கடந்த சில வாரங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவிய மழை மற்றும் சீரற்ற காலநிலையால் சுமார் 200 பேர் உயிரிழந்ததுடன் 140, 000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 545,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியுடனான கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியை திணறடித்த இலங்கையின் துடுப்பாட்டம்
குறித்த போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்து தெரிவிக்கையில், ”இந்த வரலாற்று வெற்றியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்பணிப்பதில் நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். ஏனெனில் கடந்த சில நாட்களாக வெள்ளப் பெருக்கு காரணமாக நிறைய உயிர்களை இழந்துள்ளோம். அந்த வகையில் துன்பத்தில் அவர்களை இந்த வெற்றியினால் சந்தோசப்படுத்துவதில் நாமும் மகிழ்ச்சி கொள்கின்றோம்” என்றார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரிலும் இதனை தெரிவித்திருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கின்றோம். உங்கள் அனைவரையும் நாம் நேசிக்கின்றோம். உங்களுடைய அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். மேலும் ஒரு போட்டி காத்திருக்கின்றது” என்றார்.
நேற்றைய போட்டியை பார்வையிட வருகை தந்திருந்த 18,000 கிரிக்கெட் ரசிகர்களில் 95% நடப்புச் சம்பியனான இந்திய அணிக்கே ஆதரவு தெரிவித்திருந்தனர். பப்பரே வாத்தியங்களை கொண்ட ஒரு சிறிய ரசிகர் கூட்டமே இலங்கை அணிக்காக ஆரவாரத்துடன் ஆதரவளித்திருந்தனர்.
நாங்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையடுவது போன்றிருந்தது. காதை கிழிக்கக் கூடிய அளவுக்கு ஆரவாரமாக இருந்தது. எங்களுக்கு தெரியும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி செல்லுமிடமெல்லாம் அவர்களுக்கு பின்னால் இருகின்றனர். நிச்சயமாக எங்களுக்கு ஆதரவளிக்க வந்த அனைத்து இலங்கை ரசிகர்களுக்கும் நன்றி கூற வேண்டும். இருந்தாலும் கொஞ்ச பேர்தான் இருந்தனர். எனினும், அவர்களால் முடிந்த அளவு எங்களுக்கு ஆதரவு அளித்தனர். உண்மையில் நாம் அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம். பப்பரே எங்கள் அடையாளம். நாங்கள் எங்கு விளையாடினாலும் அவர்கள் எங்களை தேடி வருகின்றனர். இலங்கையர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவர் என்று அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மேலும் தெரிவித்தார்.
இத்தொடரில் B குழுவிலுள்ள அடுத்த இரண்டு போட்டிகளான இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் திங்கட்கிழமையும் கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இக்குழுவில் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியினை வென்றுள்ளதால், அடுத்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.