2017 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி உள்ளடங்கலாக குழு A இலுள்ள அனைத்து அணிகளுடனான போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று குழு A இல் முதலிடத்தைப் பிடித்த வலிமை மிக்க இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியை இலகுவாக வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் சம்பியன்ஸ் கிண்ண கனவுகளை சிதறடித்து, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
கார்டிப், சோபியா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி வழமை போல் எதிரணியை துடுப்பாடுமாறு பணித்தது.
இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது
அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரமே இழந்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொனி பெயார்ஸ்டோவ் 43 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணிக்கு சிறந்த ஒரு ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். அதிரடி துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து துடுப்பாடக் களமிறங்கிய ஜோ ரூட் துரதிஷ்டவசமாக நான்கு ஓட்டங்களால் அரைச் சதத்தினை தவறவிட்டார்.
நிதானமாக துடுப்பாடிய அணித் தலைவர் இயன் மோர்கன் 33 ஓட்டங்களுடன் ஹசன் அலியின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் மற்றும் அணித் தலைவர் சப்ராஸ் அஹ்மதிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். வழமையாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்கும் பென் ஸ்டோக்சை பாகிஸ்தான் அணியினர் தமது அதிரடிப் பந்து வீச்சினால் கட்டுப்படுத்தினர். இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் வழமைக்கு மாறாக நிதானமாக துடுப்பாடிய போதிலும் 64 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 34 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். அத்துடன் இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்சுக்கு எவ்விதமான பவுண்டரிகளையோ சிக்ஸர்களையோ விளாச பாகிஸ்தான் அணியினர் இடமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் மொய்ன் அலி தவிர்ந்த ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்த போட்டித் தொடரில் அவர்கள் பெற்ற குறைந்த ஓட்டங்களாக 211 ஓட்டங்களைப் பதிவு செய்தனர்.
கடந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டியில், மூன்று விக்கெட்டுகள் மற்றும் அணித் தலைவர் சப்ராஸ் அஹ்மதுடன் பிரிக்கப்படாத 75 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாவதற்கு முக்கிய காரணியாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் இந்தப் போட்டியில் தசைப் பிடிப்பு உபாதை காரணமாக விளையாடாமை அணிக்கு பாரிய பின்னடைவாக இருந்த போதிலும் பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியினர் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தனர். அவருக்கு பதிலாக 25 வயதான மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ருமான் ரைஸ் இணைத்துக்கொள்ளப்பட்டார். அவர் முதல் போட்டியிலேயே 44 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதேநேரம், நேர்த்தியாக பந்து வீசிய ஹசன் அலி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜுனைட் கான் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
212 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அசார் அலி மற்றும் பாக்கர் சமான் ஆகியோர் அரைச் சதம் கடந்து முதல் விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். அசார் அலி, 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 76 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஜேக் போலின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையிலும் பாக்கர் சாமான், 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை ஆதில் ரஷிதின் சுழல் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்டலறினால் ஸ்டம்ப் செய்யப்பட்டும் ஆட்டமிழந்தனர்.
எனினும், அவர்களைத் தொடர்ந்து துடுப்பாடக் களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் முஹம்மத் ஹபீஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 38 மற்றும் 31 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாவதை உறுதிச் செய்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவு செய்யப்பட்டார்.
நாளைய தினம் (15) பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து – 211 (49.5) – ஜொனி பெயார்ஸ்டோவ் 43, ஜோ ரூட் 46, பென் ஸ்டோக்ஸ் 34, இயன் மோர்கன் 33, அலெக்ஸ் ஹேல்ஸ் 13, ஹசன் அலி 35/3, ஜுனைத் கான் 42/2, ருமான் ரைஸ் 44/2
பாகிஸ்தான் – 215/2 (37.1) – அசார் அலி 76, பாக்கர் சமான் 57, பாபர் அசாம் 38*, மொஹமத் ஹபீஸ் 31*, ஆதில் ரஷித் 54/1, ஜேக் போல் 37/1
முடிவு – பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி