டயலொக் சம்பியன் கிண்ண சுற்றுப்போட்டியின் இவ்வாரத்திற்கான போட்டிகளில் கிரிஸ்டல் பலஸ் மற்றும் பொலிஸ் அணிகள் மோதிய போட்டியானது முதல் பாதியுடன் இடைநிறுத்தப்பட்டது. கடுமையான மழையிலும் முதல் பாதி நிறைவடைந்த நிலையில், இரு அணி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு போட்டியின் இரண்டாம் பாதியை தொடர முடியாமல்போனது பலத்த ஏமாற்றமாய் அமைந்தது.
நாவலப்பிடிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் கிரிஸ்டல் பலஸ் மற்றும் பொலிஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இரு அணி வீரர்களும் குறித்த நேரத்திற்கு மைதானத்தில் போட்டியை ஆரம்பிப்பதற்கு முன்னரான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர். எனினும் நடுவர்களின் வருகை தாமதமாகியதால் குறித்த நேரத்திற்கு ஆரம்பமாக வேண்டிய போட்டியானது 25 நிமிடங்கள் தாமதமாகியே ஆரம்பமாகியது.
போட்டியின் முதல்பாதி மாத்திரமே நடைபெற்றாலும் போட்டியில் முழுமையாக கிரிஸ்டல் பலஸ் அணியின் ஆதிக்கமே காணப்பட்டது. சிறந்த பந்து பரிமாற்றங்கள் முதற்கொண்டு அனைத்திலும் சிறப்பாக செயற்பட்ட கிரிஸ்டல் பலஸ் அணிக்கு முதல் பாதியிலே ஓரு கோலையேனும் பெற முடியாமல் போனது.
போட்டியின் 5ஆவது நிமிடத்தில் ரவ்ஸான் மூலம் வழங்கப்பட்ட பந்தை பெற்ற ஐய்ஸக் அபா, எதிரணியின் பெனால்டி எல்லையிருந்து கோலை நோக்கி உதைந்தார். எனினும் போதிய வேகம் காணப்படாமையினால் பந்தை கோல் காப்பாளர் இலகுவாக கைப்பற்ற முடிந்தது.
வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற கம்பளை மண்ணின் முதல் DCL போட்டி
கிரிஸ்டல் பலஸ் மற்றும் சொலிட் விளையாட்டுக் கழகங்கள் மோதிய டயலொக் சம்பியன்…
போட்டியின் 8ஆவது நிமிடத்தில் மழை குறுக்கிட்டபோதும் நடுவர் போட்டியை நிறுத்தவில்லை. நீண்ட நேரமாக சிறந்த பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்ட கிரிஸ்டல் பலஸ் அணிக்கு, போட்டியின் 15ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்திலிருந்து ப்ரீ கிக் வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற சமீர கிரிஷாந்த பந்தை கோல் கம்பத்தின் வலதுபக்க மூலையால் உள்ளனுப்ப முயன்றபோது, பொலிஸ் அணியின் கோல் காப்பாளர் சிறந்த முறையில் பாய்ந்து தட்டிவிட்டார்.
போட்டியின் முதல் பாதியில் பொலிஸ் அணி வீரர்கள் எதிரணியின் எல்லைக்குள் நுழைந்து, எதிரணிக்கு சவால் விடுக்க கடுமையாக முயன்றபோதும் கிரிஸ்டல் பலஸ் அணியின் பின்கள வீரர்கள் அம்முயற்சிகளை சிறந்த முறையில் தடுத்தனர்.
போட்டியின் 20ஆவது நிமிடத்தில் பாஸித் அஹமட் மூலம் இடதுபக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் ரவ்ஸானை நோக்கி வழங்கப்பட்ட பந்தை, அவ்ணியின் சிறந்த வீரராகக் கருதப்படும் ரவ்ஸானால் பந்தை பெற்று கோலாக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து ஜந்து நிமிடங்களின் பின்னர் மத்தியகளத்தின் வலது மூலையிலிருந்து ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் பெறப்பட்ட பந்தை காலீத் அஸ்மீல் சிறப்பாக கோல் காப்பாளரையும் தாண்டி இடதுபக்க பக்க மூலையால் பந்தை கோலினுள் உட்செலுத்த முயன்றார். எனினும் பொலிஸ் அணியின் பின்கள வீரர்கள் சிறந்த முறையில் பந்தை தடுத்தனர்.
போட்டியின் 28ஆவது நிமிடத்தில் மழை காரணமாக மைதானத்தின் எல்லைக்கோடுகளை மீண்டும் வரைவதற்காக போட்டி இடைநிறுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்கள் கடந்திருந்த போது, கிரிஸ்டல் பலஸ் அணியின் பின்கள வீரரான அய்டஜீ டுன்டே (Aydeji Tunde) மூலம் பொலிஸ் அணியின் பெனால்டி எல்லைக்குள் வழங்கப்பட்ட பந்தை, ஹீஸாமா கோலாக்க முயன்றபோதும் அவரால் அம்முயற்சியின் மூலம் தனது அணியை முன்னிலைப்படுத்த முடியாமல் போனது
பொலிஸ் அணியின் தலைவரான நிலந்த பதிரன போட்டியின் 38ஆவது நிமிடத்தில் உபாதைக்குள்ளாகி வெளியேறிச் சென்றது கிரிஸ்டல் பலஸ் அணியை மேலும் வலுப்படுத்தியது. என்றாலும் போட்டியின் இறுதி முயற்சியை பொலிஸ் அணியே மேற்கொண்டனது.
முதல் பாதியின் இறுதித்தருவாயில் பொலிஸ் அணியின் முன்கள வீரரான நுவன் பிரியங்கர கிரிஸ்டல் பலஸ் அணியின் பின்கள வீரர்களின் சவால்களை சிறந்த முறையில் முறியடித்து சென்று பந்தை பெனால்டி எல்லையின் வலதுபக்கத்திலிருந்த சதுரங்கவிற்கு வழங்கினார். பந்தை பெற்ற சதுரங்க, சிறந்த முறையில் பந்தை உள்ளனுப்பிய போதும் அதனை கோலாக்குவதற்கு எந்தவொரு வீரரும் பொனால்டி எல்லையில் காணப்படவில்லை.
இறுதியாக பொலிஸ் அணி மேற்கொண்ட முயற்சியுடன் போட்டியின் முதல் பாதி நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பாக சில நிமிடங்களே காணப்பட்டபோது மைதானத்தின் நிலைமை, போட்டியை தொடர்வதற்கு உகந்ததாக தென்படாத காரணத்தால் நடுவர் போட்டியை இடைநிறுத்தினார்.
மஞ்சள் அட்டை
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – தனுஷ பெரேரா 25’, குமார 43’
கொழும்பு கால்பந்து கழகம் எதிர் அப் கன்ட்ரீ லயன்ஸ்
அத்துடன் நேற்றைய தினம் (7) ஜயதிலக்க அரங்கில் நடைபெற்ற போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் – அப் கன்ட்ரீ லயன்ஸ் (Up Country Lions) அணியை எதிர் கொண்டு 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் 28ஆவது நிமிடத்தில் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின் மூலம் மூமாஸ் யபூ தனது அணியை போட்டியின் முதற்பாதி நிறைவின்போது 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலைப்படுத்தினார்.
முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 1 – 0 அப் கன்ட்ரீ லயன்ஸ் கால்பந்து கழகம்
முதற்பாதியிலே சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி கொழும்பு கால்பந்து அணியின் பின்கள வீரர்களை தடுமாறச் செய்த எதிரணியின் முன்கள வீரர்களை தடுப்பதற்காகவும், முதற்பாதியில் பெறப்பட்ட கோலின் மூலம் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்வதற்காகவும், 5 பின்கள வீரர்களுடன் இரண்டாம் பாதியிலே தடுத்தாடும் எண்ணத்துடன் களமிறங்கிய கொழும்பு அணிக்கு, போட்டியின் 54ஆவது நிமிடத்தில் முஹமட் பஸால் மூலமும், 68ஆவது நிமிடத்தில் சலன சமீர மூலமும் இரண்டு கோல்கள் பெறப்பட்டன. இரண்டாம் பாதியில் பெறப்பட்ட 2 கோல்களின் மூலம் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கொழும்பு கால்பந்தாட்ட கழகம் போட்டியை வென்றது.
ஆபிரிக்க கண்டத்தின் முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா
அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஆபிரிக்கா …
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்தாட்ட கழகம் – மூமாஸ் யபு 28’, முஹமட் பஸால் 54’, சலன சமீர 68’
மஞ்சள் அட்டை
கொழும்பு கால்பந்தாட்ட கழகம் – கவீஷ் பெர்னான்டு 24’
அப‘கன்ட்ரீ லயன்ஸ் – கெபோஸே 28’
மாத்தறை சிடி எதிர் நீர்கொழும்பு யூத்
மேலும் மாத்தறை சிடி மற்றும் நீர்கொழும்பு யூத் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் மாத்தறை சிடி அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியானது மாத்தறை கொடவில்ல அரங்கில் நடைபெற்றது.
கோல் பெற்றவர்கள்
மாத்தறை சிடி – நுவன் சஷிகபிரிய 52’, ப்ரையன் வீரப்புலி 68’, பி.பிரின்ஸ் 71’
நீர்கொழும்பு யூத் – திலிப் பீரிஸ் 90’
மஞ்சள் அட்டை
நீர்கொழும்பு யூத் – தம்மிக ராஜரத்னம், மினோன், கமல் சில்வா
நிவ் யங்ஸ் எதிர் இராணுவப்படை
இன்று (8) வென்னப்புவ ஸர்.அல்பர்ட் பீரீஸ் அரங்கில் (Sir.Albert Peris) நடைபெற்ற நிவ் யங்ஸ் மற்றும் இராணுவப்படை அணிகள் மோதிய போட்டியானது வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் கழகங்களுக்கிடையிலான போட்டித் தன்மை தற்போது குறைந்துள்ளது.