ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாடத் தடை

642
Image courtesy - fotopress/Getty Images

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் மிகப் பெரிய போட்டியாளராகக் கருதப்படும் பார்சிலோனாவுடனான போட்டியில் மத்தியஸ்தரை தள்ளிவிட்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பானிய சுப்பர் கிண்ண முதல் கட்டத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் ரொனால்டோ விளையாடும் ரியல் மெட்ரிட் அணி, பார்சிலோனாவை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியபோதும் ரொனால்டோவின் மோசமான நடத்தை அவருக்கு பாதகமாக அமைந்தது.

ஸ்பெய்ன் ஜாம்பவான்களின் மிகப் பெரிய மோதலில் ரியல் மெட்ரிட் முன்னிலையில்

உலகின் முன்னணி போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் UEFA ஸ்பனிஷ்…

இந்த போட்டி 1-1 என சமநிலையில் இருந்தபோதே ரொனால்டோ 80 ஆவது நிமிடத்தில் கோலடித்து ரியல் மெட்ரிட்டை முன்னிலை பெறச் செய்தார். அப்போது அவர் தனது மேலாடையை (T-Shirt) கழற்றி பார்சிலோனா ஆதரவாளர்கள் முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

பார்சிலோனா முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸியை வெறுப்பேற்றும் வகையிலேயே அவர் இந்த செயலை செய்தார். கடந்த பருவகால லாலிகா போட்டியில் ரியல் மெட்ரிட்டுக்கு எதிராக கோல் அடித்த மெஸ்ஸி ரியல் மெட்ரிட் ஆதரவாளர்கள் முன் தனது மேலாடையை அகற்றியதற்கு பதலடியாகவே இந்த செயல் இருந்தது.  

போட்டி விதிமுறைப்படி இந்த நடத்தை தவறு என்பதால் ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்பின் சில நிமிடங்கள் கழித்து, பார்சிலோனாவின் பெனால்டி எல்லை பகுதியில் ரொனால்டோ வேண்டும் என்றே விழுந்ததாகக் கூறி மத்தியஸ்தரால் இரண்டாவது மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் களத்திலிருந்து வெளியேறும்படி மத்தியஸ்தர் ரொனால்டோவுக்கு உத்தரவிட்டார்.

இதன்போது ரொனால்டோ வேண்டும் என்று விழுந்தாரா அல்லது பார்சிலோனா பின்கள வீரரால் தள்ளப்பட்டாரா என்பது குறித்து குழப்பம் நிலவிய சூழலில் ரொனால்டோவுக்கும் மத்தியஸ்தருக்கும் இடையில் வாக்குவாதம் எற்பட்டது. கோபப்பட்ட ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியேறும் முன் மத்தியஸ்தர் ரிகார்டோ டி பார்கோஸை தள்ளிவிட்டார்.  

பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய பிரேசில்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தரவரிசை பட்டியலில் உலகக்..

சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட பின் வீரர் (ரொனால்டோ) தனது அதிருப்தியை காட்ட என்னை சற்று தள்ளிவிட்டார் என்று மத்தியஸ்தர் பர்கோஸ் போட்டிக்கு பின்னரான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது ஸ்பானிய கால்பந்து விதியின் வரைவு 96 மீறுவதாகும். அதில், கோபப்படாத நிலையிலும் மத்தியஸ்தரை இழுப்பது, தள்ளுவது அல்லது முட்டுவது அல்லது இது போன்ற நடத்தைகளுக்கு நான்கு முதல் 12 போட்டிகள் வரை தடை விதிக்க முடியும் என்று அந்த விதி குறிப்பிடுகிறது.   

இதன்படி, இந்த சரத்தின் குறைந்தபட்ச தண்டனையாக ரொனால்டோவுக்கு நான்கு போட்டிகளிலேயே தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதற்காக அவருக்கு ஏற்கனவே ஒரு தடை உள்ளது.  எனவே, மொத்தம் 5 போட்டிகளுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், 32 வயதுடைய ரொனால்டோவுக்கு இந்த தடைக்கு எதிராக 10 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய முடியும்.  

போர்துக்கல் நட்சத்திர வீரரான ரொனால்டோ, தடைக்காலத்தில் சம்பியன்ஸ் லீக்கில் விளையாட முடியும் என்றபோதும் செம்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ரியல் பெடிஸுக்கு எதிரான போட்டி வரை உள்நாட்டு போட்டிகளில் விளையாட முடியாது.  

எனினும், ரொனால்டோ மீதான இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக மெட்ரிட் அணி ஏற்கனவே சமிக்ஞை காட்டியுள்ளது.

இது ஒரு தண்டனையாக இல்லாத நிலையில் அட்டை காண்பிக்கப்பட்டது கடுமையானது. ரொனால்டோ வெளியேற்றப்பட்டது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்று ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளர் சினேடின் சிடேன் போட்டிக்கு பின்னர் குறிப்பிட்டார்.   

18 வயதின் கீழ் இலங்கை தேசிய கால்பந்து அணி விபரம்

ஈரானின் ஷிராஸ் நகரில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 45ஆவது..

ரொனால்டோவின் போட்டித் தடைக்கு அமைய அவரால் நாளை நடைபெறும் சுப்பர் கிண்ண இரண்டாம் கட்டப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வில் சிவப்பு அட்டை பெற்ற 10 ஆவது சந்தர்ப்பமாக அது இருந்தது. குறிப்பாக ஞாயிறன்று ரொனால்டோ இரு மஞ்சள் அட்டைகளையும் இரண்டு நிமிட இடைவெளியிலேயே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.