கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கழக மட்ட கால்பந்து போட்டிகளில் தனது 700ஆவது கோலை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஞாற்றுக்கிழமை (09) எவெர்ட்டன் அணிக்கு எதிராக இடம்பெற்ற பிரீமியர் லீக் போட்டியிலேயே, மாற்று வீரராக வந்து கோலடித்து இந்த சாதனையை ரொனால்டோ நிகழ்த்தினார்.
மன்செஸ்டரின் புதிய முகாமையாளரின் கீழ் தொடர்ந்து முதல் பதினொருவர் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்த ரொனால்டோ, எவெர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் அணியில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் முதலாம் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்ற நிலையில், அந்தோணி மார்ஷலுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு மாற்று வீரராக 29ஆவது நிமிடத்தில் களத்திற்குள் நுழைந்த ரொனால்டோ, வந்து 15 நிமிடங்களிலேயே கோலடித்து மன்செஸ்டர் யுனைடெட் அணியை வெற்றி பெற வைத்தார்.
37 வயதான ரொனால்டோ, தற்போது 943 கழக மட்ட போட்டிகளில் 700 கோல்களையும், 191 சர்வதேச போட்டிகளில் 117 கோல்களையும் அடித்துள்ளார். கடந்த வருடம் அயர்லாந்துக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச போட்டியொன்றில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், சர்வதேச ஆண்கள் கால்பந்து போட்டிகளில் அதிக கோலடித்த வீரராக (111) ரொனால்டோ சாதனை படைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது யுனைடெட் அணியோடு ஐரோப்பா லீக்கில் விளையாடும் ரொனால்டோ, சம்பியன்ஸ் லீக் கால்ப்பந்து வரலாற்றில் அதிக கோலடித்த (140) வீரராகவும் வலம் வருகின்றார். இவருக்கு அடுத்த படியாக மெஸ்ஸி (127) இருக்கிறார்.
இதில் ரொனால்டோவுக்கு அடுத்த படியாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்காக விளையாடும் மெஸ்ஸி, பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகங்களுக்காக 691 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் இவ்விரு ஜாம்பவான்களிடையே மீண்டும் ஒரு சாதனை மோதல் ஆரம்பித்துள்ளது என கால்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்தோனேசிய உயிரிழப்பு சம்பவத்திற்கு ஐரோப்பிய அணிகள் அஞ்சலி
- தனது 17 வருட கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜென்டீன வீரர்
- WATCH – மேலும் ஒரு கிண்ணத்தை நோக்கி படையெடுக்கும் சிட்டி வீரர்கள் | FOOTBALL ULAGAM
- 125 உயிர்களை பலிகொண்ட இந்தோனேசிய கால்பந்து போட்டி
கடந்த 2002 இல் 17 வயது வீரராக போர்த்துக்கலின் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்காக தனது முதல் தொழில்முறை கால்பந்து போட்டியை விளையாட தொடங்கிய ரொனால்டோ, அவ்வணிக்காக 31 போட்டிகளில் 5 கோல்களை அடித்தார். பின்னர் ஐரோப்பியாவில் பலம் பொருந்திய அணிகளான ஸ்பெயினின் ரியல் மெட்ரிட், இத்தாலியின் ஜுவெண்டஸ் மற்றும் தற்போது இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகின்றார்.
இதில் ரியல் மெட்ரிட் அணிக்காக 438 போட்டிகளில் 450 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, ஜுவெண்டஸ் அணிக்காக 134 போட்டிகளில் 101 கோல்களை அடித்துள்ளார். தற்போது யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, அவ்வணிக்காக 340 போட்டிகளில் 144 கோல்களை அடித்துள்ளார்.
கடந்த 20 வருடகாலமாக கிட்டத்தட்ட ஒரு பருவகாலத்திற்கு 35 கோல்கள் வீதம் அடித்து வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது இருக்கும் பல வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார். 37 வயதில் அநேகமான கால்பந்து வீரர்கள் தொழில் முறை கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வெடுக்கும் நிலையில், தற்போதும் போட்டிகரமான கால்பந்து ஆட்டங்களில் ரொனால்டோ விளையாடி வருவது மட்டுமில்லாமல், சாதனைகளும் படைப்பது வியப்புக்குரியதே!
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<