இலங்கை கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் கூட்டாக இன்று (10) உறுதிப்படுத்தியது.
தற்போது நடைபெற்று வருகின்ற லங்கா ப்ரீமியர் லீக் (LPL) நிறைவடைந்த இரண்டு நாட்களின் பின்னர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடைபெறவுள்ள இந்தத் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தென்னாபிரிக்காவில் T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி T20 தொடரை நிறைவு செய்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருநாள் தொடர் கைவிடப்பட்டது.
இலங்கை – தென்னாபிரிக்க தொடர் நடைபெறுவதில் சந்தேகம்?
தென்னாபிரிக்கா அணியில் உள்ள சில வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரை ஒத்திவைப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையும், தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையும் கூட்டாக அறிவித்தன. இதையடுத்து ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இங்கிலாந்து அணியினர் நாடு திரும்பினர்.
இதனிடையே, தென்னாபிரிக்கா அணி வீரர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேகம் வெளியிடப்பட்டது.
எதுஎவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், குறித்த டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Video: முக்கிய கட்டத்தினை நெருங்கியிருக்கும் LPL | Cricket Galatta LPL Special Epi 02
இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரில் இலங்கை அணி வீரர்களை பங்கேற்க செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவ பிரிவு நடத்திய மதிப்பீட்டைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் இலங்கை வீரர்களுக்கு பங்குபற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அணி திட்டமிட்டபடி தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழாமும் இலங்கை அணியுடன் செல்லவுள்ளது.
2021 ஜனவரி ஆரம்பத்தில் ஹம்பாந்தோட்டை வரும் இங்கிலாந்து அணி
இதேநேரம், விசேட சுகாதார நிபுணர் ஒருவரும் தென்னாபிரிக்காவிற்கு சென்று அங்குள்ள நிலைமையை மதிப்பிடுவார் எனவும், இலங்கை அணி மீண்டும் நாட்டை வந்தடைவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் இடைக்கால நிறைவேற்று அதிகாரி குகண்ட்ரி கோவேந்தர் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையில்,
”இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவின் தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தொடர்ச்சியான ஆதரவை தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை பாராட்டுகிறது. அவர்கள் எங்கள் திட்டங்கள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான எமது ஏற்பாடுகள் குறித்த முக்கியமான மற்றும் திறந்த கலந்துரையாடல்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டியிருந்தார்கள்.
குறித்த விவாதங்கள் இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் நடைபெற்றாலும், தென்னாபிரிக்கா மண்ணில் வெளிநாட்டு அணிகளை வரவழைத்து சுற்றுப்பயணங்களை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்ற சந்தேகத்தை நீக்கியதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எப்போதும்போல, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரொன்றில் விளையாடக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் இந்தத் தொடர் நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு புள்ளிகள் பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
Video: LPL தொடரில் பங்கேற்கும் நான்கு சகோதர ஜோடிகள்…!
எனவே, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றுமொரு கிரிக்கெட் தொடரொன்றை கண்டுகளிக்க ஆவலுடன் இருப்பார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்குப் பிறகு இரண்டு அணிகளும் விளையாடுகின்ற முதலாவது டெஸ்ட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான Betway டெஸ்ட் தொடர்
- முதலாவது டெஸ்ட் போட்டி – 26-30 டிசம்பர் 2020 (சுப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன்)
- இரண்டாவது டெஸ்ட் போட்டி – 03-07 ஜனவரி 2021 (இம்பீரியல் வொண்டரர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<