24 அணிகளுக்கு இடையிலான 15ஆவது ஐரோப்பிய கோப்பை (யூரோ) கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவில் நடந்த “சி” பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி-வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின.
3 முறை சாம்பியனான ஜெர்மனி அணி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் அடிப்பது அந்த அணிக்கு எளிதானதாக இருக்கவில்லை. வடக்கு அயர்லாந்தின் தடுப்பு ஆட்டக்காரர்களும், கோல்கீப்பர் மைக்கேல் மெக்கோவெர்னும் அபாரமாக செயற்பட்டு ஜெர்மனி அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டனர்.
முதல் பாதியின் தொடக்கத்தில் தோமஸ் முல்லர், மெசுட் ஒசில் ஆகியோர் அடித்த அபாரமான ஷாட்களை வடக்கு அயர்லாந்து அணியின் கோல் கீப்பர் மைக்கேல் மெக்கோவெர்ன் அருமையாகத் தடுத்து நிறுத்தினார். 30ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் மரியோ கோம்ஸ் இந்த கோலை அடித்தார்.
அதன் பின்னர் ஜெர்மனி அணியினர் பலமுறை எதிரணியின் கோல் எல்லையை நோக்கிப் பந்துடன் படையெடுத்தாலும், அதற்குத் தக்க பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை சாய்த்தது.
அரையிறுதியில் அமெரிக்காவை தகர்த்தது ஆர்ஜென்டினா
இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் போலந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை விரட்டியடித்தது. 54ஆவது நிமிடத்தில் போலந்து அணி வீரர் பாஸ்கிகோவ்ஸ்கி அடித்த கோல் அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
“சி” பிரிவில் ஜெர்மனி, போலந்து அணிகள் தலா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. கோல் விகிதாசாரம் அடிப்படையில் ஜெர்மனி அணி முதலிடத்தைப் பிடித்தது. போலந்து அணி 2ஆவது இடம் பெற்றது. வடக்கு அயர்லாந்து அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தை பிடித்தது. முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (நாக்–அவுட்) முன்னேறின. 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட உக்ரைன் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
“டி” பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்பெயின் அணி 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோல்விகண்டது. ஸ்பெயின் அணி 7ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் அல்வாரோ மோராடா இந்த கோலை திணித்தார். 45ஆவது நிமிடத்தில் குரோஷியா அணி பதில் கோல் அடித்தது. அந்த அணி வீரர் நிகோலா காலினிச் இந்த கோலை அடித்தார்.
இப்ராகிமோவிக் ஓய்வை அறிவிப்பு
79ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. அந்த பொன்னா வாய்ப்பை செர்ஜியோ ரமோஸ் கோலாக்க முயற்சித்தார். ஆனால் குரோஷியா கோல் கீப்பர் டேனியல் சுபாசிச் அதனை அபாரமாகத் தடுத்து முறியடித்தார். 89ஆவது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் இவான் பெரிசிச் அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றி கோலாக மாறியது. ஐரோப்பிய கால்பந்து போட்டியில் 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயின் அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் துருக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது. துருக்கி அணியில் புராக் இல்மாஸ் 10ஆவது நிமிடத்திலும், ஒசான் துபான் 65ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
“டி” பிரிவில் குரோஷியா அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. ஸ்பெயின் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்தைத் தனதாக்கியது. துருக்கி அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தைப் பெற்றது. குரோஷியா, ஸ்பெயின் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. துருக்கி அணி அடுத்த சுற்று வாய்ப்புக்காக மற்றப் பிரிவுகளில் 3ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளின் முடிவுக்காகக் காத்திருக்கிறது. செக் குடியரசு அணி ஒரு டிரா, 2 தோல்வியுடன் ஒரு புள்ளி பெற்று வெளியேறியது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்