நான் பழைய மாலிங்க அல்ல : வெளிப்படையாகக் கதைத்த லசித் மாலிங்க

3750
Lasith Malinga

கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் உள்ள அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தி வந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, நான் முன்னர் போன்று சிறந்த முறையில் செயற்படவில்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்விடைந்தமையினால், அத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியதும் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்பொழுதே மாலிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது

இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க, பின்னர் காயம் காரணமாக சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து அணிக்காக விளையாடாமல் இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து இறுதியாக பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற T-20 தொடரிலேயே அவர் நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் இலங்கை அணியில் இணைந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடியதன் மூலம் மாலிங்க 19 மாதங்களின் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட போட்டியொன்றுக்காக இலங்கை அணியில் இணைந்துகொண்டார்.

இலங்கை அணி இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாடியிருந்தார். எனினும், மொத்தமாக 3 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். இந்நிலையில் இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்பட்டது.

அதற்கு அவர், “எனக்கு இப்பொழுது 33 வயதாகின்றது. நான் முன்னர் நிறைய சாதித்துள்ளேன். எனினும் இப்பொழுது முடியாமல் உள்ளது. ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. எனினும் நான் தற்பொழுது போட்டிகளை வெற்றி பெற வைக்கும் பந்து வீச்சாளராக இல்லை. எனது முன்னைய திறமை என்னிடம் இருக்கின்றது என நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இறுதியாக பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியின் களத் தடுப்பு மிகவும் மோசமாக இருந்தமையே தோல்விக்கு காரணம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும், மாலிங்க அவ்வாறான விமர்சனங்களை முழுமையாக மறுத்தார்.

சதங்களில் சாதனை படைத்த குமார் சங்கக்கார

அணி பிடியெடுப்புக்களை தவறவிட்டபோது எனக்கு கோபம் வரவில்லை. நான் இதைவிட அதிகமான பிடியெடுப்புக்களை தவறவிட்டுள்ளேன். எந்த ஒரு வீரரும் சிறப்பாக செயற்படும்போது அது குறித்து கதைக்காத மக்கள், வீரர்கள் தவறுவிடும்பொழுது அது குறித்தே கதைப்பதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் களத் தடுப்பில் சில தவறுகள் விடப்பட்டாலும், ஒரு அணியாக நாம் சிறந்த முறையில் செயற்பட்டதாகவும் மாலிங்க தெரிவித்தார்.

தனது எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ”நான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவேனா இல்லையா என்று எனக்கே தெரியாது. தெரிவுக்குழு என்னை அணியில் இணைத்தால் விளையாடுவேன். எனினும் தற்பொழுது நுவன் பிரதீப், சுரங்க லக்மால், குலசேகர போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் லசித் மாலிங்க இலங்கை அணியில் இருப்பதையே இலங்கை அணியின் ரசிகர்கள் மாத்திரமன்றி அதிகமான கிரிக்கெட் ரசிகர்களும் விரும்புகின்றனர். எனினும், 2019ஆம் அண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது.

மாலிங்கவின் பந்து வீச்சில் முன்னர் இருந்த வேகம் தற்பொழுது இல்லாமல் போயுள்ளது. இது, எதிரணியில் துடுப்பாடும் வீரர்களுக்கு அவரது பந்தை எதிர்கொள்வதில் அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு காரணியாக இருக்கும்.

அவர் இம்முறை ஐ.பி.எல் போட்டியின்போது விளையாடினாலும், ஒரு போட்டியில் கூடுதலாக 4 ஓவர்களே வீசியுள்ளார். எனினும், நீண்ட இடைவெளியில் இருந்துவிட்டு ஒரு நாள் போட்டிகளில் அதிகமான ஓவர்கள் வீசுவது சற்று கடினமானதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு நிலையில் தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்குகொள்வதன் மூலம் மாலிங்கவிற்கு தனது வேகத்தை அதிகரிக்க முடியுமாயின் அது தேசிய அணியில் தொடர்ந்து தனது இருப்பை வைத்துக்கொள்ள சாதகமான ஒன்றாக இருக்கும்.  

சம்பியன்ஸ் கிண்ண வீடியோக்களைப் பார்வையிட