இலங்கை அணியானது, இறுதியாக 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் அணியுடன் ஒரு நாள் தொடரொன்றில் விளையாடியிருந்தது. இலங்கை அணியின் சொந்த மண்ணில் இடம்பெற்றிருந்த ஐந்து போட்டிகள் கொண்ட அத்தொடரினை, பாகிஸ்தான் அணி 3-2 என கைப்பற்றியிருந்தது.
இந்திய அணியை திணறடித்த இலங்கையின் துடுப்பாட்டம்
சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்ட குழு B இற்கான போட்டியில், அதி சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை
அத்தொடர் நடைபெற்று, சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியானது, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் எனில், பாகிஸ்தான் அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டிய நிலையில் திங்கட்கிழமை (12) கார்டிப் நகரில் ஆரம்பமாகும் சமரில் களமிறங்கவுள்ளது.
பாகிஸ்தான் – இலங்கை ஒரு நாள் போட்டிகள் வரலாறு
நடைபெறப்போகும் போட்டியானது, இரு அணிகளும் மோதும் 148ஆவது ஒரு நாள் போட்டியாகக் காணப்படுகின்றது. இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளில் 84 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதோடு, 54 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இறுதியாக 2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழு நிலை ஆட்டமொன்றில் இலங்கையை எதிர்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.
அணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்
இலங்கை அணிக்கு, சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இங்கிலாந்து சுற்றுத்தொடர் மிகவும் மோசமானதாகவே ஆரம்பித்திருந்தது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னதாக, ஸ்கொட்லாந்து அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றில் தோல்வியடைந்திருந்த இலங்கை, அதற்கு பின்னர் இரண்டாம் போட்டியில் அவ்வணிக்கு பதிலடி தந்திருப்பினும், தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ணப் பயிற்சிப் போட்டிகளில், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக, சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியிலும் 96 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியுடனும் படுதோல்வியடைந்த இலங்கை அணியானது சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து வெளியேறும் அபாயத்திற்கு உள்ளாகியிருந்தது. எனினும், இறுதியாக விளையாடிய போட்டியில் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை சம்பியன்ஸ் கிண்ணத்தின் நடப்புச் சம்பியன்களான இந்திய அணியினை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், சம்பியன்ஸ் கிண்ணத்தில் கத்துக்குட்டியாக நுழைந்திருப்பினும் தாங்கள் பலம் வாய்ந்த எந்த அணியையும் வீழ்த்தும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதனை நிரூபித்திருந்தது.
[rev_slider ct17-dsccricket]
ஒரு நாள் தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு மீண்டும் முன்னேறியிருக்கும் இலங்கை அணியானது, 2016ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 29 ஓரு நாள் போட்டிகளில் விளையாடியிருப்பதுடன், அதில் 9 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை சம்பியன்ஸ் கிண்ணத்தினை வெற்றி பெறாத அணிகளில் ஒன்றாகக் காணப்படும் பாகிஸ்தான் அணியின் அண்மைய ஆட்டத்தினை எடுத்துப் பார்க்கும் போது, சம்பியன்ஸ் கிண்ணத்தில் பலம் குறைந்த பங்களாதேஷ் அணியினை சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் அவ்வணி வீழ்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணியுடனும் பயிற்சிப் போட்டியில் மோதியிருப்பினும், அப்போட்டி முடிவு ஏதுமின்றி நிறைவுபெற்றிருந்தது.
திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டதா? உண்மைச் சம்பவம் இதுதான்
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணியினர் நேற்று (சனிக்கிழமை) கார்டிப்பில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது,
இதனையடுத்து, சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் இந்திய அணியின் மூலம் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சிதறடிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 124 ஓட்டங்களால் படுதோல்வியடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக, 19 ஓட்டங்களால் டக்வத் லூவிஸ் முறையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற காரணத்தினால், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்கின்றது.
பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணியுடனான போட்டி அரையிறுதி வாய்ப்பினை தீர்மானிப்பதால் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 2016ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்று வரை 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான் அணியானது அதில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது.
இலங்கை அணி
இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் இலங்கை அணியானது சம்பியன்ஸ் கிண்ணத்தில் தமக்கு வாழ்வா? அல்லது சாவா? என்கிற நிலையில் களமிறங்குகின்றது. இலங்கை அணியினை பொறுத்த மட்டில், சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இந்த இங்கிலாந்து தொடரினை எடுத்துப் பார்க்கும் போது தென்னாபிரிக்க அணியுடன் தவிர்ந்த ஏனைய அனைத்து போட்டிகளிலும், சிறப்பான துடுப்பாட்ட வலிமையினை வெளிக்காட்டியிருந்ததை அவதானிக்க முடிகின்றது. அதிலும், குறிப்பாக இந்திய அணியுடனான போட்டியில் அதிக அழுத்தங்கள் காணப்பட்டிருப்பினும் அனைவரினையும் மலைக்க வைக்கும் விதமாக இலங்கை வீரர்கள் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
எனவே, இதே வகையிலான துடுப்பாடத்தினை இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும். இலங்கை அணியின் பந்து வீச்சினை எடுத்துப் பார்க்கின்ற போது, அது சற்று மோசமாகவே காணப்படுகின்றது. இலங்கை பந்து வீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை வாரி இறைப்பவர்களாக செயற்படுகின்றனர். இதனை அடுத்த போட்டியில் இலங்கை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.
