நுட்பமாக எதிர்கொண்டு அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியிருந்தார்.
மெதிவ்சின் உதவியுடன் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டிற்காக, 78 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டதுடன் மொஹம்மட் அமீரின் பந்து வீச்சில் ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட மெதிவ்ஸ், 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 54 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மெதிவ்சின் விக்கெட்டினைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் அபாரப் பந்துவீச்சினால் இலங்கை அணியின் 3 விக்கெட்டுகள் வெறும் ஆறு ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட ஒரு கட்டத்தில், இலங்கை அணி 167 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், களத்தில் நின்ற அசேல குணரத்ன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரின் நிதானமான இணைப்பாட்டத்துடன், 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணியானது 236 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக நிரோஷன் திக்வெல்ல 86 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களையும், பின்வரிசையில் அணியை பாரிய சரிவிலிருந்து மீட்டெடுத்த அசேல குணரத்ன பெறுமதிமிக்க 27 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 26 ஒட்டங்களையும் பெற்றுத்தந்தனர்.
[rev_slider ct17-dsccricket]
சிறப்பான பந்து வீச்சினை வெளிகாட்டியிருந்த பாகிஸ்தான் அணியில், ஜூனைத் கான், ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், மொஹமட் அமீர் மற்றும் இன்றைய போட்டியின் மூலம் அறிமுகமாகிய பாஹிம் அஷ்ரப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து வெற்றியிலக்காக, நிர்ணயிக்கப்பட்ட 237 ஓட்டங்களைப்பெற பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்கர் சமானின் அதிரடி ஆட்டம் மூலம், சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக பறிபோயிருந்த, சமான் 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, இலங்கை அணிப் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளிகளில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களை ஓய்வறை அனுப்பியிருந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணியானது 136 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில், களத்தில் நின்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் உடன் கைகோர்த்திருந்த பாஹிம் அஷ்ரப் சிறிது போராட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறனதொரு நிலையில், அணியின் 7ஆம் விக்கெட்டாக திசர பெரேராவின் ரன் அவுட் மூலம் பாஹிம் அஷ்ரப் 15 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்ப போட்டி முழுவதும் இலங்கை அணியின் பக்கம் சாய்ந்தது.
எனினும், 8ஆம் விக்கெட்டிற்காக அணித்தலைவர் சர்பராஸ் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமான முறையில் வீழ்த்தப்படாத இணைப்பாட்டம் ஒன்றினை (75) வழங்க, முடிவில் பாகிஸ்தான் அணியானது 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களைக் குவித்து வெற்றி இலக்கினை அடைந்தது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த அவ்வணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் 79 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களையும், மொஹமட் அமீர் பெறுமதிமிக்க 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் முன்னர் சிறப்பாக செயற்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பினும், போட்டியின் முக்கிய தருணங்களில் இரண்டு பிடியெடுப்புகளையும் பல ரன் அவுட்களையும் தவறவிட்டு களத்தடுப்பில் மிகவும் மோசமாக செயற்பட்டிருந்தனர்.
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில், நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க, சுரங்க லக்மால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இன்றைய போட்டியின் வெற்றி மூலம், சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கும் பாகிஸ்தான் அணியானது ஜூன் 14ஆம் திகதி இங்கிலாந்து அணியை முதலாவது அரையிறுதிப்போட்டியில் எதிர்கொள்கின்றது. அதேபோன்று, குழு B இல் இருந்து அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இந்திய அணியானது ஜுன் 15ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 236 (49.2) – நிரோஷன் திக்வெல்ல 73(86), அஞ்சலோ மெதிவ்ஸ் 39(54), ஜூனைத் கான் 40/3(10), ஹசன் அலி 43/3(10), பாஹிம் அஷ்ரப் 37/2(6.2), மொஹமட் அமீர் 53/2(10)
பாகிஸ்தான் – 237/7 (44.5) – சர்பராஸ் அஹ்மட் 61*(79), பக்கர் சமான் 50(36), அசார் அலி 34(50), மொஹமட் அமீர் 28*(43), நுவன் பிரதீப் 60/3(10)
முடிவு – பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி