அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ஷேன் வொட்சன் அனைத்துவகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக தங்களுடைய இறுதி லீக் போட்டியில் விளையாடியிருந்தது. இந்தப் போட்டியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இந்த பருவகாலம் நிறைவுற்ற நிலையில், ஷேன் வொட்சன் ஓய்வுபெறும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
>>முன்னணி வீரர்களின் வருகையை எதிர்பார்த்துள்ள மே.தீவுகள்!<<
ஷேன் வொட்சன் கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே அவர் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடியிருந்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்தும், 2018ம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்கியிருந்தது.
குறித்த ஆண்டு இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி ஷேன் வொட்சன் சதம் அடித்ததுடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றியது. அதுமாத்திரமின்றி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் வொட்சன் அபாரமாக ஆடியிருந்த போதும், துரதிஷ்டவசமாக கிண்ணம் மும்பை அணி வசமானது.
இதற்கு முன்னர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வொட்சன் விளையாடியிருந்தார். இதில், 2008ம் ஆண்டு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி கிண்ணம் வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் வொட்சன் இருந்தார்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு சற்று கடினமான ஆண்டாக ஷேன் வொட்சனுக்கு அமைந்திருந்தது. இவர் 11 போட்டிகளில் விளையாடி 299 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்ததுடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.
>>Video – முன்னணி வீரர்களின் வெளியேறல் LPL ரசிகர்களுக்கு ஏமாற்றமா?<<
ஷேன் வொட்சன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்றாலும், அடுத்த பருவகாலத்தில் அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் ஒருவராக இணைய வாய்ப்புள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷேன் வொட்சன் அவுஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேநேரம், முதற்தர போட்டிகளில் 9451 ஓட்டங்கள் மற்றும் 211 விக்கெட்டுகளை வொட்சன் வீழ்த்தியுள்ளதுடன், 143 T20 போட்டிகளில் விளையாடி, 8821 ஓட்டங்களையும், 216 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<