இந்திய அணியுடனான போட்டியின் போது, உபாதைக்கு உள்ளாகியிருந்த குசல் ஜனித் பெரேரா தற்போது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார். இதன் மூலம், உபுல் தரங்கவிற்கு அடுத்து நல்ல ஆட்டத்தினை வெளிக்காட்டி வந்த மத்திய வரிசை வீரர் ஒருவரிற்கு பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணியின் குழாமில் விளையாடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. இது இலங்கை அணிக்கு ஏற்பட்ட மற்றுமொரு பாரிய இழப்பாகும்.
இறுதியாக பாகிஸ்தான் அணியினை இலங்கை எதிர்கொண்டிருந்த ஒரு நாள் தொடரில் இலங்கை சார்பாக குசல் பெரேராவினாலேயே அதிக ஓட்டங்கள் (230) குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரேராவிற்கு பதிலாக அணியில், தனன்ஞய டி சில்வா பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.
எனினும், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக சிறப்பாக செயற்படக் கூடிய வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். பாகிஸ்தான் அணிக்கெதிராக இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் மெதிவ்ஸ் 43.90 என்னும் ஒட்ட சராசரியினை வைத்திருக்கின்றார். இது, பாகிஸ்தான் அணிக்கு மெதிவ்ஸ் நெருக்கடி தருவார் என்பதினை அதிகம் பறைசாற்றி நிற்கின்றது.
அதேபோன்று, குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்ன மற்றும் தனுஷ்க குணத்திலக்க போன்ற இளம் வீரர்களும் தற்போது நல்ல ஆட்டத்தினை வெளிக்காண்பித்து வருவதனால் இலங்கை அணியின் துடுப்பாட்டம் இவர்கள் மூலம் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து மைதானங்கள் இம்முறை வேகப்பந்து வீச்சிற்கு சாதமாக அமைகின்ற காரணத்தினால், இலங்கை அணியின் பந்து வீச்சினை பொறுத்தமட்டில், அது லசித் மாலிங்க, சுரங்க லக்மால், நுவன் பிரதீப் மற்றும் திசர பெரேரா ஆகியோரில் தங்கியிருக்கின்றது. இதில், கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஒரு நாள் போட்டிகளின் போது லசித் மாலிங்க (47) மற்றும் திசர பெரேரா (32) ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்தது பதிவுகள் மூலம் அறியக் கிடைக்கின்றது. எனவே, இவர்களின் பந்து வீச்சு மூலம் இலங்கை வலுப்படுமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி – தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டில், தனன்ஞய டி சில்வா, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), அசேல குணரத்ன, திசர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, நுவன் பிரதீப்
பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, அவ்வணி அனுபவம் குறைந்த பல புதுமுக வீரர்களை கொண்டிருப்பதால் அவ்வணியின் ஆட்டத்தினைப் பற்றி எதுவும் எதிர்வு கூற முடியாது காணப்படுகின்றது. அண்மைய காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் தத்தளித்து வரும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், பயிற்சி ஆட்டமாக நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியை தவிர வேறு எந்த போட்டிகளிலும் திறமையான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை. பந்து வீச்சிலும், அவ்வணி இதே நிலைமையில் காணப்பட்டிருப்பினும், அவர்களது கடந்த போட்டியில் ஒரு நாள் தரவரிசையில் பலம்பொருந்திய துடுப்பாட்ட வீரர்களுடன் முதலிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணியை கட்டுப்படுத்தியிருந்தது கவனிக்கத்தக்க விடயமாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்ததே பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள உதவியாய் இருந்தது – அசேல குணரத்ன
மணிக்கு 138 கிலோமீட்டர் வேகத்தில்
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தினை பொறுத்த மட்டில், இலங்கை அணிக்கெதிராக 40 இற்கு மேலாக ஒரு நாள் போட்டிகளில் ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் மொஹமட் ஹபீஸ், அஹ்மட் ஷேசாத் மற்றும் அசார் அலி ஆகிய வீரர்கள் முன்னைய காலங்களில் இலங்கை அணிக்கெதிராக சிறப்பாக செயற்பட்டு இருப்பினும் அவர்கள் தொடர்ந்து அவ்வாறு நீடிப்பார்களா என்பது அவர்களது அண்மைய ஆட்டங்கள் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அசார் அலி இந்திய அணிக்கெதிரான போட்டியில் அரைச்சதம் ஒன்றினைப் பெற்றிருப்பினும், தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் மிக மோசமான ஆட்டத்தினை காட்டியிருந்தார். எனவே, பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் இளம் வீரர்களிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றது.
இவ்வணியின், பந்து வீச்சினை பொறுத்தமட்டில் கடந்த போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு நெருக்கடி தந்திருந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி வரும் போட்டியில் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரும் வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அதே போன்று, பாகிஸ்தான் குழாம் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் இமாத் வஸீம் மற்றும் சதாப் கான் ஆகியோர் மூலமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி – அசார் அலி, பக்கார் சமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், மொஹம்மட் அமீர், சதாப் கான், ஹசன் அலி, ஜூனைத் கான்
சம்பியன்ஸ் கிண்ண குழு B இனைப் பொறுத்தவரை எந்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு செல்லப்போகின்றன என்பது, இந்தியா எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு மற்றும் இலங்கை எதிர் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தெரிய வரும்.
நிறைய போட்டிகளில் மழை குறுக்கிடுகின்ற காரணத்தினால் எதிர்பார்க்க முடியாத முடிவுகளும் சிலவேளை அமைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகம் உள்ளன. எனவே, முடிவுகள் சிறப்பாக அமைந்து இலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத்தில் மேலும் சாதிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.