பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
சதங்களில் சாதனை படைத்த குமார் சங்கக்கார
குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால,
“இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்டிருந்தது. எமது அணியும், எமது அணித் தலைவரும் இத்தொடரிற்காக அரும்பாடுபட்டிருந்தனர். எனினும், அது எமக்கு சம்பியன்ஸ் கிண்ணத்தில் சாதிக்க போதுமானதாக இருந்திருக்கவில்லை.
எனினும், எமது அணி இந்தியாவிற்கு எதிராக அதி சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தது. அதே ஆட்டத்தினை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் வெளிக்காட்ட துரதிஷ்டவசமாக தவறியிருந்தது. எமது அணியின் ஆட்டம் சகல துறைகளிலும் இத்தொடரில் முன்னேற்றமைடைந்திருப்பதனை காட்டுகின்றது. சிரேஷ்ட வீரர்களும், இளம் வீரர்களும் தங்களுக்குரிய பங்களிப்பினை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர். இனி வரும் காலங்களில் எமக்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் சரிவர உபயோகித்து மீண்டெழ முயற்சிப்போம்“ என்றார்.
இச்சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் தமது அணி வீரர்கள் விட்ட தவறுகளிலிருந்து பெற்றுக்கொண்ட பாடங்கள் மூலம் அவர்கள் வருங்காலங்களில் சிறப்பாக செயற்படுவார்கள் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.
“சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை சாதிக்காததையிட்டு இந்நாடு ஏமாற்றம் அடைந்ததை நாம் அறிவோம். நாமும் அதனால் ஏமாற்றம் அடைந்திருந்தோம். இத்தோல்விக்கு ஒரு அணியாக நாமே முழுப்பொறுப்பினையும் ஏற்கின்றோம். ஆனால் சிலர், குறிப்பிட்ட சில வீரர்களே இதற்கு காரணம் எனக்கூறி அவர்களின் குரல் வளையினை நெரிக்க முற்படுகின்றனர்.
அது தவறாகும், ஏனெனில் இதற்கு முழு அணியுமே பொறுப்பு. என்னைபப் பொறுத்தவரையில் இத்தொடர் எமக்கு சிறப்பாகவே அமைந்திருந்தது. நாம் முதல் போட்டியினை சிறப்பாக ஆரம்பித்திருப்பினும் துடுப்பாட்டத்தில் சொதப்பியதாலேயே தோல்வியுற்றோம். எனினும் இரண்டாம் போட்டியில் இந்திய அணியினை வீழ்த்தி சிறப்பாக செயற்பட்டிருந்தோம்.
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நாம் களத்தடுப்பில் சற்று மோசமாக செயற்பட்டிருந்தோம். அதுவே தோல்விக்கு காரணம் எனினும் எமது அணி மோசமானது என குறிப்பிட முடியாது. எதிர் காலத்தில் தவறுகளே செய்ய முடியாது என்று உறுதியாக கூற முடியாது. இவ்வாறான தவறுகளை குறைத்துக்கொண்டு, அதிலிருந்து கற்றுக்கொண்டவற்றை வைத்து நாம் சிறப்பாக செயற்படுவோம்”
என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோன்று, இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட், இலங்கை அணியானது இத்தொடரில் ஏனைய அணிகளை விட ஒப்பீட்டு ரீதியில் அதிக நல்ல விடயங்களை பெற்றிருப்பதாக கூறியிருந்தார். மேலும் இலங்கை அணியானது களத்தடுப்புகளில் விட்டிருந்த சில பிழைகளை திருத்திக்கொள்ளும் எனில், வரும் போட்டிகளில் நல்ல ஆட்டத்தினை எதிர்பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
[rev_slider ct17-dsccricket]
இலங்கை அணி, அடுத்ததாக இங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் மோதவுள்ளது.