தனது கெண்டைக்கால் உபாதை காரணமாக தென்னாபிரிக்க அணியுடனான இலங்கையின் சம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப் போட்டியில் விளையாடாமல் இருந்த அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், தற்போது பூரண குணமடைந்திருப்பதால் ஜூன் 8ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறும் மோதலில் விளையாட முழு உடற்தகுதியினையும் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>> உபுல் தரங்கவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை
அஞ்செலோ மெதிவ்ஸ், திங்கட்கிழமை (05) மதியம் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியின் பயிற்சி முகாமின் போது நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் நல்ல முடிவினைக் காட்டியிருந்தார். அதோடு, குறிப்பிட்ட பயிற்சி வேளையின்போது அவர் துடுப்பாட்ட வலைகளிற்குள் நின்று நீண்ட நேரம் பயிற்சிகள் எடுத்துக்கொண்டதோடு, இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக் போத்தசுடன் இணைந்து களத்தடுப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.
தனது உடற்தகுதி குறித்து கருத்து தெரிவித்த மெதிவ்ஸ்,
“நான் தற்போது முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளேன். எனினும், இப்போதைய நிலையில் பந்து வீசுவது சாத்தியமில்லை. கடந்த 6-8 மாதங்கள் எனக்கு அழுத்தமாக தருவாயாகக் காணப்பட்டிருந்தன. எனது பழைய நிலையினை பெறுவதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். அதற்கு எனது உடலும் போதிய அளவு ஒத்துழைத்திருந்தது.
இப்போது சவால்களை முகம்கொடுப்பதற்கான ஒரு வழி அமைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது எனது இலக்காக காணப்படுவது, எனக்கு தரப்பட்ட பொறுப்பில் முழுக்கவனத்தினையும் கொடுத்து செயற்படுவதே. கடந்த போட்டியில் கூட (நான் விளையாட ஓரளவு தகுதியாய் இருந்திருப்பினும்) விளையாடாமல் விடுவது சற்று கடினமாக காணப்பட்டிருந்தது. அவ்வாறு விளையாடுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று பயந்த காரணத்தினால் அணி முகாமைத்துவக் குழு ஆபத்துக்களைத் தவிர்க்கும் விதமாக நடந்து கொண்டிருந்தது. “ என்றார்.
[rev_slider ct17-dsccricket]
மந்த கதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டில் போட்டித்தடையினைப் பெற்றிருக்கும் உபுல் தரங்கவின் இடத்தினை சம்பியன்ஸ் கிண்ணத்தில் வரும் இரண்டு போட்டிகளிலும் நிரப்ப மெதிவ்ஸ் எதிர்பார்த்துள்ளார். மேலும், தென்னாபிரிக்க அணியுடனான கடந்த போட்டியில் 6 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்த குசல் ஜனித் பெரேரா அடுத்த போட்டிகளில் நிரோஷன் திக்வெல்லவுடன் சேர்ந்து ஆரம்பத் துடுப்பாட்டத்தினை கொண்டு செல்வார் என கூறப்படுகிறது.
>> இலங்கையின் படுதோல்விக்கு காரணமாக இருந்த அம்லா மற்றும் தாஹிர்
இன்னும் தரங்கவின் போட்டித்தடை பற்றியும் பேசியிருந்த மெதிவ்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
“அது மிகவும் பரிதாபகரமானது. எந்த வித தயவு தாட்சணைகளும் தரப்பட்டிருக்கவில்லை. அவ்வாறானதொரு குற்றத்திற்கு முழு அணியுமே பொறுப்பு. யார் அணித் தலைவராக இருப்பினும், அவருக்கு பின்னால் மைதானத்தில் நின்று ஆதரவு தர சக வீரர்கள் முயற்சிக்க வேண்டும். ஏனெனில், தலைவர் என்பவர் அதிக பொறுப்புக்களை சுமந்த ஒருவராகவும் அதிகம் வேலை செய்ய வேண்டிய ஒருவராகவும் காணப்படுகின்றார். இதனை நாங்கள் கடந்த காலங்களில் இனங்கண்டு இருப்பினும் சடுதியாக இம்முறை இவ்வாறானதொரு சம்பவம் எம்மை ஆட்கொண்டு விட்டது.
மேலும், தரங்க போன்ற ஒருவர் வெளியேறுவது துரதிஷ்டவசமானதே, ஏனெனில் அணியில் காணப்படும் முக்கிய வீரர்களில் அவரும் ஒருவர். அதோடு, தென்னாபிரிக்க அணியுடனான போட்டியிலும் அவர் சிறந்ததொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தற்போது இல்லாதது மிகவும் ஏமாற்றம் தருகின்றது. ஆனால், இப்படியொரு சம்பவம் இனிமேல் நடைபெறாது. “
30 வயதாகும் மெதிவ்ஸ் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அவுஸ்த்திரேலிய அணியுடனான தொடரில் இறுதியாக ஒரு நாள் போட்டியொன்றில் விளையாடியிருந்தார். தற்போது அவரது உள்ளடக்கம் நிச்சயமாக அணிக்கு மத்திய வரிசை துடுப்பாட்டத்திற்கு ஸ்திரத்தன்மையினையும், அனுபவ வளத்தினையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, இத்தொடரில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமாயின் நடப்புச் சம்பியன் இந்திய அணியினை வரும் போட்டியில் கட்டாயம் வீழ்த்த வேண்டிய நிலையில் இலங்கை அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.