பாகிஸ்தான் அணியுடனான சமரில் இந்திய அணி இலகு வெற்றி

339
Getty Images

பர்மிங்ஹம், ஏஜ்பாஸ்டனில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக ’பி’ குழுவில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.  

அதற்கமைய துடுப்பாடக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 136 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட அதேவேளை இந்திய அணிக்காக சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஷிகர் தவான் 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். பின்னர் அதிரடியாக துடுப்பாடி 48 பந்துகளில் அரைச் சதம் கடந்தார்.  

எனினும் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டத்தை சதாப் கான் 25ஆவது ஓவரில் வீழ்த்தினார். ஷிகர் தவான் 65 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை சதாப் கானின் பந்து வீச்சில் அசார் அலியிடம் பிடிகொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் இணைந்து கொண்ட ரோஹித் ஷர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 91 ஓட்டங்களைப் பதிவு செய்திருந்த வேளை துரதிஷ்டவசமாக சப்ராஸ் அஹ்மதின் சிறந்த களத்தடுப்பு காரணமாக ரன் அவுட் மூலம் ஓய்வறை திரும்பினார். அதனைத் தொடர்ந்து மழையின் குறுக்கீட்டின் மத்தியில் அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் இணைந்து கொண்ட யுவராஜ் சிங் அதிரடியாக துடுப்பாடி அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார்.

மழை காரணமாக இரண்டு தடவைகள் போட்டி இடைநிறுத்தப்பட்டதால் 48 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது. மழையின் பின்னர் இந்திய வீரர்கள் அதிரடியாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர்.

[rev_slider ct17-dsccricket]
.

சிறப்பாக துடுப்பாடிய யுவராஜ் சிங் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 53 ஓட்டங்களுக்கு ஹசன் அலியின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார். எனினும் இறுதிவரை அதிரடியாக துடுப்பாடிய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களையும், தனது முதலாவது சம்பியன்ஸ் கிண்ணத்தில் பங்குபற்றிய ஹர்திக் பாண்டியா வெறும் 6 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்டு 20 ஓட்டங்களை விளாசினார்.

இறுதியில் இந்திய அணி 48 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கடின வெற்றி இலக்குடன் துடுப்பாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படும் போது 4.5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தது. மழையின் பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட வெற்றி இலக்கு 41 ஓவர்களில் 289 என மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.

மழையின் பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 33.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட நிலையில் இந்திய அணி 124 ஓட்டங்களால் டக்வத் லூவிஸ் முறைப்படி வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணி சார்பாக அசார் அலி 50 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும், ஏனையோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றமை அவர்களது தோல்விக்கு முக்கிய காரணியாக இருந்தது.

இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான மற்றுமொரு போட்டி இன்றைய தினம் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 319/3 (48) – ரோஹித் ஷர்மா 91, ஷிகர் தவான் 68, விராத் கோஹ்லி 81*, யுவராஜ் சிங் 53, சதாப் கான் 52/1

பாகிஸ்தான் – 164 (33.4) – அசார் அலி 50, மொகமட் ஹபீஸ் 33, அஹமட் ஷெசாத் 12, உமேஷ் யாதவ் 30/3, ரவிந்திர ஜடேஜா 43/2, ஹர்திக் பாண்டியா 43/2

முடிவு – இந்திய அணி 124 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறை)